உருவகங்களின் ஊர்வலம்- 31

-பி.ஆர்.மகாதேவன்

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #31

31. வல்லாதிக்க இயற்கைக் கோள்கள்

எந்தக் கண்காணிப்புக் கருவியிலும் சிக்காமல்
எல்லா நாடுகளின் மேலும் சுற்றிக்கொண்டிருக்கின்றன
வல்லாதிக்கத்தின் செயற்கைக் கோள்கள்.

இவை வெறும் தடம் காண் கருவிகளோ
புகைப்படம் எடுத்து அனுப்பும் கருவிகளோ அல்ல.
அதாவது,
இவை இருப்பதைப் பதிவு செய்யும் கருவிகள் அல்ல-
தான் விரும்பியதைப் பதிய வைக்கும் கருவிகள்.

(நமக்குப் புரியும் உதாரணம் சொல்வதென்றால்
சில வரலாற்றாய்வாளர்கள்
தாம் எழுதுவதே வரலாறு என்பார்களே அதுபோன்றது).

எங்கோ கடலில் ஏற்படும்
காற்றழுத்தத் தாழ்வு நிலைகளைக்
கணித்துச் சொல்பவை அல்ல;
நினைத்த நாட்டில்
நினைத்த மாத்திரத்தில்
டூல்கிட் புயலை உருவாக்கக் கூடியவை.

எங்கோ இருள் வானில்
கண்ணுக்கெட்டாத தூரத்தில் உலவினாலும்,
கோஹ்ண்ல் யானையின் காது மடலில் ஊரும்
சிற்றெறும்பைக் கூடத் துல்லியமாகப் படமெடுக்க முடிந்தவை.

அதோடு நின்றால்கூடப் பரவாயில்லை
சிற்றெறும்பு ஊர்வது போன்ற உணர்வை
கோஹ்ண்ல் யானையின் காதருகில் உருவாக்கும்
சூப்பர் சானிக் லேசர் கதிர்களும் வீசுபவை.

கலாள்சார உற்சவங்களுக்கு கஜ ராஜன்களை
அலங்கரித்து அணிவகுக்கும் தேசங்களே எச்சரிக்கை.
(நம் யானைகள் என்றைக்கு வேண்டுமானாலும்
அது சுமக்கும் திருமேனிகளைக் கீழே போட்டுவிட்டு
தலை தெறிக்க ஓட வைக்கப்படலாம்).

ஒவ்வொரு நாட்டு கண்காணிப்புக் கேமராக்களிலும்
எல்லாம் நல்லவிதமாக இருப்பது போன்ற
புகைப்படங்களை இடம்பெறச் செய்யும் வல்லமை படைத்தவை.

சாலைகளில் வாகனங்கள் நல்லவிதமாக
வந்துபோய்ந் கொண்டிருக்கும்
(எந்தவொரு கள்ளக் கடத்தல் வாகனமும்
செக்போஸ்ட்களை உடைத்துக்கொண்டு செல்வது பதியாது).

அருங்காட்சியக அறைகள், வராந்தாக்கள்
ஆளரவமற்று அமைதியாக இருப்பதாகவே காட்டும்.
(காலத்தால் அழியாத அத்தனை கலைப்பொருட்களும்
களவாடப்படுவது தென்படவே செய்யாது).

எல்லா ஏவுகணைகளும் தயார் நிலையிலேயே இருக்கும்
ஆனால்
அனைத்துக்குமான எரிபொருள் இணைப்பு மட்டும்
அவசியமான நேரத்தில் துண்டிக்கப்பட்டுவிடும்.
(பொய்யே சொல்லாத சிஷ்யர் என்றாலும்
இந்த வல்லாதிக்க குருவின் சாபத்திலிருந்து தப்ப முடியாது).

நல்லது,
நம் நாட்டு மேதைகள் நிச்சயம்
நானிலம் போற்றும் நிபுணர்களே.
நம்மிடம் இல்லாத
நவீனத் தொழில் நுட்பம் எதுவுமில்லை.
நம் வானில் நம்மை மீறி எதுவும் வட்டமிட முடியாது
நம் காற்று மண்டலத்துக்குள்
நம்மை மீறி எதுவும் ஊருடுவ முடியாது.
நம் தேசத்தின் மேல்
நம்பத் தகுந்த பாதுகாப்பு வளையம்
நங்கூரமிட்டது போல இருக்கிறது என்கிறீர்களா?

நல்லது,
உங்கள் தேச பக்தியைப் பாராட்டியே தீர வேண்டும்.

விண்ணில் உலவும் செயற்கைக்கோள் என்றாலும்
மண்ணில் ஒரு தொடர்பகம் அவசியமல்லவா என்கிறீர்களா?
மிகவும் நல்லது.

சரியான இடத்துக்கு வந்துவிட்டீர்கள்.
நம் எல்லைகளை நாம் பலப்படுத்திவிட்டிருக்கிறோம்.
நாம் நம் எல்லையைப் பலப்படுத்துவதற்கு முன்பே
ஊடுருவிவிட்டவையாக இவை இருந்தால்…?

ஒவ்வொரு ராஜ்ஜியத்துக்குள்ளும்
இன்னொரு இணை ராஜ்ஜியமாக இவை இருந்தால்…?

ஒற்றர்கள் படைக்குள் ஊடுருவிவிட்டார்கள் என்று
நம் வீரர் சென்று சொல்லும் நபரே
ஒற்றர் படைத்தலைவராக இருந்தால்…?

மின்னலை பூமிக்குள் கடத்த வேண்டிய இடிதாங்கியே
நாடாளுமன்றக் கட்டடத்தில் பாய வழிவகுத்தால்…?

அபாரமான தொலைநோக்கிகள் எல்லைக்கு அப்பால்
எந்தவொரு புழு நெளிந்தாலும் கண்டுபிடித்துவிடும்.
ஆனால், உள் நாட்டுக்குள்
எத்தனை பாம்புகள் நெளிந்தாலும்
அதனால் கண்டுபிடிக்கவே முடியாது அல்லவா?

எந்த திசையை நோக்கிக் குவிக்கிறீர்களோ,
அந்தத் திசையை மட்டும்தானே
அது காவல் காக்க முடியும்?

எந்தத் தருணத்தில் வேலி அமைக்கிறீர்களோ
அன்றிலிருந்து மட்டும்தானே பாதுகாப்பு பலப்படும்?

ஊடுருவியதோடு
உச்சாணிக் கொம்பில் ஏறி,
இருப்பவற்றை வெளியேற்ற நினைக்காமல்
ஊடுருவியதே தெரியாமல் நாம் இருக்கும் வரை…
அவை நம் தேசத்தில் உலவிக்கொண்டுதான் இருக்கும்.
அனைத்தையும் கண்காணித்தபடி …
அனைத்தையும் கட்டுப்படுத்தியபடி…

நினைத்துப் பார்க்க முடியாத நிதிகளைக் கொட்டி,
நில எல்லைகளைப் பலப்படுத்திக்கொண்டுவரும் தேசங்களே!
நீங்கள் பாதுகாப்பாக இல்லை.

விண்ணிலிருந்து விரும்பியதை நடத்தும்
வல்லாதிக்கச் செயற்கைக்கோளின் வலிமை
ஏற்கெனவே ஊடுருவி விட்டவற்றுடனான
அதன் தொடர்பிலேயே இருக்கிறது.

இந்த இரண்டுக்குமான
மின்காந்தத் தொடர்பைத் துண்டிக்காமல்
எந்த நாடும் தப்பிக்க முடியாது.
எந்த எல்லையையும் காக்க முடியாது.

ஏனென்றால்,
கண்காணிப்பு கோபுரக் கட்டுப்பாடுகள்
கைவிட்டுப் போனபின்
எல்லைப்புற வேலிகளினூடாக வண்ணத்துப் பூச்சிகள்
இங்குமங்குமாகக் கடந்து செல்வதான படங்கள் மட்டுமே
நமக்குக் காட்டப்படும்.

தாக்குதல் தூரத்தில் தலை தாழ்த்திப்
பதுங்கியபடி வந்து நிற்கும்
பீரங்கி வரிசையை அது காட்டவே செய்யாது.

இதைக்கூடச் சமாளித்துவிடலாம்
நம் எல்லைப்படை பீரங்கிகளும்
அதனுடன் கூட்டு சேர்ந்து
நம் பக்கமே திரும்புவதை எப்படித் தடுக்க முடியும்?

எந்தக் கண்காணிப்புக் கருவியாலும்
கண்டுபிடிக்க முடியாத சதி அல்லவா அது
என்று பதறுகிறீர்களா?

எந்தக் கஷ்டமும் இன்றிக்
கண்டுபிடிக்க முடிந்த சதியே அது.

சில தொலைநோக்கிகளை உள்முகமாகத்
திருப்பி வைக்க வேண்டியிருக்கும்
சில துவக்குகளை
உள் பக்கமாகவும் குறிவைக்க வேண்டியிருக்கும்
நீங்கள் அதற்குத் தயாரா என்று தெரியவில்லையே?

$$$

Leave a comment