திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -102

-கி.சாயிநாதன்

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது நூற்று இரண்டாம் திருப்பதி...

102. பிரமன் யாகம் செய்த திருக்கண்டம்  

அன்பெனும் கயிறு கொண்டு  அகண்டத்தை உரலில் கட்டி,
தாயெனும் பாசம் கொண்டு மாயனுக்கு பால் கொடுத்து,
சேயெனும் வாஞ்சையிலே சேர்த்தணைத்து,
மாலவனை, திருக்கண்டம் நின்றவனை
மகனாக மடியில் இட்டவளே, மாதா யசோதா!
கண்ணன் அவள் உன் பேச்சைத் தட்ட மாட்டான்
நானும் கொஞ்சம் கொஞ்சிவிட வரச் சொல்வாயே!

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள தேவப்பிரயாகையே திருக்கண்டம் என்னும் கடிநகராகும். இத்திருத்தலத்தின் சிறப்புகள் குறித்து பத்ம புராணம், மத்ஸ்ய புராணம், கூர்ம புராணம், அக்னி புராணங்களில் கூறப்பட்டுள்ளது. மிகச் சிறந்த யாகத்தை பிரம்மதேவர் இங்கு தொடங்கியதால், இவ்விடம் பிரயாகை என்றும், திருமாலை தேவனாகக் கருதி இவ்விடத்தில் யாகம் செய்யப்பட்டதால், தேவப்பிரயாகை என்றும் அழைக்கப்படுகிறது. தேவர்கள் அனைவரும் பிரம்ம முகூர்த்த வேளையில் திருமாலை வணங்குவதால் தேவப்பிரயாகை என்று இத்தலம் பெயர் பெற்றது.

இத்தலத்தில் உள்ள ஆலமரம் ஊழிக் காலத்திலும் அழியாமல் இருக்கும் என்றும், அதன் இலையில்தான் திருமால் குழந்தையாகப் பள்ளி கொள்வார் என்றும் மத்ஸ்ய புராணம் கூறுகிறது. இத்தலத்தின் மூலவரை ஆதிசங்கரர் ஸ்தாபித்தார். ரகுநாத்ஜி என்றும் பெருமாள் அழைக்கப்படுகிறார். 

இரு நதிகள் சங்கமிக்கும் தேவப்பிரயாகை

ஹரித்வாரில் இருந்து பத்ரிநாத் செல்லும் வழியில் 5 புண்ணிய சங்கமங்கள் உள்ளன. அலக்நந்தா (பச்சை) நதியுடன் பாகீரதி (பழுப்பு) நதி சங்கமமாகும் தேவப்பிரயாகை, தேவப்பிரயாகையும் நந்தாகினியும் சங்கமிக்கும் ருத்ரப் பிரயாகை, அலக்நந்தாவுடன் பிண்டர் நதி சங்கமிக்கும் கர்ணப்பிரயாகை, கருடகங்கா என்ற தௌலி நதி சேரும் விஷ்ணுப் பிரயாகை, இவற்றுடன் நந்தாகினி நதி சேரும் நந்தப் பிரயாகை என்று பஞ்ச பிரயாகைகள் உள்ளன. சார்தாம் யாத்திரை மேற்கொள்பவர்கள் இங்கு நீராடிச் செல்வது வழக்கம். 

மூலவர்: நீலமேகப் பெருமாள், ரகுநாத்ஜி (நின்ற திருக்கோலம் – கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்: புண்டரீகவல்லி, விமலா
விமானம்: மங்கள விமானம்
தீர்த்தம்: மங்கள தீர்த்தம், கங்கை, பிரயாகை
மங்களா சாசனம்: பெரியாழ்வார்.

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:

காலை 9.00 மணி முதல் மாலை 9.00 மணி வரை

எப்படிச் செல்வது?

உத்தரகண்ட் மாநிலம், தெக்ரி கார்வால் மாவட்டத்தில் உள்ள தேவப்பிரயாகை,  ரிஷிகேஷத்திலிருந்து பத்ரிநாத் செல்லும் மலைப்பாதையில் 70 கி.மீ. தொலைவில் உள்ளது. இதுவே திருக்கண்டம் என்னும் கடிநகராகப் புகழப்படுகிறது. 

சேவிப்பதன் பலன்கள்:

தேவப்பிரயாகையில் அன்னதானம் செய்வது நற்பலன்களைத் தரும் என்று கூறப்படுகிறது.  கவலை, பயம், விரக்தி விலகவும், கஷ்டங்கள் தொலையவும், வியாதிகள் தீரவும், வந்து வணங்க வேண்டிய தலம் ஆகும். வாழ்க்கையில் முக்தி அடைந்துவிட வேண்டும் என்று நினைப்பவர்கள் வந்து வழிபட வேண்டிய தலமும் கூட.  7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்கள் வர வேண்டிய தலம் இது.

$$$

Leave a comment