-பி.ஆர்.மகாதேவன்
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #40

40. அன்று பெய்த மழையில்…
இங்குதான் பல வீடுகள் இருந்தன-
செயற்கைப் பேரிடருக்குச் சற்று முன்பு வரை.
தேநீர் அருந்தியபடி
இயற்கைக் காட்சிகளைப் பார்த்து ரசிப்பதற்கான
பிரம்பு நாற்காலிகள் போடப்பட்ட
பால்கனிகள் இருந்தன.
குளிர்பதனமே தேவைப்படாத
படுக்கையறைகள் இருந்தன.
வெதுவெதுப்புக்குத் தேவையான எல்லாமும் இருந்தன.
ஓடி விளையாடும் பாப்பாக்கள் இருந்தனர்.
அவர்களுடன் கூடி விளையாடும் நாய்களும் இருந்தன.
ஓய்வூதியம் பெறும் முதியவர்கள்
ஊர்ந்து செல்லும் வாகனங்களை
உட்கார்ந்து வேடிக்கை பார்க்க சாளரங்கள் இருந்தன.
சரிந்து விழும் மண் மீது கட்டப்பட்டிருந்தன;
சரிந்து விழுந்தால்
சத்தம் கூட எழுப்ப முடியால் அழுத்தும்
சமாதிச் சுவர்கள் கொண்டு கட்டப்பட்டிருந்தன.
*
அந்த வீடுகளில்
ஒழுங்காக வரி கட்டுபவர்கள் இருந்தனர்.
அந்த வீடுகளில் இருந்தவர்கள்
சமீபத்திய தேர்தலிலும்
ஜனநாயகக் கடமையை செவ்வனே ஆற்றியிருந்தனர்.
வீடு வீடாகச் சென்று
வாக்கு சேகரித்த தொண்டர்களும் அங்கு இருந்தனர்.
(வெற்றி பெற்றவர்கள் யாரும் அங்கு இல்லை).
விதிமுறைகளை மீறி வீடு கட்ட அனுமதித்தவர்களில்
விதி விலக்காக ஓரிருவர் இருந்திருக்கக் கூடும்.
ஆனால் விதிமுறைகளை மீறிக் கட்டியவர்கள்
அனைவரும் அதில் இருந்தனர்.
ததும்பி நிற்கும் முலையை நினைவுறுத்தும் மலை
தாய்மையின் பிறப்பிடமே.
அதில் வளர்ந்து நின்ற மரங்கள்
பல பறவைகளின் வீடாகவும் கூடாகவும் இருந்தன.
(அவை அகால மழையிலும் பறந்து தப்பிவிட்டன).
அங்கு பெய்த மழை
அத்தனை பயிர்களையும் விளைவிக்கக் கூடியதுதான்.
மலையில் மழை பெய்யும்போது
மண் அரிப்பு ஏற்படும் என்பது
ஆரம்பப் பள்ளிக் குழந்தைக்குக் கூடத் தெரியும்.
(கட்டிய பொறியாளருக்கு மட்டும் தெரியவில்லை).
செயற்கைப் பேரிடர் நேராமல் தடுக்க துறைகளுண்டு.
சிறப்பு நிதி ஒதுக்கீடும் அவற்றுக்குண்டு.
இயற்கையைக் காக்கும் போராளிகள்
சூழலியல் காவலர்கள் எல்லாரும் உண்டு.
பாதுகாப்பான இடங்களில் இருந்து செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்கள்,
பரபரப்புச் செய்திகள் வெளியிடும் காட்சி ஊடகங்கள்,
குத்தாட்டக் கலை நிகழ்ச்சிகள் நடத்தி
நிதி சேகரிக்கும் கும்பல்கள்,
எல்லாரும் அந்த ஊரில் உண்டு.
எனினும்
அந்த இடத்தில்
அவர்கள் இருந்திருக்க வாய்ப்பு அதி குறைவே.
ஒன்றிய அரசு போதிய நிதி ஒதுக்காததே காரணம்
என்ற உண்மையை மட்டுமே இப்போது பேச வேண்டும்.
மற்றபடி இந்த இக்கட்டான நேரத்தில்
யாரும் அரசியல் செய்யாதீர்கள் என்று
ஆட்சியாளர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
பிணங்களை சீக்கிரம் கண்டுபிடிக்க,
அதிக மோப்ப நாய்களை வளர்க்க
அடுத்த பட்ஜெட்டில் அதிக நிதி
நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ஒதுக்கப்படும்.
(அடுத்தவர்களின் தவறுகளில் இருந்து
கற்றுக் கொள்வதுதானே
அறிவாளிக்கு அழகு?)
அடித்துச் செல்லப்பட்ட வீடுகள்
அங்கேயே மீண்டும் கட்டித் தரப்படும் என்ற
புதிய தேர்தல் வாக்குறுதி எல்லா கட்சிகளாலும்
ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
வழக்கம் போலவே
வரிகள் முறையாக வசூலிக்கப்படும்.
வழக்கம் போலவே
அடுத்த தேர்தலும் வரும்.
வழக்கம் போலவே
மாக்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றுவார்கள்.
இப்போது வென்ற கட்சியின்
இப்போது வென்ற வேட்பாளர்
முன்பைவிட அமோக வாக்குகள் வித்தியாசத்தில்
வழக்கம் போல் வெற்றி பெறுவார்.
வழக்கம் போலவே
மலையில் மீண்டும்
இப்போது போலவே மழையும் பெய்யும்.
தெய்வங்களின் சொந்த தேசங்களை
சாத்தான்களின் கையில் தூக்கிக் கொடுத்தால்
இயற்கை மழைகள் எல்லாம்
செயற்கைப் பேரிடராகத்தான் முடியும்.
சூழலியல் தெய்வங்கள்
சற்றைக்கு முன்பு கூட
பதற்றத்துடன் சிறகடித்து சிறகடித்து
அலறியபடிதான் இருந்திருக்கும்.
இங்கிருக்காதீர்… போய்விடுங்கள்
இங்கிருக்காதீர்… போய்விடுங்கள் என்று
கேளாச் செவிகளை கையறு நிலையில்,
கண்களில் நீர் கசிய தள்ளி நின்று,
கை கட்டி வேடிக்கை பார்ப்பது தவிர
வேறென்ன செய்ய முடியும்?
தெய்வங்கள் கருணை காட்டலாம்
இயற்கை எப்படிக் காட்டும்?
$$$