திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -91

-கி.சாயிநாதன்

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது தொன்னூற்று ஒன்றாம் திருப்பதி...

91. வால்மீகி வழிபட்ட திருநீர்மலை

வேதங்கள் நான்கும் வேங்கடன் அருளும்
கோலங்கள் நான்கும் கொண்டது திருநீர்மலையே!
சாபங்கள் நீங்கி சபரி கண்ட
ஸ்ரீராமன் நின்றமலை திருநீர்மலையே!

நீர் வண்ணப் பெருமாள் திருமங்கை ஆழ்வாரை
கார் கொண்ட மேகத்தால் காக்கவைத்த மலை,
நிலம் வேண்டி உலகை அளந்தானை
தினம் வேண்டி பக்தர்கள் வரும் மலை திருநீர்மலையே!

அன்புக்கு இனியானை, அமுதைக் கடைந்தானை,
முனிவர்க்கு முதலானை, மூவுலகைக் காத்தானை,
பார்த்தனுக்குப் பிரியவனை, ஞான நரசிம்மனை,
ஸ்ரீரங்கத்துக் கிடந்தவனை கொண்டமலை திருநீர்மலையே!

வேண்டி தவம் இருந்த வியாசர்க்கும்
வேள்விதனை செய்த வால்மீகிக்கும்
நான்கு கோலத்தில் காட்சி தந்த
நாராயணன் வசிக்கும் மலை திருநீர்மலையே!

காண்டவ வனம் எனப்படும் இவ்விடத்தில் பல முனிவர்கள் 600 ஆண்டுகள் தவம் செய்தனர். அவர்களுக்கு தனது கருணையை (நீர்மை) உணர்த்திய பெருமாள், இந்த சேத்திரத்தை நீர்மலையாக உருவாக்கினார். வால்மீகி முனிவர் இங்கு மலை மீதுள்ள பெருமாளை சேவித்து கீழே இறங்கி புஷ்கரிணியில் தீர்த்தமாடியபோது, சீதா, லட்சுமண, பரத சத்ருகன, ஹனுமன் சகிதமாக ஸ்ரீராமர் தரிசனம் தந்தார் என்கிறது தலபுராணம். இங்கு ஒரே தலத்தில் நான்கு விதமாக பெருமாள் தரிசனம் தருகிறார்.

மலையடிவாரக் கோயில்:
மூலவர்: நீலமுகில்வண்ணன், ரங்கநாதர் (நின்ற திருக்கோலம் – கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்: அணிமாமலர்மங்கை, ரங்கநாயகி  
ஆகமம்: வைகானஸம்
விமானம்: தோயகிரி விமானம்
தீர்த்தம்: மணிகர்ணிக, ஸ்வர்ண, ஷீர, காருண்ய சித்த புஷ்கரிணிகள்.
தல விருட்சம்: வெப்பால மரம்
மங்களா சாசனம்: திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார்

மலைமேல் கோயில்:
மூலவர்: சாந்த நரசிம்மர் (இருந்தான் – வீற்றிருந்த திருக்கோலம்- கிழக்கே திருமுக மண்டலம்)
மூலவர்2: ரங்கநாதர் (கிடந்தான் – மாணிக்க சயனம்- தெற்கே திருமுக மண்டலம்)
தாயார்: ரங்கநாயகி
மூலவர்3: திரிவிக்கிரமன் (நடந்தான் – நின்ற திருக்கோலம்- கிழக்கே திருமுக மண்டலம்)

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:

காலை 8.00 மணி முதல் 12.00 மணி வரை
மாலை 4.00 மணி முதல் 08.00 மணி வரை

 எப்படிச் செல்வது?

சென்னைக்கு தென்மேற்கே 25 கி.மீ. தொலைவில் உள்ளது இத்திருத்தலம். இங்கு செல்வதற்கு பஸ் வசதி உண்டு. சென்னை- தாம்பரம் ரயில் மார்க்கத்தில், பல்லாவரத்தில் இருந்து தென்மேற்கே 6 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.

சேவிப்பதன் பலன்கள்:

திருமணத்தடை நீங்கவும், கடன் தொல்லை நீங்கவும், குடும்ப பிரச்னைகளைத் தீர்க்கவும் இங்கு வந்து பெருமாளை தரிசிக்க நிவர்த்தி கிடைக்கும்.  2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களும்:, 1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களும் வரவேண்டிய தலம் இது. இத்தலத்தின் குளத்தில் நீராடி பெருமாலை வழிபட்டால், சித்தத் தெளிவு கிடைக்கும்.

$$$

Leave a comment