சகல நன்மையருளும் சங்கர சதாசிவ மாலை

-கருவாபுரிச் சிறுவன்

வரும் ஆக. 23ஆம் தேதி, சங்கரன்கோவில் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. அதனையொட்டி, எழுத்தாளர் கருவாபுரிச் சிறுவன் எழுதியுள்ள சிறப்புக் கட்டுரை இது….

.

சங்கரனே நின் பாதம் போற்றி, 
         சதாசிவனே நின்பாதம் போற்றி, 
பொங்கரவா நின்பாதம் போற்றி, 
         புண்ணியனே நின்பாதம் போற்றி, 
அங்கமலத்தோடு அயனும் மாலும் காணா  
       அனலுருவா நின்பாதம் போற்றி போற்றி, 
செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி, 
         திருமூலட்டானே போற்றி போற்றி! 

      -திருநாவுக்கரசு சுவாமிகள்

மாலை என்பது என்ன? 

எல்லாம் வல்ல பரம்பொருளின் திருமேனியை  அலங்கரிக்க அழகுபடுத்தும்  மாலைகள் இரண்டு. ஒன்று பூமாலை; மற்றொன்று பாமாலை. முன்னது வாடும்; பின்னது வாடாது. முன்னது பாடாது; பின்னது பாடும். 

பாமாலைக்கு அடிப்படை பூமாலை. அதாவது, பூமாலை தொடுக்கும் தொண்டர் ஒருவர் குலை தள்ளிய வாழை மரத்தில்  உலர்ந்த பக்கவாட்டு வாழைப்பட்டைகளை நன்றாகப் பிரித்தெடுத்து இளம் வெயிலில் மீண்டும்  உலர்த்தி பூக்களுக்கு ஏற்றவாறு நார்களை நூலாக்கி அவற்றில் தம் ரசனைக்கு ஏற்றவாறு பலவிதமான நறுமணம் மிகுந்த  பூக்களைக் கொண்டு மாலையாக்கி  சுவாமியின் திருமேனியாகிய உச்சி முதல் திருப்பாதம் வரை அலங்கரிப்பார்கள். (இன்றைய காலத்தில்  கண்ணி, சரம், ஆரம், விடாரம், மாலை, ஆண்டாள்மாலை என மக்களிடம் பேச்சு வழக்கில் உள்ளன).  

இவை யாவும்  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே  வழக்கத்தில் இருந்துள்ளன என்பதை கீழ்க்கண்ட சங்க இலக்கியங்கள் காட்சிப்படுத்துகின்றன. 

 புறநானுாற்றில்… 

கண்ணி கார்நறுங் கொன்றை, காமர்
வண்ண மார்பில் தாரும் கொன்றை  

அகநானுாற்றில்…

கார்விரி கொன்றைப் பொன்நேர் புதுமலர்
தாரன் மாலையன் மலைந்த கண்ணியன்  

பரிபாடலில்… 

கண்ணியார் தாரர் கமழ்நறுங் கோதையர்

-என்று பூமாலை பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. 

மேலும்,  தேர்ந்தெடுக்கப்பட்ட மலர்களால் தொடுப்பது தெரியல் என்று நமது ஆசான் தொல்காப்பியர் குறிப்பிடுவார். இதைப் போன்றுதான் பாடல்களாகிய பாமாலை இயற்றும் புலவர்கள், பாவலர்கள் வெவ்வேறு வகையான பாவினங்களில் தாம் எடுத்துக்கொண்ட நற்குறிப்புகளை நயமாகவும், தன்னுடைய தனித்திறனால் இலக்கிய இலக்கண மரபுகளுக்கு உட்பட்டுக் கூறுவதாலும்  மாலை நூற்கள் சிற்றிலக்கியத்தில் தனியொரு இடத்தை பிடித்துள்ளன. 

காலம் கடந்தும் இலக்கியத்தில் பல நூற்கள் நிலைத்து நின்றாலும் சிற்றிலக்கியத்தில் முதன்மையான மாலை நுாற்கள் சில உள்ளன.  

முதன்மையான மாலை நூல்கள்: 

சிவபரத்துவம் சைவ மகத்துவம் பேசும் பன்னிரு திருமுறைகளில் தேவார மூவர் முதலிகள்  ‘மாலை’ என்ற சொற்பதத்தை லகுவாக பல இடங்களில் பயன்படுத்தியுள்ளார்கள்.  மேலும்,  பதினொன்றாம் திருமுறையை  ‘பிரபந்த மாலை’ என சான்றோர்கள் சிறப்பித்துச்  சொல்லுவர். 

சைவ சமயக்குரவர்களுக்கு முன்னோடியான திருமூலதேவ நாயனார் அருளிச் செய்த திருமந்திர மாலை, அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும், பெண்பால் அடியார்களில் முதன்மையாகச் சொல்லப்படும் காரைக்கால் அம்மையார் அருளிச் செய்த திருஇரட்டை மணிமாலை, பதினொராம் திருமுறை ஆசிரியர்கள் பன்னிருவரில் ஒருவராகிய கபிலதேவ நாயனார் அருளிச் செய்த மூத்த நாயனார் இரட்டை மணிமாலை, சிவபெருமான் இரட்டை மணிமாலை,  பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்துப்பிள்ளைப் போல ஆரும் துறக்கை அரிது என்று தாயுமான சுவாமிகளால் புகழாரம் சூட்டப்பெற்ற திருவெண்காட்டாடிகள் அருளிச் செய்த கோயில் நான்மணி மாலை,  தமிழ் வேத வியாசர் என அனைவராலும் போற்றப்படும் நம்பியாண்டார் நம்பிகள் அருளிச் செய்த திருநாரையூர் விநாயகர் இரட்டை மணிமாலை, ஆளுடைய பிள்ளையார் திருவுலா மாலை, திருநாவுக்கரசு தேவர் திருவேகாதச மாலை எனப் பல மாலை நூல்கள் உள்ளன.  

தம் மாநகரில் இருந்து பாத யாத்திரையாக சென்று சைவத்தமிழ் பக்தி இலக்கியங்களின் புகழை திக்கெல்லாம்  பரப்பி திருநெல்வேலி மாநகருக்கு பெருமை சேர்த்த அருளாளர்கள் பலர். அவர்களுள்,  தாமிரபரணி நதிக்கரை தந்த இளஞ்சூரியர்களாகிய குமரகுருபர சுவாமிகளும், சிவஞான யோகிகளும் குறிப்பிடத்தகுந்தோர். இவர்கள் அருளிய மாலை நுாற்கள் முறையே, திருவாரூர் நான்மணி மாலை, தில்லை சிவகாமி அம்மை இரட்டை மணிமாலை, சகலகலாவல்லி மாலை, மதுரை மீனாட்சியம்மை  இரட்டை மணிமாலை, பஞ்சாக்கர தேசிகர் மாலை என்பனவாம். 

கற்பனைக்களஞ்சியம் சிவப்பிரகாச சுவாமிகள் அருளிச் செய்த நால்வர் நான்மணி மாலை, தருமை ஆதினத்தை நிறுவிய குருஞானசம்பந்த தேசிகர் அருளிய நவரத்ன மாலை, தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர் அருளிய பழநி குழந்தைவேலவர் பஞ்சரத்ன மாலை, நாலாயிர திவ்ய பிரபந்தங்களுக்கு உரை எழுதிய பெரிய வாச்சான்  பிள்ளையவர்களுடைய நவரத்ன மாலை போன்ற நுாற்கள் யாவும்  மாலை நூற்களுக்கு முன்னோடியாகும். 

மாலை நூற்களின் வகைகள்: 

அங்கமாலை, அநுராக மாலை, இணைமணி மாலை, இரட்டை மணிமாலை, மும்மணி மாலை, உழிஞை மாலை, உற்பவ மாலை, காஞ்சி மாலை, காப்பு மாலை, தண்டக மாலை, தாரகை மாலை, தானை மாலை, தும்பை மாலை, நவமணி மாலை, நாமமாலை, புகழ்ச்சி மாலை, நான்மணி மாலை, நொஞ்சி மாலை, பல்சந்த மாலை, பண்மணி மாலை, மணி மாலை, வசந்த மாலை, வருக்க மாலை, வாகை மாலை, வீரவெட்சி மாலை, வேனில் மாலை, ஐமணிமாலை, திருப்பணி மாலை, பஞ்சரத்ன மாலை, நவரத்ன மாலை என இலக்கிய வகையில் பலதரப்பட்ட பிரிவில் மாலை நூற்கள் உள்ளன என்று சிற்றிலக்கிய வரலாற்று ஆசிரியர் மு.பொன்னுச்சாமி பட்டியல் இடுகிறார்.  

சங்கடம் நீக்கும் சங்கரன் கோயில்: 

சைவப்பெருவெளியில்  சிவபெருமானின் திருவருளால்  தெய்வாதினம் மிகுந்த சிற்றிலக்கிய  நூற்கள் நிறைந்து காணப்படுகின்றன. அவை யாவும் அம்மையப்பன் திருவடியிணைகளை இன்றும் அணி செய்கின்றன.  எம்பெருமானின் திருச்சன்னிதியில் அந்த தெய்வாதின நூற்களில் உள்ள பாடல்களை  பாராயணம் செய்வோர் அளவில்லாத இன்பத்தில் திளைத்து மகிழ்வார்கள். 

சதுர்முகனும், திருநெடுமாலும் இன்றுவரை தரிசிக்க முடியாத மாமலையாக உள்ள சிவப்பரம்பொருள் அடியார்கள் உள்ளத்தில் ஏகாந்தமாய் வீற்றிருக்கிறார் என்பது அடியார்கள் கண்ட கண்கண்ட  உண்மை. மலையரசன் மகளின் மணாளன் சங்கரனுக்கு என்றும் வாடாத பாமாலையை மெய்யடியார்கள் சாற்றி வழிபட்டார்கள் என்பது வெளிப்படை. இதனால் காலந்தோறும் புதிய புதிய மாலை நூற்கள் அடியார்களின் திருவாக்கில் வந்து வெளிப்பட்டன என்பது வரலாறு. பல்வேறு தலங்களில் தெய்வீக இலக்கியங்கள் காலந்தோறும்  தோன்றி ஹிந்து மதத்திற்கும், சைவ- வைணவ சமயங்களின் எழுச்சிக்கு அடிநாதமாய் விளங்கின. அந்த வகையில்… 

  • சைவ சமயக்குரவர்களின் தேவார வைப்புத் தலமாக சான்றோர்களால் பேசப்படுவது, 
  • தென்தமிழகத்தின் பிருத்வித் தலமாக திகழ்வது, 
  • திருவாரூர், காஞ்சிபுரம் போன்ற புண்ணிய தலங்களுக்கு நிகராக விளங்குவது,  
  • நன்மை செய்யும் நவகோள்களின் நல்லாசிகளை எளிதில் பெறச் செய்யும் பெரிய கோயிலாக அமைந்தது, 
  • குறிப்பாக ராகு, கேது என்னும் சாயாகிரகங்களுக்கு  பரிகாரத் தலமாக விளங்குவது, 

ஆன்மாக்களின் உயிர்களாகிய  புறவாழ்விற்குத் தேவையான திடமான வாழ்வியல், நீண்ட வாழ்நாள், மாணவ மாணவியர்களுக்கு நன்மதிப்பெண், நல்ல உத்யோகம், தக்கோர் மதிக்கும் வீடு, வாகனம் முதலிய சகல சௌகரியங்கள், மங்கள நிகழ்வான திருமணம், குழந்தைப்பேறு மற்றும் பல்வேறு சிறப்புகள் அனைத்தையும் ஒருங்கே அமைத்து தரும் கீர்த்தி பெற்ற தலமாக தென்பகுதியில் மிளிர்வது சங்கரநயினார் கோயில் என்னும் சங்கரன்கோவில் திருத்தலமாகும்.

அறுபகை அறுக்கும்  ஆறு மாலை நூற்கள்:

1. சென்ற நூற்றாண்டில் சைவ வானில் ஞானச்சூரியனாக ஒளிர்ந்து தன்னைச் சார்ந்தவர்களையும் ஞானவானாக்கிய திருநெல்வேலி பேட்டை ஆ.ஈஸ்வர மூர்த்தி பிள்ளையவர்கள் அருளிச் செய்த கோமதி சதரத்ன மாலை. 

2. திருநெல்வேலியின் முக்கிய பகுதிகளில் ஒன்றான தச்சநல்லுாரில் வாழ்ந்த புலவர் சிகாமணியாக விளங்கிய அழகிய சொக்கநாதப்புலவரின் கோமதி இன்னிசை மாலை. 

3. கோமதி சங்கரனுக்கு அடிமையாகப் பணி செய்த அரங்க சீனிவாசன் அவர்களின் கோமதி நான்மணி மாலை. 

4. கள்ளிக்குளம் பாரதி அன்பர், ஆசிரியர் பணி நிறைவு பெற்ற கி.சுப்பையா அவர்களின் அன்னை கோமதி மும்மணி மாலை. 

5. சென்னை துர்க்கை சித்தர் அருளிய கோமதி மாலை.

6. உலகப்புகழ் பெற்ற ஆடித்தபசுத் திருநாளில் நண்பகல் அன்னை கோமதியம்பிகை தவக்கோலம் கொண்டு எழுந்தருளச் செய்யும் தங்கச் சப்பரத்தின் தடத்தின் வழியே இவ்வூர் சிவநேயச் செல்வர்கள் காலம் காலமாக, உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து கேட்போரின் உள்ளத்தினை அன்னையின் திருவடியில் பொருந்தச் செய்யுமாறு மனம், மொழி,மெய்களால் ஒன்றி பாராயணம் செய்யப்படும்  சங்கர சதாசிவ மாலை.  

இந்த ஆறு மாலை நூற்களும் ஆன்மாக்களை பல வகையில் ஆற்றுப்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

நல்வினை தீவினைக்கு ஏற்ப பிறப்பு எடுக்கும் இந்த ஆன்மாவிற்கு உட்பகைகள் ஆறு என்கின்றன சாத்திரங்கள். அவை யாவன:

  • சினமாகிய கோபம், 
  • பேராசையாகிய காமம், 
  • மயக்கமாகிய மோகம்,  
  • சுயநலமாகிய லோபம்,
  • கர்வமாகிய  மதம், 
  • பொறாமையாகிய மாற்சரியம். 

இந்த ஆறு பகைகளை அதிகரிக்கச் செய்யும் ஐம்பொறிகளின் ஆதிக்கத்தை சிதைத்து அடக்கும், காற்றை நிறுத்தியும் விடுத்தும் செய்யப்படும் பிராணாயாமம் என்ற தியானம் புரிந்தும், தாமரை மலரின்மேல் எழுந்தருளி இருக்கும்  சிவபெருமானை எப்பொழுதும் உள்ளத்தில் உணர்ந்தும் தொழும் சிவனடியார்களுக்கு கண்டக்கறையும் கங்கையும் இல்லாத தன்னுடைய அழகிய வடிவத்தைக் காண்பித்து பேரருளை அடையும் பேற்றையும் தந்தருளும் பரம்பொருள்  உறையும் மேகம் தவழும் மதில்கள் சூழ்ந்த நகர் திருச்சிவபுரம். 

இச்சிவபுரத்தை மனதில் நினைப்பவர்கள் கலைமகளின் அருளைப் பெற்று இன்புற வாழ்வார்கள் என்பது ஆளுடைய பிள்ளையாரின் அருள்வாக்கு.  

சினம் மலி அறுபகை மிகு பொறி சிதை தரு வகை வளி நிறுவிய
மனன் உணர்வொடு மலர் மிசை எழுதரு பொருள் நியதமும் உணர்பவர்
தனது எழில் உரு அது கொடு அடை தகு பரன் உறைவது நகர் மதில்
கனம் மருவிய சிவபுரம் நினைபவர் கலைமகள் தர நிகழ்வரே. 

இதைப் போலவே  பூலோக கைலாயம் என்னும் இந்த சங்கரநயினார் கோயிலில் எழுந்தருளியிருக்கும் கோமதியம்பாள் சமேத சங்கரலிங்க சுவாமியை  மனதால் நினைப்பவருக்கு அறுபகையும் அறுபடும் என்பது உறுதி. இதற்குச் சான்றாகத் திகழும்  சங்கரன் கோயில் இலக்கிய வரலாற்றில் மிளர்ந்து காணப்படும் மூவிரு மாலை நூற்களில் ஒன்றான  சங்கர சதாசிவ மாலையைப் பற்றி கோடிட்டுக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.  

சங்கர சதாசிவ மாலை – நூலமைப்பு: 

சங்கரன் என்கிற சொல்லுக்கு சுகத்தைத் தருபவர், மங்களத்தை உண்டு பண்ணுபவர், எனப் பொருள் கூறுவர். எல்லா உயிர்களுக்கும் நல்லதை மட்டும் செய்கின்றவன் இச் சிவசங்கரன் இவரே  உயிர்களின் மீதுள்ள கருணையின் காரணமாக பல்வேறு வடிவங்களை எடுத்தாளுகிறார். குறிப்பாக, உருவத் திருமேனியில் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் எனவும், அருவத் திருமேனியில் பிந்து, நாதம், சக்தி, சிவம் எனவும், அருவுருவத் திருமேனியில் சதாசிவமாகவும் எழுந்தருளுகிறார் என்பது அனைவரும் அறிந்த விபரமாகும். சகல சிவாலயங்களில் மூலஸ்தான மூர்த்தமாக விளங்கும் சதாசிவ மூர்த்தம்  ஒவ்வொரு தலத்தினுடைய பிரதான மூர்த்தமாகும். 

இவரே அத்தல ஆன்மாக்களுக்கு நாயகர் ஆவார். ஆனால், இத்தலத்தில் பொதுவாகவும், சிறப்பாகவும், துதிக்கப்படும் திருநாமங்கள் ஒன்றிணைந்து சங்கரலிங்க சுவாமிக்குரிய சிறப்பு நூலுக்கு  ‘சங்கர சதாசிவ மாலை’ என திருநாமம் சூட்டி இருப்பது இதன்  சிறப்பு அம்சங்களில் ஒன்றாகும். 

சங்கரலிங்கப் பெருமானுக்கு அபிஷேக காலங்களில் ஒவ்வொரு அபிஷேகத்திற்குப் பின்னும் ஒரு வகை பூமாலைகளைச் சாற்றி துாப தீப வழிபாடுகள் செய்வதனைப் போன்று என்றும் வாடாத பாமாலைகளை புனைந்து சாற்றியுள்ளார் ’சங்கர சதாசிவ மாலை’ ஆசிரியர். 

  • இந்நுால் சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. 
  • காப்புச் செய்யுள் நீங்கலாக ஐம்பது செய்யுள்களைக் கொண்டது. 
  • செய்யுள்கள் தோறும் நான்கு அடிகளைக் கொண்டு நான்கு சீர்களைப் பெற்றுள்ளதால் கலிவிருத்த வகையாகவும் கொள்ளலாம். 
  • வெண்பாவிற்குரிய இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை போன்றவையும் பயின்று வருகின்றன. 
  • கலித்தழிசையாகிய கலிப்பாவும், ஒன்றிய வஞ்சித்தளையும் ஒன்றா வஞ்சித்தளையும் பயின்று வஞ்சிப்பாவும் பயிலப்படுகிறது. 
  • ஆசிரியப்பாவிற்குரிய சிறப்பான ஏகாரத்தில் முடிவடைவது; ஆசிரியப்பாவின் கூறுகளும் இடம் பெற்றுள்ளன. 
  • சங்கர சதாசிவ மாலை நூலாசிரியர், நான்கு வகை பாக்களின் கூறுகளையும் உள்ளடக்கி கலந்து தருவதனால், மாலை நூலுக்குரிய சிறப்பினை இந்நுால் பெற்றுள்ளது. 

சான்றாக, 

கடுத்துப் பகடேறிய மன்கைப்பாசம் வீசயெனை 
அடுத்துவரும்  நாள்தடுக்க ஆராலும் ஆகாதே 
விடுத்துயிர்  போம்வேளை விடைமீது எழுந்தருளித்
தடுத்துவிலக் கையா நீ சங்கர சதாசிவமே!

     (சங்கர சதாசிவ மாலை -25)

நூலாசிரியர் யார்? 

சங்கர நயினார் கோயில் பற்றிய இலக்கியங்கள் நிறைந்த அணி வரிசையில் சங்கரலிங்க உலா, சங்கர நாராயணர் அந்தாதி, சங்கர சதாசிவ மாலை ஆகிய இம்மூன்று நூற்களின் ஆசிரியர்களின் திருநாமம் இன்னார்தான் என இன்று வரை இவ்வுலகம் அறியவில்லை.  .

சங்கர சதாசிவமாலை நுாலின் ஆசிரியர் தச்சநல்லுார் அழகிய சொக்கநாத பிள்ளை என்றும், சங்கரன் கோயில் அ.முத்தையா முதலியார் என்றும் முறையே சில ஆய்வேடும் பதிப்பும் கூறி அமைகின்றன. 

ஆசிரியர் பற்றிய ஆரோக்கியமான கருத்துக்களை சிவநேயம் கொண்ட சிந்தனையாளர்களோ அல்லது இம்மண் மீது தீராக்காதல் கொண்ட மண்ணின் மைந்தர்களோ இந்த நுாற்களின் ஆசிரியர் இவரே ஆவார் என ஐயம் திரிபுர இவ்வுலகிற்கு தெரிவித்து உணர்த்துவாரே ஆயின் அவர்கள் இப்பார் உள்ளவரை என்றும் போற்றுதலுக்குரியவர்கள் ஆவார்கள்.  

இத்தலத்திலுள்ள சங்கரமகாலிங்கம், வால் அறுபட்ட பாம்புகளுடன் அதாவது குறையுடைய பாம்புகளுடன் கூழைநாதனாய்க் காட்சி நல்குவதனால் அச்சங்கரனின் அருமையை பாடித் துதிக்கும் வாடாப் பனுவல்களின் ஆசிரியரின் திருநாமம் இன்றுவரை அறியப்படாததற்க்கு இத்தகைய இயற்கை நிகழ்வும்  ஒரு காரணமாக இருக்கும் என எண்ணத் தோன்றுகிறது. 

இயற்றிய ஆசிரியர் பெயர் தெரியாத குறையுடைய பனுவல்கள் எமக்கு என்றும் உகந்தவை என இச்சிவசங்கரன் ஏற்றுக் கொண்டு அனைவருக்கும் நிறைவான வாழ்வினை நித்தம் அருள் செய்கிறார் போலும். 

தெய்வாதினம் மிக்க இத்தலத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானின் கருணையை முழுமையாகப் பெற்ற நுாலாசிரியர் தன் பெயர் வேண்டாம் என முடிவெடுத்திருக்கலாம். 

தான் படைத்த படைப்புகள் திருமுறைகளின் கருத்துக்களின் அடிச்சுவட்டில் கொண்டு சென்று இருக்கலாம். 

ஆசிரியர் காலத்தில் வாழ்ந்த சக ஆசிரியர்களும் இவருடைய படைப்பினை நன்கு பாராட்டி இருக்கலாம்.  இவ்வாசிரியர் புகழ் வேண்டாத பெருமனத்தராய் வாழ்ந்து காட்டிய இருக்கலாம். தாம் செய்த படைப்பிலே தன்னிறைவு கொண்டு முழுவாழ்க்கை வாழ்ந்திருக்கலாம்.  ஆடம்பரத்தை விரும்பாத ஆடவல்லானின்  திருவடியைச் சிக்கென பிடித்தமையால் அவரும் விளம்பரத்தை விரும்பாமல் இருக்கலாம். 

மேலும் ஆசிரியர் ஒருக்கால் தம்படைப்பில் தனது பெயரை பதிவு செய்திருந்தாலும் முதன் முதலில் மூல நுாலினை பதிப்புச் செய்தோருக்கு இயற்கைச் சிதைவின் காரணமாக ஆசிரியர் பெயர் கிட்டாமல் இருக்கலாம். இன்னும் பல காரணங்களை மனதில் கொண்டு நாம் செய்த தவத்தின் குறைவினையும் ஒரு முக்கிய காரணமாக கருதி  ஆசிரியர் பெயர் இன்று வரை நமக்கு கிடைக்கப் பெறவில்லை என ஒருவாறு மனஅமைதி கொள்ளலாம்.

அருளாளர்களின் அடிச்சுவட்டில்: 

தமிழகத்தின் விடிவெள்ளி, முடியாட்சியை எதிர்த்த முதல் மகான் அப்பரடிகளாகிய முத்தமிழ்ச் செல்வர், முதன்முதலில் உண்ணாவிரதம், அங்கப்பிரதட்சணம் போன்ற நோன்புகளை சைவமக்களுக்கு  அறிமுகம் செய்து வைத்தவர்;  சாதி  சமயப்பூசல்களை அறுதெறிந்த ஞானவாள்; மேலை நாடுகளில் எல்லாம் பல்வேறு புரட்சிகளுக்கு வித்திட்டு தன்னுடைய நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்ட ஆபிரகாம் லிங்கன், லெனின், ருஸ்கோ  போன்ற தலைவர்களுக்கு என்ன புகழ் கிடைத்ததோ அதைவிட பன்மடங்கு பெரும்புகழ் நம்முடைய சமயக்குரவர்களுக்கு கிடைத்திருக்க வேண்டும்.  

சிவபெருமான் மீதுள்ள பக்தியின், தீரத்தின் காரணமாக,   உயிர்கள் எப்போதும் நலமுடன் வாழ  வேண்டும் என்ற பெருங்கருணை நோக்கோடு எம் தலைவன் எங்கிருந்தாலும் நம்மை ஆட்கொள்வான் என்கிற உறுதிமொழியை தம் வாழ்நாளில் தீவிரமாகக் கடைப்பிடித்தும் வாழ்ந்தும் காட்டியுள்ளார்கள் நம்முடைய சமயக் குருமார்கள். அவற்றை தீந்தமிழ் செய்யுளாகவும் பாடிப் பரவியுள்ளார்கள். 

ஞானஅரசராகிய திருநாவுக்கரசு சுவாமிகளை சிவபெருமான் ஜோதி ரூபத்தில் அழைத்துச் சென்றதனை, 

எங்கே என்னை இருந்திடம் தேடிக் கொண்டு 
அங்கே வந்து அடையாளம் அருளினார்
தெங்கே தோன்றும் திருவாய்மூர்ச் செல்வனார்
அங்கே வாவென்று போனார் அதென் கொலோ!

-என்று திருவாய்மூர் திருப்பதிகத்தில் சிவபெருமான் அருளிய வெளிப்பாட்டை புலப்படுத்துகிறார். 

உலகம் உய்ய, நாம் உய்ய, சைவ நன்னெறியின் சீலம் உய்ய திருத்தொண்டர் தொகையை தந்த திருவாளன், முக்காலமும் உணர்ந்த தீர்க்கதரிசி, மானுட வாழ்வியலுக்கு காரகத்துவம் மிகுந்த ஏழாம் இடத்தினைக் கொண்ட புனிதப் பேரொளி, சிவநேயர்களின் அறிமுகமே தேவையில்லாத நிரந்தரத் தலைவன் நம் சுந்தரமூர்த்தி சுவாமிகள் பெருங்கருணைத்திறனை திருக்கழிப்பாலைப் பதிகத்தின் செய்யுளில்… 

எங்கேனும் இருந்துன் அடியேன் உனைநினைத்தால் 
அங்கே வந்து என்னோடும் உடனாகி நின்றருளி
இங்கே என் வினையை அறுத்திட்டு எனையாளும் 
கங்கா நாயகனே! கழிப்பாலை மேயவனே! 

என தனது திருப்பாட்டில் பதிவு செய்கின்றார். இக்கருத்தையே கெளமார தரிசனம் கண்ட ஓசை முனிவர் அவர்களும் பன்னிருகைப் பரமனை சொல் அலங்காரம் கொண்டு துதி செய்துள்ளார் இதோ… அந்த கந்த அலங்காரப் பாடல்… 

செங்கேழ் அடுத்த சினவடி வேலும் திருமுகமும்
பங்கே நிறைந்த நற்பன்னிரு தோளும் பதுமமலர்க் 
கொங்கே தரளம் சொறியும் செங்கோடைக் குமரனென 
எங்கே நினைப்பினும் அங்கே என் முன்வந்து எதிர்நிற்பனே!

அகில லோக நாயகனை தலைவனாக கொண்ட ஞான அரசு, ஞானரூபனுடைய திருவாக்குகள் மற்றும் ஓசை முனிவரின் சொல்லோவியம் போன்றவற்றை மனதில் பதித்த சங்கர சதாசிவ மாலை நுாலாரியர்,

எங்கிருந்து முன்னாமம் ஏத்தித் தொழுமடியார்
பங்கிருந்து மெய்யருளைப் பாலிப்பது நீயலவோ
கொங்கிருந்த சீராசைக் கோமானே! வாவி தோறும்
சங்கிருந்த புன்னைவனச் சங்கர சதாசிவமே!

     (சங்கர சதாசிவ மாலை-17)  

-என்று பணிந்து ஏத்துக்கிறார். 

பாதிராத்திரி வேளையில் பரம்பொருள்: 

பாண்டிய மன்னனிடம் அமைச்சராகப் பணி புரிந்து தித்திக்கும் திருவாசகத்தை அருளிச் செய்த மாணிக்கவாசகருக்காக பரம்பொருள் கூலியாளாய் வந்தார், வந்திப்பாட்டிக்கு மண் சுமந்தார், மன்னரிடம் பிரம்படி பட்டார், குதிரை சேவகனாகப் பணியாற்றினார், திருக்கரம் அழுந்துமாறு திருவாசகம் எழுதினார், ஊமைப் பெண்ணைப் பேச வைத்தார்…. இன்னும் பல அற்புதங்களை நிகழ்த்திய இச் சிவசங்கலிங்கத்தை, 

நாவு தடுமாறா என்னாளும் எளியேன் மதுரப் 
பாவும் இசைத்துன் பொற்பாதம் பணியவே அருள்வாய்
கூவு நரித்திரளைக் கொண்டுவந்து பாண்டியன் முன் 
தாவுபரி யாக்கிவைத்த சங்கர சதாசிவமே!

     (சங்கர சதாசிவ மாலை – 20)

மாணிக்க வாசகருக்காக பாதிராத்திரியில் குதிரைகள் எல்லாவற்றையும் நரியாக்கியவனே என்று பாடி துதித்து வேண்டுகின்றார் சங்கரசதாசிவ மாலை ஆசிரியர். 

தாயுமான சுவாமிகளின் எதிரொலி: 

‘சேர வாரும் ஜெகத்தீரே!’  என்று, சமய வாழ்விலும் பொதுவாழ்விலும் அன்பின் வழியில் ஆதிப் பரம்பொருளைக் காணலாம், கண்டால் அவன் திருவடியை அடையலாம் என்று வாழ்ந்து காட்டிய மகாஞானி தாயுமான சுவாமிகள் ஆவார்கள். 

இப்பெருமானின் திருவாக்கில் வேதாந்த சித்தாந்த சாராம்சம் கொண்ட கருத்துப்பிழிவுகளை ஒருங்கே காணலாம். மிளிர்ந்து காணப்படும் இவருடைய திருப்பாடல்களில்  ‘எந்நாள் கண்ணி’ என்பது ஒரு பகுதி. 

தெய்வம், குரு, அடியார்கள் முறையே, வணக்கங்கள், யாக்கை நிலை, மாதர்களோடுள்ள நிகழ்வு, தத்துவ முறை, தன்னையறியும் தன்னுண்மை அறம், பொருள், ஆனந்தம் முறையேயான சிறப்புகள் அன்பு, அன்பர் நெறி அறிஞருரை, நிற்கும் நிலை முக்தி உபாயம் என்கிற தலைப்புகளில் குறளடிகளை கொண்டு ஞானத்தினை எளிதில் அடைவதற்கு சூசகமாக உபதேசித்து அருளிச் செய்துள்ளார்கள்.  

பச்சை நிறமாய் சிவந்த பாகம் கலந்து உலகை 
இச்சையுடன் ஈன்றாளை யான் காண்பது எந்நாளோ! 

என்று அன்னையைத் தொழுது வணங்குவார் தாயுமான சுவாமிகள். திராவிட உபநிஷத்துகளில் தோய்ந்து காணப்பட்ட நம்முடைய சங்கர சதாசிவ மாலை ஆசிரியர் அவர்களும், 

மோனந்தனில் இருந்து முக்தி தனைக்காண நல்ல 
ஞானம்தனைத் தெரிந்து நாடுவது எந்நாளோ - 7

சென்ம வினை யின்னும் வந்து சேராமல் என்னுடைய 
கன்ம வினைஒழியக் காண்பதினில் எந்நாளோ! - 30

அடைக்கலமாய் வந்துன அடியிணையில் புக்கும் எனைக்
கடைக்கண் அருள்செய்து கதி தருவது எந்நாளோ - 31 

கானவனும் தக்கணையும் கன்மாடனும் போல 
ஞானவரங்கள் பெற்று நலம் பெறுவது எந்நாளோ - 38 

கொடை எனக்கு நின்னுடைய கோகனத்தாள் பெறவே 
கடையில் பிடிதரம் நான்கணுவது எந்நாளோ - 43 

என்ற செய்யுள் அடிகள் தோறும் தாயுமான சுவாமிகளின் எந்நாள் கண்ணியின் திருவாக்குண்மைகள் ஏற்றம் மிகுந்த எதிரொலியாய் ஒலிக்கின்றன என்பதை அவனருளால் அவன் தாள் வணங்கி மகிழலாம். 

நெஞ்சில் நிறைந்த தலபுராண நிகழ்வுகள்: 

தலபுராணங்கள் யாவும் தலைமுறைகளைக் காக்கும் என்பது நம்முடைய முன்னோர்களின் ஆழ்ந்த நம்பிக்கை. இடைவிடாத சிந்தனையும் கூட. தலபுராணங்களில் சிறப்பு அம்சமே மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் முச்சிறப்புகளைக் கொண்டு திகழும் தலபுராணங்களில் ஒன்று சங்கர நயினார் கோயில் தலபுராணம். சீவலமாற பாண்டியனார், புளியங்குடி நகரம் முத்துவீரப்ப கவிராயர் என்னும் இருபெரும் புலவர்களால் பாடப்பெற்றது இது. 

தலபுராணத்தில் ஏழாவதாக உள்ள சங்கரநாராயணர் சருக்கத்தில் சங்கபதுமர் என்கிற நாக அரசர்கள் சிவஞானகாட்சி கண்ட தரிசனத்தை விவரிப்பார். இத்தகைய புராண நிகழ்வினை நம் சங்கர சதாசிவ மாலை நுாலாசிரியர் 

வந்தே பெரிய வழக்கான சங்க பதுமர் 
சந்தேகம் தீர்த்த சிவசங்கர சதாசிவமே!

     (சங்கர சதாசிவ மாலை – 45)

என்று கோடிட்டு காட்டி மகிழ்கிறார். பாம்பரசர்கள் வழிபட்ட சிவலிங்கத் திருமேனி பலகாலம்  புற்று மூடி  இருந்தது. மணிக்கீரிவன் என்ற காவல் பறையன் மூலம் உக்கிர பாண்டிய மன்னன் தரிசனம் செய்தார். பெருமானின் திருவருள் நோக்கினால் இந்த அருமையான திருக்கோயிலையும், அழகான நகரையும் நிர்மாணம் செய்து அம்மையப்பனுக்கு காலந்தோறும் சிறப்புடன் நடைபெறும் சித்திரை பிரமோற்ஸவத் திருவிழா மற்றும் பல்வேறு திருப்பணிகளையும் சிரத்தையுடன் அகம் குளிர ஏற்படுத்தினான் என்பது வரலாறு. உக்கிர பாண்டிய மன்னர் பிரானை போற்றும் வகையிலான பாடல் இது… 

பாங்காய் வழுதி உக்கிரபாண்டியர்க்குப் புன்னைநறும் 
பூங்காவில் வந்தருளும் புண்ணியர் நீ தான் அல்லவோ
நீங்காது உறைநந்திருந்து நீ காப்பதல்லால் 
தாங்காக்க வல்லவரார் சங்கர சதாசிவமே!
    
    (சங்கர சதாசிவ மாலை – 36)

போற்றுதலுக்குரிய பதிப்புப் பணிகள்: 

தொடக்க காலத்தில் இந்நகரில் வாழும் பல சைவ அன்பர்கள் ஒன்றிணைந்து சங்கர சதாசிவ மாலை நுாலை அச்சிட்டு அனைவருடைய உள்ளத்திலும் உலா வரச் செய்துள்ளார்கள். திருமுறைகள் மற்றும் சமயப்பனுவல்களில் தோய்ந்த சங்கரலிங்கப் பெருமானின் அடிமைகளில் ஒருவரான முருகன், சுப்பிரமணிய முதலியார் என்பவர் இந்நுாலுக்கு பொழிப்புரை, பதவுரை, கருத்துரை, விரிவுரை போன்றவற்றை எழுதி வைத்திருந்தார்கள். அன்றைய காலச் சூழலில் அவை யாவும் அச்சிட முடியாமல்  போகவே, 1982ஆம் ஆண்டு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அருளிய சாற்றுக்கவியுடன் பொழிப்புரையுடன் கூடிய மூல நுாலினை மட்டும் வெளியீடு செய்துள்ளார்கள் சங்கரன் கோயில் திருக்கார்த்திகை வழிபாட்டுக் குழுவினர். 

சங்கர சதாசிவ தண்டமிழ் மாலைக்கு 
இங்கன் உரையெழுதி ஈந்தனனால் துங்க
புகழ் முருக சுப்பிரமணிப் பூ பனிதைக் கற்பார்
தகவுடனே வாழ்வார் தழைத்து. 

     -திருமுருக கிருபானந்த வாரியார்.

என்கிற நேரிசை வெண்பா, இந்நுாலினை அச்சிட்டு வெளியீடு செய்வோர்க்கு உற்சாகத்திறவுகோலாய் அமைந்துள்ளது எனலாம். 

இத்தலத்திலுள்ள அருணகிரிநாதர் நன்னெறி மன்றம் என்கிற அமைப்பு பல முறை இந்நுாலை அச்சிட்டு இலவசமாக வழங்கியுள்ளது. மேலும் புதுமனை புகுவிழா, திருமணவிழா, சிறப்பு நிகழ்ச்சி நாட்களில் ஞாபகார்த்த வெளியீடாகவும் இந்நுாலை அவரவர் தகுதிக்கு ஏற்றவாறு அச்சிட்டு வெளியீடு செய்துள்ளார்கள். 

இன்றைய துாத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள சிறுத்தொண்ட நல்லுாரில் வாழும் ஒரு சில மேன்மை பொருந்திய இனத்தார்கள் பக்தி சிரத்தையுடன் அம்மையப்பன் மீது பாடப்பெற்ற சங்கர சதாசிவ மாலையிலுள்ள பாக்களை கார்த்திகை மாதம் முப்பது தினங்களும் நாவினால் வழுத்தி தலபாராயணம் செய்கிறார்கள். இது இங்கு தொன்று தொட்டு நிகழும் ஒரு தெய்வீக மரபாகும்.

நிறைவுரை: 

பத்தி செய்து நின்னுடைய பஞ்சாட்சர விதியும்
சித்தியாய் வந்தெனக்குச் சேரவரமே அருள்வாய், 
முத்தி தரும் வித்தாய் முளைத்த முழுமுதலே
சக்தியொரு பாகம் வைத்த சங்கர சதாசிவமே!

     (சங்கர சதாசிவ மாலை – 15)

அனைவருக்கும் சிவசங்கரலிங்கப் பெருமானின் திருநாமம் கவசமாய் இருந்து எல்லா நலன்களையும் வழங்குகின்றன. பல்வேறு சிறப்புகளைக் கொண்டு இருக்கும் இச்சங்கர சதாசிவமாலையை யார் ஒருவர் ஆத்மார்த்தமாக சிவபெருமான் திருச்சன்னிதியில் பாராயணம் செய்கிறார்களோ அவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் அறுபகைகளும் அறுபட்டு சகல சம்பத்துக்களையும் பெறுவார்கள் என்பதனை, மனம் மொழி மெய்களால் சங்கரலிங்கப்பெருமானை வழிபடும் போது உணரலாம் என்பதை உணர்வோமாக.  

திருச்சிற்றம்பலம்.

வாழ்க பாரதம்! வாழிய மணித்திருநாடு!

கும்பாபிஷேகம் - சிறப்புப் பார்வை 

மண்வடிவாக குடத்திலும், நீர்வடிவாக தீர்த்தத்திலும், நெருப்பு வடிவாக ஹோமத்திலும், காற்று வடிவாக மந்திர உச்சரிப்பிலும், ஆகாய வடிவமாக ஒலியின் விரிவிலும், சூரியன் வடிவாக ஒளியிலும், சந்திரன் வடிவாக மனத்தின் குழைவிலும், ஆன்ம வடிவாக உயிர்களின் ஏகோபித்த ஒன்றிணைந்த வழிபாட்டிலும், எங்கும் நிறைந்த சங்கரனை ஓரிடத்தில் நிலை நிறுத்தலே கும்பாபிஷேஷகம் என்பார் கொங்கு மண்டல குலகுரு ஸ்ரீ சரவண மாணிக்கவாசக சுவாமிகள். 

அத்தகைய கும்பாபிஷேக நிகழ்வு காலந்தோறும் ஒவ்வொரு திருக்கோயில்களிலும் ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து நடைபெற்று  வருகிறது.  சங்கரன்கோவில் மாநகரில் நமக்குக் கிடைத்த ஆவணங்களின்படி நடைபெற்ற கும்பாபிஷேக நாள்கள்: 1934 ஆகஸ்டு 27;  1958 ஜூன்  27;  1978 ஜூன் 9;  1995 ஜூலை 5; 2008 ஏப்ரல் 23. தற்போது,  2024 ஆகஸ்டு 23ஆம் தேதி மீண்டும் கும்பாபிஷேக விழா சீரும் சிறப்புமாக நடைபெற இறைவன் திருவுள்ளம் கனிந்துள்ளார்.

$$$ 

Leave a comment