-கி.சாயிநாதன்
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது அறுபத்திரண்டாம் திருப்பதி...

62. ஹரித மகரிஷிக்கு காட்சி தந்த திருமூழிக்களம்
நெஞ்சில் நீ இருந்தாய், நேசமோடு தான் இருந்தாய்… கண்ணில் நீ இருந்தாய், காட்சியோடு தான் இருந்தாய்… வழிக்கணம் வாராமல் வழித்துணையாய்த் தான் இருந்தாய்… திருமூழிக்களத்து அப்பனே என்னையும் காத்தருள்வாயே!
தவமிருந்த ஹரித மகரிஷிக்கு காட்சியளித்த பெருமாள், திருமந்திரம், யோக சாஸ்திரம் ஆகிய நூல்களை எழுதச் செய்தார். இவை பெருமாளின் திருமொழிகளாக (ஸூக்தி) வெளியானவை என்பதால் ‘திருமொழிக்களம்’ என்ற காரணப்பெயர் உண்டாயிற்று; காலப்போக்கில் திரிந்து திருமூழிக்களம் என்றானது. கேரளத்தின் பிரதானமான கலா மண்டலமாக இத்தலம் விளங்கியுள்ளது.
கிருஷ்ணாவதாரத்தின்போது, கிருஷ்ணர் துவாரகையில் ராமன், லட்சுமணன், பரதன், சத்ருகனன் விக்கிரகங்களை வழிபட்டு வந்தார். ஒருசமயம் வெள்ளம் ஏற்பட்டு, இப்பகுதி தண்ணீரில் மூழ்கியது. அப்போது வாக்கேல் மைமல் முனிவரிடம் இந்த விக்கிரகங்கள் கிடைத்தன. அன்றிரவு அவரது கனவில் தோன்றிய திருமால், பாரதப்புழா ஆற்றங்கரையோர தலங்களில் விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்யுமாறு ஆணையிட்டார். அதன்படி திருச்சூர் மாவட்டம்- திருப்பறையார் ராமர் கோயில், இரிஞ்சாலக்குடா பரதன் கோயில், பாயமல் சத்ருகனன் கோயில், எர்ணாகுளம் மாவட்டம்- திருமூழிக்களம் லட்சுமணப் பெருமாள் கோயில் ஆகியவை அமைந்தன என்றும் தலபுராணம் கூறுகிறது. லட்சுமணன் பரதனிடம் ஏற்பட்ட அபசாரம் போக்க இங்கு தவம் இருந்ததாக ஐதீகம்.
மூலவர்: திருமூழிக்களத்தான், ஸ்ரீ ஸூக்திநாதன், லட்சுமணப் பெருமாள் (நின்ற திருக்கோலம்- கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்: மதுரவேணி நாச்சியார்.
விமானம்: சௌந்தர்ய விமானம்
தீர்த்தம்: பெருங்குளம், சங்க தீர்த்தம்
மங்களா சாசனம்: திருமங்கையாழ்வார், நம்மாழ்வார்.

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:
காலை 4.30 மணி முதல் 11.30 மணி வரை
மாலை 5.00 மணி முதல் 07.30 மணி வரை
எப்படிச் செல்வது?
கேரள மாநிலம், எர்ணாகுளத்திலிருந்து பேருந்தில் செல்லலாம். கரிக்குட்டி ரயில் நிலையத்தில் இருந்து 5.கி.மீ. தொலைவில் உள்லது இத்தலம்.
சேவிப்பதன் பலன்கள்:
குடும்பத்தில் ஏற்பட்ட பகை விலகவும் வேதங்கள் கற்று முன்னேறவும், தோஷங்கள் அகலவும் வந்து வணங்க வேண்டிய தலம் இது. குழந்தை பாக்கியம் வேண்டுவோர் இங்கு திருவோண பூஜை செய்கின்றனர்.
$$$