-கி.சாயிநாதன்
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது தொன்னூற்று நான்காம் திருப்பதி...

94. கண்ணனின் குடும்பம் அருள்பாலிக்கும் திருவல்லிக்கேணி
நின்றவனே, நெடுமாலே, பார்த்தசாரதி பெருமானே! கண்டவனே, வேதங்களைக் கடைந்தவனே, மேருமலை காப்பவனே, அருள்பவனே, கண் கண்ட தெய்வமே! காண்பனே உனை தினம் திருவல்லிக்கேணியிலே! மாலவனே, மாயவனே, மார்கழியின் மாதவனே! ஆயவனே, தூயவனே, துளசிமாலை அணிந்தவனே! முக்காலம் தெரிந்தவனே, வேங்கடத்தின் மூலவனே! எக்காலமும் உனைத் தேடி வருவேனே திருவல்லிக்கேணிக்கே! கிடந்தவனே, கிடைக்காதவனே, மூவுஉலகையும் அளந்தவனே! கோவிந்தனே, கோகுலத்து வாசுதேவனே! பரந்தாமனே, பக்தவத்சலனே, சடகோபனே! பணிந்துனைக் கிடப்பேனே பார்த்தசாரதிப் பெருமானே! அமுதனே, ஆனந்தனே, தொழுதார் துணை நிற்பவனே! தேனே, தேனமுதே, தேவகி மைந்தனே! கோபாலனே, கோதண்ட ராமனே, கற்பகவிருட்சமே! கொண்டேன் ஆசை காலமெல்லாம், காணவருவேனே திருவல்லிக்கேணிக்கே!
சுமதி மகாராஜாவின் பிரார்த்தனையை ஏற்று இரு கரங்களுடன் வேங்கடகிருஷ்ணனாக திருவேங்கடமுடையான் தரிசனம் அளித்தார். இங்குள்ள கருவறையில் நெடிதுயுர்ந்த திருமேனியனாக, அழகான மீசையுடன், இடுப்பில் சாட்டையுடன், குடும்ப சமேதரராக வேங்கடகிருஷ்ணன் அருள் பாலிக்கிறார். ருக்குமணி, பலராமன், பிரத்யும்னன், அநிருத்தன் ஆகியோருடன் கண்ணன் காட்சி அளிப்பது இங்கு மட்டுமே. இதன் அருலில் இருக்கும் திருமயிலையில் பேயாழ்வார் அவதாரத் தலம் உள்ளது.
மூலவர்: வேங்கடகிருஷ்ணன் (நின்ற திருக்கோலம் – கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்: ருக்குமணி
உற்சவர்: பார்த்தசாரதி
விமானம்: ஆனந்த விமானம்
தீர்த்தம்: கைரவிணி புஷ்கரிணி
மங்களா சாசனம்: திருமங்கையாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:
காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை
மாலை 4.00 மணி முதல் 09.00 மணி வரை
எப்படிச் செல்வது?
சென்னை கடற்கரைக்கு அருகே உள்ளது இத்தலம். பஸ் வசதியும், ரயில் வசதியும் உண்டு.
சேவிப்பதன் பலன்கள்:
பகைவர்களை வெல்வதற்கும், தீர்க்க முடியாத பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும், ஆபத்தில் இருந்து தப்பிப்பதற்கும், வேலையில் மேலதிகாரிகளால் இடையூறு ஏற்படாமல் இருப்பதற்கும், இங்கு வந்து பார்த்தசாரதிப் பெருமாளுக்கு சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்ய மிகுந்த நலம் உண்டாகும். 6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களும், 5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களும், 7, 25 தேதிகளில் பிறந்தவர்களும் வந்து வணங்க வேண்டிய திருத்தலம் இது.
$$$