-குமார் ஷோபனா, இரா.சத்தியப்பிரியன்
இசைஞானி இளையராஜாவின் இசைமழையில் வெளியாகி இருக்கும் தமிழ்த் திரைப்படம் ‘ஜமா’ கூத்துக்கலையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்த இரு பார்வைகள் இங்கே...

1. ஜமா: துணிச்சலான திரைப்பட முயற்சி
-குமார் ஷோபனா
இயக்குநர் திரு. பாரி இளவழகன் எழுதி இயக்கிய ‘ஜமா’ திரைப்படம் ஒரு நல்ல அனுபவம்.
முழுக்க முழுக்க தெருக்கூத்து எனும் கலையின் அடிப்படையில் வைத்து எழுதப்பட்ட இந்தக் கதையை யோசித்து எழுதுவதற்கும், அதை திரைப்படமாக இயக்குவதற்கும், அதைத் தயாரிப்பதற்கும் ஒரு தனி தில்லு வேண்டும்.
பாரி இளவழகன், மர்ம தேசம் சேத்தன் ஆகியோரின் நடிப்பும், அதனுடன் கூட நடித்த அத்துணை மண் மணம் மாறாத நடிகர்களுடைய நடிப்பும் அவ்வளவு நன்றாக இருந்தது பார்ப்பதற்கு.
கொங்கு நாட்டில் தெருக்கூத்து எனும் கான்செப்ட் சுத்தமாக கிடையாது. முதன்முதலில் தெருக்கூத்தை நான் மக்கள் தொலைக்காட்சியில் தான் பார்த்தேன். தொடர்ந்து தொலைக்காட்சியில் பலமுறை பார்த்திருந்தாலும் நேரில் ஒரே ஒரு முறை தான் பார்த்திருக்கிறேன்.
தெருக்கூத்தின் பங்கேற்பாளர்கள் அநேகமாக விவசாயி அல்லது தொழில் கலைஞர்கள் குடும்பத்தில் இருந்து வருபவர்களாகத் தான் இருக்கிறார்கள். இவர்களை எது தொடர்ந்து இப்படி ஈடுபட வைக்கிறது என்பது எங்களுக்கெல்லாம் ஒரு புரியாத புதிர்.
சென்னையின் limelightஇல் நாடகம் நடிக்கும் நடிகர்களைக் காட்டிலும் பல நூறு மடங்கு உழைப்பு தேவைப்படும் இந்த தெருக்கூத்தில் இவர்களுக்குக் கிடைக்கும் appreciation என்பது நான்கைந்து சதவிகிதம் தான்.
விடிய விடிய நடக்கும் தெருக்கூத்துக்களும் உண்டு.
நிற்க!
“கோயில் சடங்காகக் கூத்து நடத்தப்படுவதால்தான் இக்கலை இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. கிராம மக்களது தெய்வ நம்பிக்கையாகவும் பொழுதுபோக்காகவும் அவர்களை ஒன்றுபடுத்துகிற பொது நிகழ்வாகவும் கூத்து நிகழ்த்தப்படுகிறது. மக்களுக்கு நன்கு தெரிந்த பாரதக் கதையின் பல நிகழ்வுகளைக் கதையாக வாசிக்கக் கேட்டும் கூத்தாகப் பார்த்தும் கோயில் சடங்கை நிறைவு செய்கிறார்கள்” என்கிறார் முனைவர் மு.சுதந்திரமுத்து அவர்கள்.
“கூத்தின் ஒவ்வொரு பகுதியிலும் தெய்வ வழிபாடு செய்வது நடைமுறையாக உள்ளது. கூத்து தொடங்குவதற்கு முன் தெய்வ வேடமிடும் கூத்தர்களுக்குக் கோயிலில் சிறப்புச் செய்வார்கள்” -என்று தொடர்கிறார் சுதந்திரமுத்து அவர்கள்.
இந்தக் கூத்தர் என்னும் சொல்லை எங்கோ கேட்ட மாதிரி இருக்கிறது அல்லவா?
சிவபெருமான்தான் இருப்பதிலேயே பெரிய கூத்தன்.
தீர்த்தனை, சிவனை, சிவலோகனை, மூர்த்தியை, முதல் ஆய ஒருவனை, பார்த்தனுக்கு அருள்செய்த சிற்றம்பலக் கூத்தனை, கொடியேன் மறந்து உய்வனோ?
என்று திருக்குறுந்தொகையில் கேட்கிறார் திருநாவுக்கு அரசர்!
“கூட்டும், இசையும், கூத்தின் முறையும் காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ?” இன்று ஈசன் பாடுவதாக கண்ணதாசனின் வரிகள் திருவிளையாடலில் பேசும்!
முடிந்தால் குடும்பத்துடன் உட்கார்ந்து இந்த ‘ஜமா’ திரைப்படத்தை அமேசான் பிரைம் தளத்தில் பாருங்கள்.
$$$
2. யதார்த்தமான படம் தான், ஆனால்…
-இரா.சத்தியப்பிரியன்
ஜமா நல்ல படம் என்பதில் வேற்று சிந்தனைக்கு இடமில்லை. இருந்தாலும் படத்தில் உறுத்திய விஷயங்கள்.
1. தனது தந்தையின் மரணத்திற்குக் காரணமான சேத்தனின் ஜமாவில் தான் நடிப்பைத் தொடர்வதாக பாரி கூறுவதும் அதற்கு அவரது தந்தை சம்மதிப்பதும் சரியான கோணத்தில் சொல்லப்படவில்லை. அப்பா அத்தனை அவமானப்படுத்தப்பட்ட பிறகும் அதே இடத்தில் மகன் தொடர்வது என்பது எப்படி என்று தெரியவில்லை.
2. முதல் பாதியில் பழைய கே. பாலச்சந்தர் படங்களில் வருவது போல, அலுவலகம், வீடு, கோவில், ஓட்டல் இவற்றின் பின்னணியை மாற்றாமல் காட்சியை வேறுபடுத்த சிகரம் நடிகர்களின் உடைகளை மட்டும் மாற்றுவார். முதல் காட்சியில் கதாநாயகி காய் நறுக்கிக் கொண்டிருந்தால் அடுத்த காட்சியில் இஸ்திரி போட்டுக் கொண்டிருப்பாள். இதே உத்தியை முதல் பாதி முழுவதும் பாரி பயன்படுத்தி ‘லோ பட்ஜட்’ படம் என்பதை பிரேமுக்கு பிரேம் காட்டி சலிப்பைத் தந்திருப்பார் . முதல் பாதி நகரவே இல்லை என்றே சொல்ல வேண்டும்.
3. கதை எதை நோக்கி நகர்கிறது என்று முதல் பாதியில் தெரியவே இல்லை. கி.ராஜநாராயணனின் ‘கோமதி’ கதையின் சாயல் இருக்கவே படம் ஆவணப்படமாகி விடுமோ என்ற பீதியைக் கிளப்பியது.
4. கதாநாயகி ஆம்பிளை என்பது யார் என்று கூறும் காட்சியில் எட்டாம் வகுப்பு பெண் மனப்பாடச்செய்யுள் ஒப்பிப்பதைப் போல இருந்தது.
5. ஏதோ ஓர் இடத்தில் சிம்மத்தின் ‘கௌரவம்’ படத்தின் சாயல் அடித்தது,
6. குந்தி காட்சி முடிந்த பின்னர் சேத்தன் காலில் விழுந்து இறப்பதாகக் காட்டியிருக்க வேண்டாம். ஆனால் ஆணவம் மரணத்தில்தான் அழியும் என்று இயக்குநர் நம்புகிறார் போல.
ஓகே, இதையெல்லாம் மீறி படத்தில் இருந்த யதார்த்தம் அருமையாக இருந்தது, ஒரு பக்கா கமர்ஷியல் இயக்குநரிடம் கொடுத்திருந்தால் (குறிப்பாக கே.எஸ்.ரவிக்குமார், பி.வாசு) இறுதியில் குந்தி ஆடும் காட்சியை பிரமாண்டமாக எடுக்கிறேன் பேர்வழி என்று கிளம்ப, இளையராஜா பிஜிஎம்மைக் கிழி கிழி என்று கிழித்து ‘மாரியம்மா காளியம்மா’என்று பாட்டு போட்டு பக்கா கிளைமேக்ஸ் ஒன்றை எடுத்திருப்பார்கள், அவ்வாறு செய்யாமல் முடித்ததே படத்தின் நிறை.
ரொம்பநாள் கழித்து ஒரிஜினல் ராஜாவின் அந்த டூயட் பாடல் அள்ளுகிறது. மற்றபடி படத்திற்குத் தேவையான இசையைக் கொடுத்து ராஜா அடக்கி வாசித்திருக்கிறார்.
இன்னொரு சந்தோஷமான விஷயம், நமது இதிகாசங்கள் தமிழக பாடநூல் நிறுவனத்தில் காப்பாற்றப்படாமல் போனாலும் இது போன்ற கூத்துகள் காப்பாற்றி வருவது பெரு மகிழ்ச்சியை அளிக்கிறது.
$$$