திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -86

-கி.சாயிநாதன்

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது எண்பத்தாறாம் திருப்பதி...

86. செம்மையாய்க் காட்சியளிக்கும் திருப்பவளவண்ணம்

நால்வகை வர்ணம் கொண்டாய்!
நாமங்கள் ஆயிரம் கொண்டாய்!
நவில்வோர்கள் பணிரெண்டு கொண்டாய்!
நாராயணனே, பவள வண்ணனே – நானும் உனையே
நவில்கின்றேன் நற்கதி தருவாயே!

நான்கு யுகங்களில் பெருமாள் நான்கு வர்ணமாக காட்சி தருகிறார். கிருத யுகத்தில் வெண்மையாகவும், திரேதா யுகத்தில் சிவப்பாகவும், துவாபர யுகத்தில் பசுமையாகவும், கலியுகத்தில் கருநீல வண்ணமாகவும் காட்சி அளிக்கிறார் என்பது ஐதீகம். பிருகு முனிவரும் அஸ்வினி தேவதைகளும் வேண்டியபடி, அவர்களுக்காக பெருமாள் செம்பவள வண்ணத்தில் இங்கு காட்சி அளித்தார் என்கிறது தலபுராணம். இங்குள்ள மூலவர் சன்னிதியின் எதிரில் இருக்கும் பச்சைவண்ணர் சன்னிதி பிரபலமானது.

மூலவர்: ஸ்ரீ பவள வண்ணன் (நின்ற திருக்கோலம் –மேற்கே திருமுக மண்டலம்)
தாயார்: ஸ்ரீ பவளவல்லித் தாயார்
ஆகமம்: பாஞ்சராத்ரம்
விமானம்: பிரவாள விமானம்
தீர்த்தம்: சக்கர தீர்த்தம்
மங்களா சாசனம்: திருமங்கையாழ்வார்

திருகோயில் நடை திறக்கும் நேரம்:

காலை 7.00 மணி முதல் 10.30 மணி வரை
மாலை 5.00 மணி முதல் 07.30 மணி வரை

எப்படிச் செல்வது?

காஞ்சியிலுள்ள திருஏகாம்பரநாதர் கோயிலுக்கு நேர் கிழக்கே உள்ளது இத்திருத்தலம். ரயில் நிலையத்திற்கு அரூகில் காலாண்டார் தெருவில் இக்கோயில் அமைந்துள்ளது.

சேவிப்பதன் பலன்கள்:

ராகு- கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், விஷக்கடியில் பாதிக்கப்பட்டவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் ஆகியோர் இங்கு வந்து இப்பெருமாளை தரிசிக்க நலம் உண்டாகும.  4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்கள், 7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்கள், 5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்கள் வர வேண்டிய தலம் இது. சக்கர தீர்த்தத்தில் நீராடி எம்பெருமானை வணங்கினால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.

$$$

Leave a comment