-சேக்கிழான்
தமிழகத்தில் வெகுஜன ஊடகங்களில் பணிபுரிவோர் பலரும் திராவிட அரசியல் கருத்தாக்கங்களுக்கு தங்களை அடியாட்களாக்கிக் கொண்டவர்கள். அவர்கள் ஊடகவெளியில் விதைக்கும் பலவிதமான நச்சுக் கருத்துகளுக்கு தனது நூலில் எளிய பதில்களை தர்க்கரீதியாகவும், சில இடங்களில் புரிய வேண்டியவர்களுக்குப் புரியவைக்கும் விதமாக குதர்க்கரீதியாகவும் கூறுகிறார் இந்நூலாசிரியர் திரு. பா.பிரபாகரன்....

ஒரு நாட்டை அடிமையாக்க வேண்டுமானால், அந்நாட்டு மக்களின் சிந்தனையை போலிக் கருத்துருவாக்கங்களால் மழுங்கடித்துவிட்டால் போதும் என்பது காலணியாதிக்க நாடுகளின் தந்திரம். இந்தத் தந்திரத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளில் பாரதமும் ஒன்று. அதிலும் குறிப்பாக, பாரதத்தின் ஓர் அங்கமான தமிழகம் இதனால் வெகுவாக சிதிலமடைந்திருக்கிறது.
எண்பது ஆண்டுகளுக்கு மேலாக, தமிழகத்தில் வினோதமான பல கருத்துருவாக்கங்கள் செல்வாக்கு செலுத்தி வருகின்றன. தமிழ்த் தேசியம் என்ற பெயரில் பிரிவினை சிந்தனை, ஹிந்தி எதிர்ப்பு என்ற பெயரில் மொழி வெறுப்பு, பகுத்தறிவுவாதம் என்ற பெயரில் ஹிந்து சமய நம்பிக்கைகளை எள்ளி நகையாடுதல், சமூகநீதி என்ற பெயரில் பிராமண வெறுப்பு, மதச்சார்பின்மை என்ற பெயரில் சிறுபான்மையினருக்குக் கொம்பு சீவுதல், சமஸ்கிருத எதிர்ப்பு என்ற பெயரில் ஆலய வழிபாடுகளில் தலையீடு, இனப்பெருமை என்ற பெயரில் ஆரிய- திராவிட இனவாதம் என்ற தவறான கற்பிதம், கூட்டாட்சி என்ற பெயரில் ஒன்றிய அரசு என மத்திய ஆட்சியை ஏளனம் செய்தல் உள்ளிட்ட உண்மைக்கு மாறான சிந்தனைகள் பலவும் விதைக்கப்பட்டு, அவை விஷ விருட்சங்களாகி நிற்கின்றன.
‘தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவர்க்கோர் குணமுண்டு’ என்று தேசியக் கவிஞர் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை பாடிய பாடல், தேசிய விடுதலைப் போரில் தமிழர்களின் பங்களிப்பை அதிகரித்த பாடல். இங்குதான் மகாகவி பாரதியும், வ.உ.சியும், ராஜாஜியும், காமராஜரும் அரசியல் நடத்தி இருக்கின்றனர். ஆனால், திராவிட அரசியல் இயக்கங்களின் வளர்ச்சியால் தேசிய சிந்தனை மட்டுப்பட்டு, பொய்களே அரிசந்திர அவதாரம் எடுத்தாடும் நிலையையே தற்போது மாநிலமெங்கும் காண்கிறோம். தமிழனின் குணம் பொய்களில் மயங்குவதாக மாறி இருக்கிறது; தேசியக் கவிஞரின் பாடல் இனவாதப் பொய்யர்களின் பாடலாக மாறி இருக்கிறது.
‘பாரத நாடு பழம்பெரும் நாடு; நீரதன் புதல்வர், இந்நினைவு அகற்றாதீர்’ என்று முழங்கிய மகாகவி பாரதியின் மண்ணில், இவ்வாறு சமூகவிரோத சக்திகளின் கருத்துருவாக்கங்கள் தலைவிரித்தாடுவது தேசபக்தர்களுக்கு வேதனை அளிக்கிறது. இதனை முளையிலேயே கிள்ளி எறிந்திருக்க வேண்டிய காங்கிரஸ் கட்சியின் கையாலாகாத்தனத்தால், முள் மரங்கள் பெருகிவிட்டன. சமதர்மக் கொள்கை பேசும் கம்யூனிஸ்டுகளும் கூட திராவிடப் புரட்டர்களின் வலையில் விழுந்து, அவர்களும் தி.க.வின் மறு அவதாரமாகி இருக்கின்றனர். சற்றும் சிந்திக்காமல், போலி ஆராய்ச்சியாளர்களும் சுயநல அரசியல்வாதிகளும் இட்டுக் கட்டிய திராவிடப் பொய்களை அப்படியே நம்புவதும், அதன் அடிப்படையில் வெறுப்பை உமிழ்வதும், தேசியத்தை அவமதிப்பதும் இங்கு தொடர்கிறது.
இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வராதா, தேசத்திற்கே வழிகாட்டிய தேசியவாதிகளின் மண்ணில் மீண்டும் தேசியம் மலராதா என்ற ஏக்கம் பரவி வரும் சூழலை நாம் இப்போது காணத் தொடங்கி இருக்கிறோம். அதன் ஒரு வெளிப்பாடுதான், எழுத்தாளர் திரு. பா.பிரபாகரன் அவர்களின் இந்நூல்.
தமிழகத்தில் வெகுஜன ஊடகங்களில் பணிபுரிவோர் பலரும் திராவிட அரசியல் கருத்தாக்கங்களுக்கு தங்களை அடியாட்களாக்கிக் கொண்டவர்கள். அவர்கள் ஊடகவெளியில் விதைக்கும் பலவிதமான நச்சுக் கருத்துகளுக்கு தனது நூலில் எளிய பதில்களை தர்க்கரீதியாகவும், சில இடங்களில் புரிய வேண்டியவர்களுக்குப் புரியவைக்கும் விதமாக குதர்க்கரீதியாகவும் கூறுகிறார் நூலாசிரியர்.
இந்து மதம் (1-16), கலாச்சாரம் ((17-21), பொது (22-31), திராவிடன் (32-45), விடுபட்டவை (46-59) என்ற 5 பிரிவுகளில் 59 கேள்விகளை எழுப்பி, அற்புதமான பதில்களை அளித்திருக்கிறார். திராவிடப் போலிகளை எதிர்கொள்ள விரும்பும் தேசிய உள்ளங்களுக்கு இனிய வழிகாட்டியாக இந்நூல் அமைந்துள்ளது என்று சொன்னால் மிகையில்லை. நூலாசிரியர் பதில் அளித்துள்ள சில கேள்விகளின் பட்டியலைப் பார்த்தாலே, நூலின் அருமை புரியும்:
- இந்து மதத்தில் பல கடவுள்கள் இருப்பது ஏன்?
- முருகன் தமிழர்களுக்கு மட்டுமான கடவுளா?
- இந்து மதத்தில் பிறப்பால் உயர்வு – தாழ்வு கற்பிக்கப்பட்டது உண்டா?
- இந்து திருமண மந்திரங்கள் ஆபாசமானதா?
- சம்பூகவதம் உண்மையா?
- வள்ளல் பெருமான் புதிய மதத்தை ஏற்படுத்தினாரா?
- தமிழ்ப் புத்தாண்டு நாள் எது?
- மத்திய பாஜக அரசு ஹிந்தியைத் திணிக்கிறதா?
- தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை பெரியார்தான் கொண்டுவந்தாரா?
- தமிழில் அர்ச்சனை செய்தால் இறைவன் ஏற்க மாட்டானா?
- கீழ்வெண்மணி போராட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு திராவிட இயக்கங்கள் உதவினவா?
- சமூகநீதியை திராவிட இயக்கங்கள்தான் நிலைநாட்டினவா?
- தமிழகம் பெரியார் மண்ணா?
- திராவிட மாடல் என்றால் என்ன?
- நீட் தேர்வு கிராமப்புற மாணவர்களூக்கு எதிரானதா?
இதுபோன்ற கேள்விகளுக்கு நூலாசிரியர் அளித்திருக்கும் பதில்கள் புதிய கோணத்தில் இருப்பதுடன், அற்புதமான வாதத் திறனுடனும் இலங்குகின்றன. இந்நூலை வெளியிட்டிருக்கும் தாமரை மீடியா நிறுவனம் பாராட்டுக்குரியது. நூலின் ஒரே குறை அதிகமான எழுத்துப்பிழைகள் தான். அவசரப் பதிப்பு போல இப்பிழைகள் தோற்றமளிக்கின்றன. அடுத்த பதிப்புகளில் இந்தக் குறைகளைக் களைவது நூலின் சிறப்பைக் கூட்டும்.
தேசியவாதிகள் இதுநாள் வரை தங்கள் முன்பு வைக்கப்படும் கிறுக்குத்தனமான கேள்விகளுக்கு பதில் கூறி தற்காப்பு நிலையில் போலிக் கருத்துருவாக்கங்களுடன் போராடி வந்தனர். அதனை மாற்றி, போலிக் கருத்தாளர்களுக்கு கிலியை ஏற்படுத்தும் தாக்குதல் பாணி கருத்துருவாக்கத்தை எழுத்தாளர் திரு. பா.பிரபாகரன் இந்நூலில் அறிமுகம் செய்திருக்கிறார்.
பொய்களின் சாம்ராஜ்யத்தில் உண்மையின் இருப்பு என்பது அடர்ந்த இருளில் ஒளிரும் அகல் விளக்கு போன்றது. இந்த அகல்விளக்கின் சுடர் பரவும்போது, இருள் மடியும்; தமிழகத்தைப் பீடித்த கயமைகள் ஒழியும். இந்த அகல் விளக்கின் சுடரில் இருந்து பொய்மைப் புதர்களை எரிக்கும் தீப்பந்தங்களை உருவாக்க வேண்டியது, தேசிய சிந்தனை கொண்ட நல்லோரின் கடமை.
***
நூல் குறித்த விவரம்:
திராவிட கேள்வியும் தேசிய பதிலும் -பா.பிரபாகரன் முதல் பதிப்பு: ஏப்ரல் 2023 176 பக்கங்கள், விலை: ரூ. 230- வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், 21, ‘லட்சுமி’ சத்யசாய் நகர், மதுரை – 625 003 வாட்ஸ் ஆப் மூலம் வாங்க: 75500 09565
$$$