திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -96

-கி.சாயிநாதன்

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது தொன்னூற்றாறாம் திருப்பதி...

வடநாட்டு திருப்பதிகள்

96. பணக்காரசாமி அருளும் திருவேங்கடம்

திருப்பதி மலையில் நிற்பவனே!
வேண்டும் வரத்தைக் கொடுப்பவனே!
வேண்டியதை வேண்டி பெற்றுக் கொண்டேன்
வேண்டும் உந்தன் தரிசனமே!

புல்லாங்குழலின் ஓசையிலே
கோபியர் மனதைக் கவர்ந்தவனே!
மகனே இல்லா தாயார்க்கு
மகனாய் வந்து அருள்பவனே!

வெண்ணெய் தின்று தீர்ந்தபின்னே
உலகைக் காட்டிச் சிரித்தவனே!
என்னை நானே உணர்ந்த பின்னே
வேண்டுவன வேங்கடவன் பாதங்களே!

சகஸ்ரநாம கீர்த்தனையும்,
ஆழ்வார் திவ்யப் பாடல்களும்,
வாழ்வார் பாடி வாழ்ந்தாலும்
வேண்டுவன வேங்கடவன் பாதங்களே!

பணக்காரசாமி என்று அழைக்கப்படுபவர் திருமலைவாசன். குபேரனிடம் கடன் பட்ட பெருமாளின் கடன் தீர்க்க பக்தகோடிகள் நாள்தோறும் கோடிக்க கணக்கான காணிக்கையை இங்குள்ள ஸ்ரீவாரி உண்டியலில் செலுத்துகின்றனர். இங்குள்ள ஏழு மலைகளும் புனிதமானவை.

ஹிரண்யாக்‌ஷனை சம்ஹரித்த பிறகு வராஹப் பெருமாள் இங்கு ஓய்வெடுத்தார். எனவே இது ஆதிவராஹ ஷேத்திரமாகும். பிருகு முனிவர் பெருமாளின் மார்பில் உதைத்ததால் லட்சுமி கோல்ஹாப்பூர் சென்றாள். அவளை மீண்டும் அடைய திருமால் இங்கு வந்து தவம் செய்தார் என்கிறது தலபுராணம். இது ஸ்வயவ்யக்த ஷேத்திரம். ஆசாரியர் ராமானுஜரால் கோயில் வழிபாடு முறைப்படுத்தப்பட்ட தலம் இது.

முற்காலத் தமிழகம் வடவேங்கடம் (திருமலை) வரை விரவி இருந்தது. மொழிவாரி மாநிலங்கள் பிரிப்பின்போது திருப்பதி ஆந்திரத்திற்குச் சென்றுவிட்டது. எனினும் தமிழகத்துடன் மிகவும் உணர்வுப்பூர்வமாகவும் பக்திப்பூர்வமாகவும் நெருங்கிய தலம் இது. இங்கு கூடும் பக்தகோடிகள் தடையின்றி தரிசனம் செய்வதற்காக தினசரி அரைமணிநேரம் மட்டுமே கோயில் நடை சாத்தப்படுகிறது.

மூலவர்: மலையப்ப சுவாமி, திருவேங்கடமுடையான், ஸ்ரீநிவாசன் (நின்ற திருக்கோலம் – கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்: அலர்மேலுமங்கை, பத்மாவதி தாயார்
ஆகமம்: வைகானஸம்
விமானம்: ஆனந்த நிலையம் விமானம்
தீர்த்தம்: நித்ய புஷ்கரிணி, சுவாமி புஷ்கரிணி, கோனேரி தீர்த்தம், பாபவிநாசினி, ஆகாசகங்கை
மங்களா சாசனம்: மதுரகவியாழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகர ஆழ்வார், திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார்.

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:

காலை 3.00 மணி முதல் மறுநாள்
விடிகாலை 1.00 மணி வரை

எப்படிச் செல்வது?

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் திருமலை திருப்பதி உள்ளது. சென்னை – மும்பை ரயில் பாதையில் ரேணிகுண்டா ரயில் நிலையத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் இருப்பது திருப்பதி.  மேலேஇருப்பதால் மேல் திருப்பதி. மேல் திருப்பதியில் மூலவர் திருவேங்கடமுடையான்.  தமிழகத்தின் அனைத்து நகரங்களில் இருந்தும் திருப்பதிக்கு பேருந்து வசதி உண்டு.

சேவிப்பதன் பலன்கள்:

வேண்டியதை வேண்டியபடி கொடுக்கும் பெருமாள்; எல்லோரும் சென்று தரிசித்து மனமார திருப்பதி ஆண்டவனை பிரார்த்தனை செய்தால் வேண்டியதை தருவார். எல்லா எண்களில் பிறந்தவர்களும் வந்து தரிசிக்க வேண்டிய தலம் இது.

$$$

Leave a comment