-கி.சாயிநாதன்
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது அறுபத்தொன்றாம் திருப்பதி...

61. வாமன அவதாரம் நிகழ்ந்த திருக்காட்கரை
யான் என் செய்வேன், யாதொன்றும் அறியேன்… தீது ஒன்றும் செய்யேன், திருக்காட்கரையப்பனே! வம்பொன்றும் சொல்லேன், வழக்கொன்றும் செய்யேன் – நான் தினம் நெஞ்சிலே உனை ஏற்றிச் சொல்வேன் நமோ நாராயணா எனும் சொல்!

வாமன அவதாரம் நிகழ்ந்த திருத்தலம் இது. மூன்றடி நிலம் தானம் கொடுத்த மகாபலி சக்கரவர்த்தியை, வாமனனாக வந்த பெருமாள் உலகளந்தவராக உருவெடுத்து மூன்றாவது அடியில் மகாபலியை பாதாளத்தில் அழுத்தி சம்ஹரித்தார். அப்போது பலிச் சக்கரவர்த்தியின் பிரார்த்தனையை ஏற்ற பெருமாள், ஆண்டுதோறும் ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தில் பாதாளத்திலிருந்து மலையாள தேசம் வர அருள் புரிந்தார். அதுவே திருவோணப் பண்டிகையாகும்.
பரசுராமரால் ஸ்தாபிக்கப்பட்ட, ஈராயிரம் பழமை வாந்ய்ந்த திருத்தலம் இது. கேரளபாணியில் ஓடு வேய்ந்த வட்ட வடிவக் கோயில். இக்கோயில் வளாகத்தில் சிவ பெருமானுக்கு தனிக் கருவறை உள்ளது. பலிச் சகரவர்த்தி வணங்கிய சிவன் இவர். வாமனரை வழிபடும் முன் சிவலிங்கத்தை வழிபடுவது மரபு. சைவ- வைணவ ஒற்றுமையின் சின்னமாக இக்கோயில் விளங்குகிறது.
இங்குள்ள மூலவர் வாமன அவதாரம் என்பதால், ஆயுதம் இன்றி காட்சி அளிக்கிறார். பெருஞ்செல்வ நாயகி தாயாருக்கு தனி சன்னிதி இல்லை. இக்கோயிலின் நுழைவாயிலில் மகாபலியின் ஆஸ்தானம் இருந்த இடத்தில் சிம்மாசனம் நிறுவப்பட்டுள்ளது. அங்கு பக்தர்கள் அகல்விளக்கேற்றி பலியை வழிபடுகின்றனர்.
மூலவர்: காட்கரையப்பன் (நின்ற திருக்கோலம்- தெற்கே திருமுக மண்டலம்)
தாயார்: பெருஞ்செல்வநாயகி, வாத்ஸல்யவல்லி
விமானம்: புஷ்கல விமானம்
தீர்த்தம்: கபில தீர்த்தம்
மங்களா சாசனம்: நம்மாழ்வார்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:
லை 4.30 மணி முதல் 11.00 மணி வரை
மாலை 5.00 மணி முதல் 08.00 மணி வரை
எப்படிச் செல்வது?
கேரள மாநிலத்தின் எர்ணாகுளம் மாவட்டத்தில், கொடுங்களூரில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம் (திரிகாக்கரா). ஷொரனூர்- எர்ணாகுளம் ரயில் மார்க்கத்தில் இடைப்பள்லி ரயில் நிலையத்தில் இறங்கினால், அங்கிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.
சேவிப்பதன் பலன்கள்:
விவசாயத்தில் நல்ல விளைச்சல் காணவும், பிரம்மஹத்தி தோஷம் நீங்கவும் வந்து வணங்க வேண்டிய தலம் இதுவாகும். 2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்கள் வந்து வணங்க வேண்டிய தலம் இது.
$$$