-கி.சாயிநாதன்
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது எண்பத்தொன்பதாம் திருப்பதி...

89. மகாலட்சுமி நின்ற தலம் திருநின்றவூர்
கடலரசன் தன்மகனைக் கண்டஊர்… பா அரசன் பாடாமல் சென்ற ஊர்… நல் அரசன் ஸ்ரீராமன் சீதையோடு நின்ற ஊர்… பக்தவச்சலன் அருள்கின்ற திருநின்ற ஊரே!
சமுத்திரராஜனிடம் கோபம் கொண்ட மகாலட்சுமி அங்கிருந்து வந்து இந்த தலத்தில் தங்கிவிட்டாள். திரு (லட்சுமி) நின்ற தலம் என்பதால் திருநின்றவூர் என்று பெயர் பெற்றது. சமுத்திரராஜன் இங்கு வந்து “என்னைப் பெற்ற தாயே” என்று அழைத்து மன்றாடியும் மகாலட்சுமியின் கோபம் தணியவில்லை பிறகு சமுத்திர்ராஜனின் பிரார்த்தனைக்காக, பெருமாளே மகாலட்சுமியை சமாதானம் செய்தார் என்கிறது தலபுராணம்.
மூலவர்: பக்தவத்சலப் பெருமாள் (நின்ற திருக்கோலம்- கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்: என்னைப் பெற்ற தாயார், ஸுதாவல்லி
உற்சவர்: பத்தராவிப் பெருமாள்
ஆகமம்: பாஞ்சராத்ர ஆகமம்
விமானம்: உத்பல விமானம்
தீர்த்தம்: வருண புஷ்கரிணி
தல விருட்சம்: பாரிஜாதம்
மங்களா சாசனம்: திருமங்கையாழ்வார்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:
காலை 8.00 மணி முதல் 12.00 மணி வரை
மாலை 5.00 மணி முதல் 08.30 மணி வரை
எப்படிச் செல்வது?
சென்னைக்கு மேற்கே 29 கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம். சென்னையில் இருந்து ரயில் வசதியும் பஸ் வசதியும் உள்ளது.
சேவிப்பதன் பலன்கள்:
தொலைந்த செல்வத்தை மீட்டு எடுக்கவும், இழந்த பதவியைப் பெறுவதற்கும், வியாபாரத்தில் லாபம் காணவும் வந்து வணங்க வேண்டிய தலம் ஆகும். 6, 15, 24, 4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்கள் வந்து வணங்க வேண்டிய ஊர் இது.
$$$