-கி.சாயிநாதன்
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது தொன்னூற்றெட்டாம் திருப்பதி...

98. ஸ்ரீராமன் பிறந்த ஜன்மபூமி அயோத்தி
கோசலையின் மடியினிலே, சரயு நதிக்கரையினிலே தவழ்ந்தவனே தசரதன் மகனே ஸ்ரீராமா! கல்லைப் பெண்ணாக்கி, வனவாசம் தனதாக்கி, வில்லைத் துணையாக்கி வீரம் புரிந்தவனே ஜெயராமா! இல்லை உனைப்போலே இயம்ப வார்த்தையில்லை, சரணம் என நான் வந்தேன் சரயுநதிக் கரைதனுக்கே!
108 வைணவ திவ்ய தேசங்களில், உத்தரபிரதேச மாநிலம், பைசாபாத் மாவட்டத்தில் உள்ள அயோத்தியில் உள்ள ரகுநாயகன் கோயில் பிரதானமாகப் போற்றப்படுகிறது. முக்தி அளிக்கும் 7 தலங்களில் (அயோத்தி, காசி, மதுரா, மாயா (ஹரித்வார்), துவாரகை, காஞ்சி, அவந்தி (உஜ்ஜைனி)) ஆகியவற்றில் அயோத்தியே முதன்மையாகக் கருதப்படுகிறது. ஸ்ரீராம ஜன்மபூமி இது.


பிரம்மதேவர் உலகைப் படைத்தபோது, திருமால் வைகுண்டத்தில் ஒரு பகுதியை அவருக்குக் கொடுத்தார். அந்தப் பகுதியை உலகத்தின் ஒரு பகுதியாக்கி தன் மகன் ஸ்வாயம்புவ மனுவுக்குக் கொடுத்தார் பிரம்மதேவர். அந்த இடமே அயோத்தி என்று அழைக்கப்படுகிறது. ஸ்வாயம்புவ மனுவின் புதல்வர் இஷ்வாகு, இவரது பெயரில் உருவானது இஷ்வாகு வம்சம். மனுவின் வம்சத்தில் வந்த ஹரீஷ் சந்திரா, சாகர், பகீரதன் ஆகியோர் அயோத்தி மாநகரை ஆண்டனர். அவர்களின் காலத்துக்குப் பிறகு பகீரதனின் பேரன் தசரதன் ஆட்சி புரிந்து வந்தார். தசரதருக்கு கௌசல்யா, கைகேயி, சுமித்திரை என்று மூன்று மனைவிகள். இவர்களில் கௌசல்யா- தசரதனின் புதல்வர் ஸ்ரீராமனே ‘ஒரு இல், ஒரு வில், ஒரு சொல்’ என வாழ்ந்த மரியாதா புருஷோத்தமன். ராமாயண இதிகாசம் இவரது வாழ்க்கையைக் கூறுகிறது.
இலங்கையில் ராவணனை வென்ற பிறகு அயோத்தி திரும்பிய சீதாராமர், பட்டாபிஷேகத்திற்குப் பிறகு சரயு நதிக்கரையில் ரகுநாயகராக அருள்பாலிக்கிறார். அயோத்தி முழுக்க கோயில்கள் தான். இவற்றில் அவசியம் காண வேண்டியவை: ஸ்ரீ ராம ஜன்மபூமி (இங்கு புதிய ஆலயம் பிரமாண்டமாக அமைக்கப்படுகிறது), கனகபவன், பரதபவன், ஹனுமன் கார்ஹி, ராம்கோட்.
மூலவர்: ரகுநாயகன், சக்கரவர்த்தி திருமகன் (அமர்ந்த திருக்கோலம்- வடக்கே திருமுக மண்டலம்)
தாயார்: சீதா பிராட்டி
விமானம்: புஷ்கல விமானம்
தீர்த்தம்: பரமபத ஸத்ய புஷ்கரிணி, சரயூ நதி
மங்களா சாசனம்: பெரியாழ்வார், குலசேகர ஆழ்வார், தொண்டரடி பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:
காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை
மாலை 2.00 மணி முதல் 7.00 மணி வரை
எப்படிச் செல்வது?
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அயோத்தி உள்ளது. காசி – வாராணசி லக்னோ ரயில்வே மார்க்கத்தில் உள்ளது. பைசாபாத் ரயில்வே ஸ்டேஷன். இத்தலத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது. தற்போது மத்திய அரசின் ஆன்மிகத்தல வளர்ச்சித் திட்டத்தில் அயோத்தி செல்வதற்கான பல்வேறு போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
சேவிப்பதன் பலன்கள்:
இத்தலத்திற்கு வந்து ஸ்ரீராமனை தரிசித்தால் பூர்வ ஜன்ம பாவங்கள் கழிவதோடு மறு ஜென்மம் என்பது இல்லை என்பது ஐதீகம். 8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்கள் வந்து வணங்க வேண்டிய தலம் இது.
$$$