-கி.சாயிநாதன்
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது தொன்னூற்று இரண்டாம் திருப்பதி...

92. பூமகளை மடியில் அமர்த்திய திருவிடவெந்தை
தாமரை மலர் மீது அமர்ந்தவளே! தங்க மழை சங்கரர்க்கு பெய்தவளே! சிங்க மகம் கொண்டவனைக் கொண்டவளே! ரங்கனவன் உடன் இருக்கும் நாயகியே! திருவிடந்தை வராகன் மடி அமர்ந்தவளே! வரும் மடந்தை மணமாக அருள்பவளே! திருமகளே, கோமளவல்லி என்ற பெயர் கொண்டவளே! திருப்பாதம் பணிந்து விட்டேன், அருள்புரிவாயே பெருமாளாய்!
பலி அரசனுக்கு அருள்புரிய, பூதேவியை தனது இட்து மடியில் அமர்த்தி வராஹப் பெருமாள் காட்சி அளித்தார். பூமகளை இடது மடியில் அமர்த்தியதால் இடவெந்தை என்று பெயர் பெற்றது. காலவ மகரிஷியின் 360 பெண்களையும் தினமும் மணம் புரிந்த பெருமாள் அவர்களை அகிலவல்லி என்ற நாச்சியாராக்கினார். எனவே இவருக்கு நித்ய கல்யாணப் பெருமாள் என்று பெயர் ஏற்பட்டது என்கிறது தலபுராணம்.
மூலவர்: லட்சுமிவராஹப் பெருமாள் (நின்ற திருக்கோலம் – கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்: அகிலவல்லி, கோமளவல்லி
உற்சவர்: நித்யகல்யாணப் பெருமாள்
விமானம்: கல்யாண விமானம்
தீர்த்தம்: கல்யாண தீர்த்தம், வராஹ தீர்த்தம்
மங்களா சாசனம்: திருமங்கையாழ்வார். மணவாள மாமுனிகளும் பாடியுள்ளார்.

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:
காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை
மாலை 4.00 மணி முதல் 09.00 மணி வரை
எப்படிச் செல்வது?
சென்னைக்கு தெற்கே 42 கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம். சென்னையிலிருந்து மகாபலிபுரம் செல்லும் சாலையில் 40 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.
சேவிப்பதன் பலன்கள்:
முன்னோர் செய்த பாவங்கள் நீங்கவும், திருமணத்தடை நீங்கவும் வர வேண்டிய தலம் ஆகும். 9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்கள் வந்து வணங்க வேண்டிய தலம் இது.
$$$