-ச.சண்முகநாதன்
திருவாடிப்புரத்தை முன்னிட்டு, முகநூலில் திரு. ச.சண்முகநாதன் எழுதிய கவிதை இங்கு மீள்பதிவாகிறது....

(ஆடிப்பூரம் சிறப்புக் கவிதை)
கடவுளிடம் வரம் கேட்போர்கள் மத்தியில்
அந்தக் கடவுளையே வரனாய் கேட்டவள்.
மூவடி மண்கேட்டு உலகலந்தவன் தன்
சேவடி பற்றி அம்மி மிதிக்க கனாக்கண்டவள்.
சிரம் தாழ்த்தி வணங்க வேண்டிய பரந்தாமனை
கரம் பிடித்து நடக்கத்துணிந்தவள்.
‘சங்கத் தமிழ்மாலை’ செய்து
எங்கள் ஆயர்குலத்து அரசியானவள்.
தூய காதலால் கடவுளுடன்
தீவலம் வருவதாய் கனாக் கண்டவள்.
நாற்றத்தில் சிறந்தது எது?
கருப்பூரமா? கமலப்பூவா?
என் மாதவன் வாயா, சொல், என்று
வெண் சங்கை வம்புக்கிழுத்தவள்?
பக்தியால் காதல் கொண்டு
‘மானிட வர்க்கென்று பேச்சுப்படில்
வாழகில்லேன் கண்டாய்’
என்று முடிவாய் சொன்னவள்.
பாவை நோன்பெனும் மரபைத் துவங்கி
கதிரவனுக்கு முந்தி தமிழரை எழச்செய்தவள்.
எழுந்து நாராயணனை தொழச் செய்தவள்.
இறைவனிடம் கையேந்துபவர் இருக்க
கோவிந்தனையே கைப்பிடித்தவள் கோதை.
பெரிதினும் பெரிது கேட்டவள்
‘கனாக் கண்டேன்’ என்று கடவுள் மீது
தீராக்காதல் கொண்டவள்.
தமிழின் தலைமகள், ஆண்டாள்,
தமிழ் கொண்ட சக்திவடிவம்.
திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே!
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!
$$$