உருவகங்களின் ஊர்வலம் – 28

-பி.ஆர்.மகாதேவன்

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #28

28. கலைக் கள்ளனின் தந்திரங்கள்

    கள்ளப் பருந்துகள்
    விண் முட்டும் கோபுரக் கலசங்களின்
    இடைவெளியில் இட்டுச் செல்கின்றன
    போதி மர விதை பொதிந்த எச்சங்களை.

    (அம்மரம் முளைத்துக் கிடைக்கும் நிழலுக்காக அல்ல;
    பிரும்மாண்ட வாழ்வின் சாராம்சம் பொதிந்திருக்கும்
    சின்னஞ்சிறு கனிகளுக்காக அல்ல;
    பிரமாண்ட மரங்களின் இருள் பொருந்துகள்
    பதுங்கிக்கொள்ளப் பாதுகாப்பானவை என்பதால்…
    அதைவிட முக்கியமாக
    விண் முட்டும் கோவில் கோபுரத்தை
    அதைக் கொண்டு வீழ்த்த முடியும் என்பதால்)

    கோபுர உச்சியில்
    இளம் தென்றல் காற்றில்
    அதிகாலைச் சூரிய ஒளியில் மின்னியபடி
    அசைந்தாடத் தொடங்குகிறது
    அஹிம்சையின் தளிரிலை.
    வெளித் தெரியா அதன் வேர் ஊடுருவுகையில்,
    கோபுரத்தைத் தாங்கும்
    ஒவ்வொரு ஆதி சிற்பமும் விரிசலுறும்…
    ஒவ்வொன்றின் தலையும் உடைந்து உருளும்…
    கைகளில் இருக்கும் ஆயுதங்கள் உடைந்து விழும்…

    கலசங்களில் வந்தமரும் கருடனைப் போலிருக்கும்
    கள்ளப் பருந்துகளின் கவுச்சி வாடையை
    நுகர்ந்தறியத் தவறினால் கடைசியில் அழிவு நமக்கே.

    இந்த கோபுரத்தை நாமல்ல;
    கோபுரமே நம்மைத் தாங்கியிருந்தது என்பது
    பொம்மைகளுக்குப் புரியவரும்போது
    நிலைமை கை மீறிப் போயிருக்கும்.

    கோபுரம் இடிந்து விழுந்து நொறுங்கினால்
    சுற்றி அமைந்திருக்கும் நான்கு வீதி வீடுகளும்
    சேர்ந்து அழியும்.

    உச்சியில் மின்னும் தளிரிலையே
    வேர் விட்டுக் கிளைத்து விண் முட்ட எழுந்து நிற்கும்
    என்று நம்பியவர்களுக்கு இறுதியில்தான் புரியும்-
    அங்கு எழுவது புனித போதி மரமல்ல என்பது.

    எந்தப் படையெடுப்பும்
    எந்த ஈட்டி எறிதலும்
    எந்த வெடிகுண்டுத் தாக்குதலும் இல்லாமல்
    ஒரு பிரமாண்ட கோபுரமும்
    காலத்தின் கரும்பாசிகள் படர்ந்த
    அத்தனை அற்புதச் சிலைகளும் மூளியாகப் போவதை
    உச்சியில் அசைந்தாடும் தளிரிலை
    முடிவற்று வீசும் காற்றில் நடுங்கியபடி
    சுருக்கெழுத்தாக எழுதிக் காட்டுகிறது.

    தவறான இடத்தில் தன்னைக் கொண்டுவந்து போட்ட
    கள்ளப் பருந்தை அதனால் தண்டிக்க முடியாது.
    தன் இயல்பு மறந்து
    தளிர்க்காமல், தழைக்காமல் இருக்கவும் முடியாது.
    கள்வனின் ஆடைக்குள் பொதிந்துகிடக்கும்
    தெய்வத் திருமேனிக்கு மூச்சு முட்டுவதுபோல
    கோபுரக் கலச இடைவெளியில் கள்ளப் பருந்தினால்
    ஊன்றப்பட்ட திருட்டு விதையிலிருந்து முளைத்த அறியாத் தளிர்
    காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று நடுங்குகிறது.

    (அது தன்னை மட்டும் காப்பாற்றும்படி மன்றாடவில்லை).

    அண்ணாந்து பார்ப்பவர் அத்தனை பேரின் மனதிலும்
    அந்த நடுக்கம் மெள்ளப் பரவுகிறது.
    வெடி குண்டுகளை ஒத்த
    வெண் பளிங்குக் கும்மட்டங்கள்…
    பனிக் கத்தியை ஒத்த
    குச்சி கோபுரங்கள்…
    ஏற்படுத்தும் திகிலைவிட
    கோபுர உச்சியில் துளிர்க்கும்
    சாதுவான தளிரிலை
    உருவாக்கும் நடுக்கம் தாங்க முடியாததாக இருக்கிறது.

    தன் வீட்டுத் தோட்டத்தில்
    தன் தெருவின் நாற்சந்திப்பில்
    தன் கிராமத்தின் நுழைபாதையில்
    தன் ராஜ்ஜியத்தின் தலைநகரில்
    தழைத்தோங்கச் செய்யவேண்டிய அரச மரம்.
    (உண்மையில் அக்கறை இருந்தால்).

    ஆனால்,
    வெகு துல்லியமாகத் திட்டமிட்டு
    ஏதோவொரு கள்ளப் பருந்து கொண்டுவந்து போட்டது தெரிந்தும்
    தனக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்ற வெகுளித்தனத்துடன்
    அதி உன்னதங்களை
    ஆழ் மனத் தேடலாக கொண்ட பாவனையில்
    மெல்லுணர்வு கொண்ட கலைஞர்கள்
    கோபுர உச்சியில் தளிர்க்கும்
    போதி மரக் கன்றைப் பார்த்துப் புல்லரிக்கையில்,
    பளீறிட்டு மறைகின்றன
    ரத்தக் கறை படிந்த புலிப்பற்கள்.

    இயற்கையின் காதலர்கள்…
    கலை ரசனையின் ஆராதகர்கள்…
    தத்துவார்த்தத் தேடல்வாதிகள்…
    அத்தனைபேரின் கண்களில்
    கள்ளப் பருந்துகளின் செவ்வரியோடுகின்றன.

    அது சரி…
    போதி மரங்களை விரும்பும் பெளத்தனாக இருந்தால்
    அதை
    பூமியிலன்றோ துளிர்க்க விரும்புவார்?

    கோபுரங்களை இடிந்து விழவைக்க
    கலச இடைவெளியில் முளைக்க வைக்கப்படும்
    தளிர்களைவிடத் தந்திரமானது
    வேறெதுவாக இருக்க முடியும்?

    கள்ளத் தச்சன் யார் கண்ணுக்கும் தெரியாமல்
    தாய்த்தண்டின் சிறிய குழியில் ஊற்றும்
    தேக்கரண்டியளவு பாதரசத்தைவிடக் கொடூரமானது.

    கள்ளனிலும் கள்ளன்
    இந்தக் கலைக் கள்ளன்

    $$$

    Leave a comment