-கி.சாயிநாதன்
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது நூறாம் திருப்பதி...

100. முக்தி அருளும் சாளக்கிராமம்
மழலை மனதைக் கொண்டவன் கண்ணன்! கோபியர் மனதைத் திருடிக் கொண்டவன்! கோவர்த்தனமலையைத் தூக்கிச் சுமந்தவன்! சாளக்கிராமமாய் கண்டகியில் கிடந்தவன் – அந்த முக்திநாத்தின் மூர்த்தி அப்பனை அணுகிப் பணிவோமே!
நேபாள தேசத்தில், கண்டகி நதிக்கரையில் இருக்கும் திருத்தலம் இது. பெருமாளை நோக்கி தவமிருந்த கண்டகி நதி, தனது கர்ப்பத்தில் பெருமாள் இருக்க வேண்டும் என்று பிரார்த்தித்தாள். கண்டகியின் வேண்டுதலை ஏற்ற பெருமாள், “நான் சாளக்கிராம ரூபத்தில் உன் மடியிலேயே இருப்பேன்” என்று வரமளித்தார். அதன்படி, கண்டகி நதியில் விளையும் சாளக்கிராமக் கற்களையே நாம் இல்லங்களில் வைத்து பெருமாளின் ரூபமாக பூஜிக்கிறோம்.
அண்னபூர்ணா மலை, தௌலகிரி மலைகளுக்கு இடையே இத்தலம் அமைந்துள்ளது. இது ஸ்வயம் வ்யக்த ஷேத்திரங்களூள் ஒன்று (மற்றவை: திருவரங்கம், நாங்குநேரி, ஸ்ரீமுஷ்ணம், திருவேங்கடம், புஷ்கரம், நைமிசாரண்யம், பத்ரிநாத், முக்திநாத்) . கஜேந்திர மோட்சம் நிகழ்ந்த தலமும் இதுவே.
மூலவர்: ஸ்ரீ மூர்த்தி (அமர்ந்த திருக்கோலம்- வடக்கே திருமுக மண்டலம்)
தாயார்: ஸ்ரீதேவி நாச்சியார்
விமானம்: ககந விமானம்
தீர்த்தம்: சக்ர தீர்த்தம், கண்டகி நதி.
மங்களா சாசனம்: பெரியாழ்வார், திருமங்கையாழ்வார்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:
காலை 5.00 மணி முதல் 8.30 மணி வரை
மாலை 4.00 மணி முதல் 7.00 மணி வரை
எப்படிச் செல்வது?
நேபாள நாட்டில் காத்மண்டு நகருக்கு வடமேற்கே 275 கி.மீ தொலைவில் உள்ள தலம். iதன் தற்போதைய பெயர் முக்திநாத். போக்ராவில் இருந்து ஜோம் ஜோம் சென்று அங்கிருந்து இக்கோயிலுக்குச் செல்லலாம்.
சேவிப்பதன் பலன்கள்:
செய்த பாவங்கள் கரையும், முக்தி கிடைக்கும் இத்தலத்திற்குச் சென்று வழிபட்டால். எல்லா வேண்டுதல்களும் நிறைவேற்றி தரக் கூடிய தலமாகும். 5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களும், 7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களும் வந்து வணங்க வேண்டிய தலம் இது.
$$$