-கி.சாயிநாதன்
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது எண்பத்து நான்காம் திருப்பதி...

84. கார்மேகத்தையும் விஞ்சும் திருக்கார்வானம்
காரகத்தில் கண்ணனாய்ப் பிறந்து, கள்வனைப் போல் நடுநிசியில் யமுனை கடந்து, பாற்கடலில் கிடந்து, பகலவனை மறைத்து, பஞ்சவர்களுக்காய் பல மாயங்கள் புரிந்து – இங்கு வந்து காமாட்சி தாய்க்காக கள்வனாயும் காட்சி அளித்தாயே!
மேகம் தங்கும் வானம் என்பது பெயர்க் காரணமாக அமைந்த தலம். மேகமானது மழை பொழிந்தவுடன் மாயமாகிவிடும். ஆனால், பெருமாளின் கருணை எவ்வளவு பொழிந்தாலும் நிலைத்திருக்கும்.
திருஊரகம், திருநீரகம், திருக்காரகம், திருக்கார்வானம் ஆகிய நான்கு திவ்ய தேசங்களும் காஞ்சிபுரம் உலகளத்த பெருமாள் கோயில் வளாகத்திலேயே ஒருங்கே அமைந்துள்ளன. இந்த நான்கு திவ்ய தேசங்களியும் ஒரே பாசுரத்தில் திருமங்கையாழ்வார் மங்களா சாசனம் செய்துள்ளார்.
மூலவர்: கள்வர் பெருமாள் (நின்ற திருக்கோலம்- மேற்கே திருமுக மண்டலம்)
தாயார்: கமலவல்லி நாச்சியார்
விமானம்: புஷ்கல விமானம்
தீர்த்தம்: கௌரி தடாகம்
மங்களா சாசனம்: திருமங்கையாழ்வார்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:
காலை 7.15 மணி முதல் 10.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் 08.00 மணி வரை
எப்படிச் செல்வது?
காஞ்சிபுரம் சென்று உலகளந்த பெருமாளை சேவிக்கும் போது பகவான் தனது கோயில் வளாகத்குள்ளேயே வேறு விதமான பெயர்களோடு தனி தரிசனம் தருகிறார். இக்கோயிலிலேயே வடக்கு நோக்கி அமர்ந்து, திருகார்வனத்து பெருமாள் கள்வனாகக் காட்சி அளிக்கிறார்.
சேவிப்பதன் பலன்கள்:
மனக்கஷ்டம், பணக்கஷ்டம், குழந்தைகளால் ஏற்படும் மனச்சோர்வு எல்லாம் நீங்க இங்கு வந்து மனம் உருகிப் பிரார்த்தனை செய்ய நிவர்த்தி ஆகும் என்பது ஐதீகம். 16, 7, 25 தேதிகளில் பிறந்தவர்கள் வந்து வணங்க வேண்டிய தலம் இது.
$$$