திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -90

-கி.சாயிநாதன்

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது தொன்னூறாம் திருப்பதி...

90.  வள்ளலாரின் வலி நீக்கிய திருவெவ்வுள்  

நொடி போகும் முன் நோய் போகுமே!
மனம் நோகும்முன் அருள் கிடைக்குமே – என
வழிதேடி நானும் திருவெவ்வுள் வந்தேன்!
விழி திறந்து காப்பாயே வீரராகவப் பெருமாளே!

தொண்டை மண்டலத்தில் உள்ள முக்கியமான திவ்யதேசம் இது. இங்குள்ள ஹிருதாபதனி தீர்த்தக் குளத்தில் நீராடினால் பிணிகள் பலவும் விலகும். சாலிஹோத்திரர் என்ற முனிவர் இங்கு வந்து தவம் புரிந்தார். அவரிடம் கிழவராக வந்து விளையாடல் நிகழ்த்திய பெருமாள் எங்கு படுப்பது என்று (எவ்வுள்?) கேட்க, தான் படுத்திருந்த இடத்தை முனிவர் காட்டினாராம். அவருக்கு பெருமாள் காட்சி அளித்தார். எனவே திருவெவ்வுள் என்று பெயர் பெற்ற இத்தலம், காலப்போக்கில் திருவள்ளூர் என்று மருவிவிட்டது.

வள்ளலாரின் வயிற்றுவலியை நீக்கியவர் என்பதால் வைத்திய வீர்ராகவர் என்றும் அழைக்கப்படுகிறார். வள்ளலார் இப்பெருமாள் மீது பாடல்களைப் பாடியுள்ளார்.

மூலவர்: ஸ்ரீ வீரராகவப் பெருமாள் (புஜங்க சயன திருக்கோலம் – கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்: கனகவல்லி, வசுமதி
ஆகமம்: பாஞ்சராத்ரம்
உற்சவர்: வீரராகவர்
விமானம்: விஜயகோடி விமானம்
தீர்த்தம்: ஹிருதாபதனி தீர்த்தம்
மங்களா சாசனம்: திருமங்கையாழ்வார், திருமழிசை ஆழ்வார்.

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:

காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை
மாலை 4.00 மணி முதல் 09.00 மணி வரை

எப்படிச் செல்வது?

சென்னைக்கு மேற்கே சுமார் 44 கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம் (திருவள்ளூர்). சென்னையில் இருந்து அடிக்கடி பஸ் வசதியும், ரயில் வசதியும் (சென்னை- அரக்கோணம் பிரதான ரயில்பாதையில் உள்ளது) உண்டு.

சேவிப்பதன் பலன்கள்:

பழைய ஜென்மத்தின் பாவங்கள் போக, தீராத நோய் விலக, திருமணத் தடை நீங்க அமாவாசை தோறும் இங்கு வந்து திருக்குளத்தில் வெல்லம் வாங்கிக் கரைத்து, அந்த நீரை தலையில் தெளித்து இப்பெருமாளை வணங்க நினைத்தது நடக்கும். 2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களும், 8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களும் வந்து வணங்க வேண்டிய தலம் இது.

$$$

Leave a comment