-கி.சாயிநாதன்
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது அறுபத்து நான்காம் திருப்பதி...

64. பாண்டவர் பாவம் போக்கிய திருச்செங்குன்றூர்
தோஷம் போக்கும் முகம்... பாவம் தீர்க்கும் பாதம்... யோகம் தரும் கைகள்... மகாலக்ஷ்மி உறையும் மார்பு... மல்லாண்ட இரு தோள்கள்... கற்கண்டாய் இனிக்கின்ற கண்கள்... புல்லாங்குழ் ஊதி சிவந்த இதழ்கள்... பக்தனுக்காய்ப் பணிகின்ற இதயம்... மலைத்தேனாய் இனிக்கின்ற இதிகாசங்கள்... சொற்களுக்கு எட்டா உன்னை பல்லாண்டு, பல்லாண்டாய்ப் பாடுகின்றேன். திருகுன்னூர் வாசனே, இமயவரப்பனே – நீ திருக்காட்சி, அருள்காட்சி தருவாயே!
மகாபாரத யுத்தத்தில் குலகுரு துரோணரைக் கொன்ற பாவம் போக்க பஞ்ச பாண்டவர்கள் வழிபட்ட தலம் இது. தர்மர் பிரதிஷ்டை செய்த மூர்த்தியே இமயவரப்ப பெருமாள். இங்கு வலக்கையில் சங்கும் இடக்கையில் சக்கரமும் தரித்து காட்சி அளிக்கிறார் பெருமாள்.
மூலவர்: இமயவரப்பன் (நின்ற திருக்கோலம் – மேற்கே திருமுக மண்டலம்)
தாயார்: செங்கமலவல்லி
விமானம்: ஜகத் ஜ்யோதி விமானம்
தீர்த்தம்: சங்கு தீர்த்தம்
மங்களா சாசனம்: நம்மாழ்வார்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:
காலை 5.30 மணி முதல் 10.30 மணி வரை
மாலை 5.30 மணி முதல் 07.30 மணி வரை
எப்படிச் செல்வது?
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து கொல்லம் வழியாக எர்ணாகுளம் செல்லும் ரயில் பாதையில் இருக்கிறது இத்தலம் (திருச்சிட்டாடு). திருவல்லாவில் இருந்து 10 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.
சேவிப்பதன் பலன்கள்:
நிம்மதி இல்லாமல் தவிப்பவர்களும், செய்த பாவத்தைப் போக்க நினைப்பவர்களும் வந்து வணங்க நலம் கிடைக்கும். 2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்கள் வந்து வணங்க வேண்டிய தலம் இது.
$$$