சங்கப்பணியில் சமர்ப்பணமான சுந்தர.ஜோதிஜி- முன்னுரை

-கா.சீனிவாசன்

விஜயபாரதம் முன்னாள் ஆசிரியர் அமரர் சுந்தர.ஜோதி அவர்களின் வாழ்க்கை வரலாற்று  நூல் அண்மையில் வெளியாகி இருக்கிறது. இந்நூலை, ஆர்.எஸ்.எஸ். மூத்த பிரசாரகர் திரு. சா.சீனிவாசன் அழகாகத் தொகுத்திருக்கிறார். அந்நூலின் அறிமுகமாக,  அவரது முன்னுரை இடம் பெறுகிறது...

“நாட்டினுக்கெனவே இறைவன் படைத்தான்;
வேறொரு இன்பம் விரும்போமே!”

-என்று சங்க ஷாகாவில் பாடும் பாடலின் வடிவமாக வாழ்த்து காட்டியவர்  ‘ஜோதிஜி’ என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்ட திரு. சுந்தர.ஜோதி. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த பிரசாரகராக இருந்து அண்மையில் மறைந்த அவரது வாழ்வே ஒரு தவம் போன்றது. இவரைப் போன்ற பலரது அரும் பணிகளால் தான் இன்று தமிழகத்தில் சங்கம் தழைத்தோங்கி இருக்கிறது.

தமிழகத்தில் திராவிட அலை கடுமையாக இருந்த 1960 காலகட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். ஷாகா எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. அப்போது தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் வந்த சங்கத்தின் இரண்டாம் தலைவர் பரமபூஜனீய ஸ்ரீ குருஜி கோல்வல்கர் ஷாகா எண்ணிக்கை 100யைக் கூட தொடவில்லை என்பதை அறிந்து,  ஒரு பைட்டக்கில் “தமிழகத்தில் சங்கம் வளருமா?” என்று கேள்வி எழுப்பினார்.

உடனடியாக அந்த பைட்டக்கில் (ஆலோசனை அமர்வு) இருந்த திரு. சிவராம் ஜோக்லேகர் என்ற பிரசாரகர்  “வளரும்” என்று உறுதியாகச் சொன்னார். அதற்கு ஸ்ரீ குருஜி,  “எதை வைத்துச் சொல்கிறீர்கள்?” என்றார்.

“நாங்கள் எல்லாம் இருக்கிறோமே. இதை விட்டு ஓடி விடவில்லையே?” என்று பதிலளித்தார் சிவராம்ஜி (இவர் மஹாராஷ்டிர மாநிலத்தில் இருந்து சங்கத்தின் முழுநேர ஊழியராக தமிழகம் வந்தவர்). அதைக் கேட்டு ஸ்ரீ குருஜி மிகவும் மகிழ்ந்தார்.

திருச்சியில் 1979இல் தமிழ்நாடு பிராந்த ஷிபிர் நடைபெற்றது. அந்த ஷிபிரில் சங்கத்தின் மூன்றாவது தலைவர் பரமபூஜனீய ஸ்ரீ பாளாசாகேப் தேவரஸ்ஜி கலந்து கொண்டார். அவர் பேசும்போது,  “தமிழக சங்க வேலையில் உடைக்க முடியாமல் இருந்த பாறை உடையத் தொடங்கி விட்டது” (Tamil Nadu was a hard nut to crack but has started cracking) என்று குறிப்பிட்டார்.

ஆம். இன்று பாறை உடைந்து தூள் தூளாகி விட்டது. இதற்கு பல பிரசாரகர்கள், ஸ்வயம்சேவகர்கள், காரியகர்த்தர்கள் தங்கள் வாழ்க்கையில் செய்த பல தியாகங்களும், சாகசங்களும்தான் காரணம். ஆனால் அவர்கள் அவற்றைப்  பெரிதாக வெளிப்படுத்திக் கொள்ளும் வழக்கம் இல்லாததால், அந்த தியாகங்கள் அடுத்த தலைமுறையினருக்கு தெரியாமலே போய்விடுகின்றன. ஆகையால் இது போன்ற புத்தகங்கள் வெளிவரும்போது, இது அடுத்த தலைமுறை காரியகர்த்தர்கள்  மனதில் நல்ல பண்புகளை உருவாக்கும்.

மறைந்த பிரசாரகர்கள் பற்றி புத்தகம் எழுதும்போது, சில கஷ்டங்கள் ஏற்படுகின்றன. அவர் காலத்தில் அவருடன் வேலை செய்த பலர் காலமாகி இருப்பார்கள்; அல்லது சிலர் வயதாகி சம்பவங்கள் மறந்த நிலைக்கு ஆளாகி இருப்பார்கள். ஜோதிஜி பற்றி புத்தகம் எழுதும் போது, அதைப் போன்ற நிலை ஏற்பட்டது. ஆனால் ஒரு மகிழ்ச்சிக்குரிய செய்தி என்னவென்றால், ஜோதிஜி  ஒரு பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்தவர் என்பதால், தன் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களைத் தொகுத்து  ‘எனது ஆசான் வீரபாகுஜி’ என்ற தலைப்பில்  இணையதளத்தில் எழுதியிருந்தார். அவருடனான தனது மறக்க முடியாத சில சம்பவங்களை நினைவுகூர்ந்து எழுதினார். ஆனால் அவரது உடல்நிலை ஒத்துழைக்காததால் அது முற்றுப்பெறவில்லை. இருந்தாலும் இணையதளத்தில் உள்ள அவரது சில கட்டுரைகள், இந்தப் புத்தகம் வெளிவருவதற்கு உறுதுணையாக அமைந்தன.

சங்க அறிமுகமே இல்லாத செங்கம், செய்யாறு போன்ற ஊர்களில் அவர் சங்கத்தை ஆரம்பித்து, வெற்றிக் கொடி நாட்டியது அசாதாரணமான விஷயம். வேலூர் கோட்டைக் கோயில் சிலை அமைப்பு நிகழ்வு மாபெரும் வீர சாகசம். இதுபோன்ற பல நிகழ்வுகளை ஜோதிஜியின் வாழ்வில் அறியும்போது மகிழ்கிறோம்; நெகிழ்கிறோம்.

ஜோதிஜி பிரசாரக்காக (ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முழுநேர ஊழியர்) வருவதற்கு அவருடைய தந்தை சுந்தரம்ஜி முக்கிய பங்காற்றியுள்ளார் என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். தன் ஒரே மகன் சங்க  பிரசாரக்காக தொடர்ந்து பணி செய்ய அவருடைய தந்தை அளித்த ஆக்கமும், ஊக்கமும் மிகவும் ஆச்சரியப்பட வைப்பவை. அவர் தன் மகனுக்கு எழுதிய கடிதத்தில் ஒரு முதிர்ந்த, பண்பட்ட காரியகர்த்தரின் மனநிலை காணப்படுகிறது.

ஜோதிஜியுடன் அடியேன் சுமார் 11 ஆண்டுகள் பயணித்திருக்கிறேன். அவர் ‘விஜயபாரதம்’ வார இதழின் ஆசிரியராக இருந்தபோது, நான் அதன் அலுவலக மேலாளராக இருந்தேன். பிறகு நான் சென்னை ஆர்.எஸ்.எஸ். காரியாலய பிரமுக்காக (அலுவலக நிர்வாகி) இருந்த போது, அவர் சக காரியாலய பிரமுக்காக இருந்தார். இருந்தாலும் அவருடைய மிகப் பெரிய ஆளுமையை இந்தப் புத்தகம் எழுதுவதற்காக தகவல்களைத் தொகுத்தபோதுதான்,  நானும் தெரிந்து கொண்டேன்.

அவருடன் பழகிய பலரும் அவரைப் பற்றிய தனது அனுபவங்களை அளித்துள்ளார்கள். அவற்றின் தொகுப்பே இந்தப் புத்தகம்.

திருவாளர்கள் செங்கம் தீர்த்தகிரி, ராஜா, பன்னீர்செல்வம், சீனிவாசன்,  லதா ரவிசந்திரன்,  வத்சலா, திருவண்ணாமலை ராஜேந்திரன், வேலூர்  கோமதி நவீன், வந்தவாசி ஜில்லா சங்கசாலக் ராமநாதன், ராமேஸ்வரம் முனியசாமி, ராமநாதபுரம் சுப.நாகராஜ், காரைக்குடி சூரிய நாராயணன், சாத்தையன், சத்யமூர்த்தி, சிங்கம்புணரி பாலசுப்பிரமணியன், ஜீவா, பரமக்குடி பி.கே.நாகராஜன், சுந்தர.லட்சுமணன்,  ‘தியாகபூமி’ முன்னாள் ஆசிரியர் எஸ்.எஸ்.மகாதேவன்,  ‘ஒரே நாடு’ ஆசிரியர் நம்பி நாராயணன், கோ.சனகன்,  ‘விஜயபாரதம்’ ஆசிரியர் பெ.வெள்ளத்துரை, முன்னாள் ஆசிரியர் குரு.சிவகுமார், ஜோதிஜியின் நெருங்கிய நண்பர் திருநின்றவூர்  ரவிகுமார், பத்திரிகையாளர்கள் வ.மு.முரளி,  சந்திர.பிரவீண்குமார், வட தமிழக பிராந்த தர்ம ஜாக்ரண் பிரமுக் சரவணன், சென்னை காரியாலய பிரமுக் கிருஷ்ணராஜ், ஜோதிஜியின் சித்தப்பா மகன் ராஜதுரை ஆகியோர் தங்கள் அனுபவங்களைத் தெரிவித்துள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜோதிஜி பற்றி புத்தகம் எழுத எனக்கு வாய்ப்பளித்த சங்க அதிகாரிகளுக்கும் நன்றி.  அந்த லட்சிய வீரரைப் பற்றி ஒரு புத்தகத்தைத் தொகுத்து எழுதுவதற்கு நான் பாக்கியம் செய்திருக்கிறேன் என்றே நினைக்கிறேன்.

கா.சீனிவாசன் / சென்னை / 22.06.2024

***

நூல் குறித்த விவரம்:

சங்கப்பணியில் சமர்ப்பணமான சுந்தர.ஜோதிஜி
தொகுப்பு: கா.சீனிவாசன்.
80 பக்கங்கள்; விலை: ரூ. 75.
வெளியீடு:  விஜயபாரதம் பிரசுரம், சென்னை-31.
தொலைபேசி எண்: 89391 49466

இணையம் முலமாக வாங்க: https://vijayabharathambooks.com/books/sundara-jothi-ji/

$$$

Leave a comment