-கி.சாயிநாதன்
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது எண்பத்தைந்தாம் திருப்பதி...

85. காமாட்சி கோயிலுக்குள் இருக்கும் திருக்கள்வனூர்
கள்வனை பக்தனாக்கி, குசேலனை செல்வனாக்கி, கடலமுதுக்காய் மோகினி ஆகி, களவாட வாமனனாகி, உலகைக் காக்க பல மாயங்கள் புரிந்த உன்னை – இங்கு உமையவளோ கள்வன் என்று உரைத்தாளே!
பார்வதியும் லட்சுமியும் உரையாடிக் கொண்டிருப்பதை ஒளிந்திருந்து பெருமாள் கேட்டாராம். எனவே அவரை பார்வதி கள்வன் என்று அழைத்தாராம். அதையடுத்து, பார்வதியின் வேண்டுகோளுக்காக, பகவான் நின்றும், இருந்தும், கிடந்தும் மூன்று கோலங்களில் காட்சி அளித்தார் என்கிறது தலபுராணம். புத்திர பாக்கியத்திற்காக தசரதன் வணங்கிய தலம் இது.
மூலவர்: ஆதிவராகப் பெருமாள் (நின்ற திருக்கோலம்- மேற்கே திருமுக மண்டலம்)
தாயார்: சௌந்தர்ய லட்சுமி, அஞ்சலை நாச்சியார்
ஆகமம்: வைதீக ஆகமம்
விமானம்: வாமன விமானம்
தீர்த்தம்: நித்ய புஷ்கரிணி
மங்களா சாசனம்: திருமங்கையாழ்வார்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:
காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை
மாலை 4.00 மணி முதல் 08.00 மணி வரை
எப்படிச் செல்வது?
இத்தலம், காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலுக்குள் கருவறையின் வலது பக்கம் தனி சன்னிதியாக உள்ளது.
சேவிப்பதன் பலன்கள்:
தாம்பத்தியத்தில் கருத்து வேறுபட்டால் பிரிந்தவர்கள் ஒன்று சேரவும், திருமணத் தடை நீங்கவும், ராகு- கேது தோஷம் நீங்கவும் இங்கு வந்து வணங்க நிவர்த்தி ஆகும். 4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களும், 5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களும் வந்து வணங்க வேண்டிய தலம் இது.
$$$