உருவகங்களின் ஊர்வலம் – 27

-பி.ஆர்.மகாதேவன்

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #27

27. கருப்புக் கண்ணாடியை கழற்றி எறியுங்கள்!


ஆலயப் பிரவேசம் அறப் போராட்டம் அல்ல;
பெற்றோர் மூலம் கிடைத்த குல தெய்வத்தைவிட்டு
மற்றோர் தெய்வம் ஒன்றைக்
கட்டாயப்படுத்திக் கும்பிட வைத்த
கண்ணியமற்ற நிகழ்வு மட்டுமே.

    மற்றவருக்குக் கிடைப்பதெல்லாம்
    தனக்கும் கிடைப்பது அல்ல;
    தனக்கு வேண்டியது தடையின்றிக் கிடைப்பதே
    தன்னிறைவான வாழ்வுக்கு அவசியம்.

    ஆதியிலிருந்தே அவரவருக்கான ஆலயத்தில்
    அவரவர் பிரவேசிக்கத்தான் செய்திருக்கிறார்கள்.
    அப்படியாக,
    அவரவர் குல தெய்வங்களைக் கும்பிட்டுவந்தவர்களை
    அடுத்தவர்களுடைய குல தெய்வத்தை
    வம்படியாக வணங்க வைத்ததையே
    ஆகப் பெரிய சாதனையாகச் சொல்கிறோம்.

    அவரவர் குல தெய்வ ஆலயத்தில் அர்ச்சகராக இருந்தவர்களை
    அடுத்தவர்களுடைய குல தெய்வத்துக்கு அர்ச்சகராக்குவதையே
    ஆகப் பெரிய லட்சியமாகச் சொல்கிறோம்.

    *

    தெய்வம் ஒன்றே-
    தெய்வ உருவங்கள் ஒன்றல்ல…
    பக்தி ஒன்றே-
    வழிபடு முறைகள் ஒன்றல்ல;
    ஒன்றாக இருக்க அவசியமில்லை.
    ஒன்றாக இருக்க வாய்ப்புமில்லை.

    இந்துக்கள் எல்லாரும் ஒன்று என்றால்
    ஓர் இந்துவின் தெய்வத்தை
    இன்னோர் இந்து கும்பிடுவதில் என்ன தவறு?
    தமிழர்கள் எல்லாரும் ஒன்றுதான்
    ஒரே மாதிரியான தமிழையா பேசுகிறார்கள்?

    தஞ்சைத் தமிழ்ப் பேச்சு வழக்கு வேறு…
    கோவைத் தமிழ்ப் பேச்சு வழக்கு வேறு…
    நெல்லைத் தமிழ்ப் பேச்சு வழக்கு வேறு…
    மதுரைத் தமிழ்ப் பேச்சு வழக்கு வேறு….
    நெல்லைக்காரரை தஞ்சைத் தமிழில் பேசக்கூடாதென்பது தவறுதான்.
    ஆனால்,
    நெல்லைக்காரரை தஞ்சைத் தமிழில் பேசவிடாமல்
    யாரும் தடுக்கவில்லை.

    நெல்லையில் பிறந்ததால் நெல்லைத் தமிழ் பேசினார்.
    தஞ்சையில் பிறக்காததால் தஞ்சைத் தமிழ் பேசவில்லை.
    நெல்லைக்காரரை தஞ்சைத் தமிழில் பேசவைப்பது
    சாதனை அல்ல… சர்வாதிகாரமே.

    கோவைக்காரர் கோவைத் தமிழில் பேசி வந்ததென்பது
    பிற தமிழர்கள் செய்த ஒடுக்குமுறையும் அல்ல.

    ஒரே மொழியென்றாலும்
    பேச்சு வழக்கில் இருக்கும் மாறுபாடுபோன்றதுதான்
    ஒரே இந்து என்றாலும்
    குல தெய்வங்களில் இருக்கும் வேறுபாடுகள்.

    எல்லா இந்துவையும்
    எல்லா இந்து தெய்வத்தையும் கும்பிட வைப்பதை
    கண்ணியமாகச் செய்திருக்கலாம் –
    கலகமாக அல்ல.

    கிறிஸ்தவத்துக்கு இயேசு
    இஸ்லாமுக்கு நபி
    பெளத்தத்துக்கு புத்தர்
    சமணத்துக்கு மஹாவீரர்
    சீக்கியத்துக்கு குரு நானக்
    ஒரே தெய்வம் என்றால்
    ஒன்றாக வழிபடலாம்.
    ஒன்றாக வழிபட வேண்டும்.

    ஓராயிரம் தெய்வங்கள் என்றால்..?

    நடுகல் வழிபாட்டை ஆரம்பித்தவர் யார்?
    நதி வழிபாட்டை நிலைநாட்டியவர் யார்?
    நாக வழிபாட்டை உருவாக்கியவர் யார்?

    நாக வழிபாட்டை உலகம் முழுவதும் பரப்ப
    நாக வழிபாட்டினர் விரும்பியிருக்கவில்லை.

    நடுகல் வழிபாட்டை அடுத்தவர் மேல் திணிக்க
    நடுகல் வழிபாட்டினர் விரும்பியிருக்கவில்லை.

    தாய்த் தெய்வ வழிபாட்டை
    தாய் தந்தையிடமிருந்தே பெற்றுக்கொண்டனர்.

    ஆகம ஆராதகர்கள்
    ஆகமக் கோவில்களில் கும்பிட்டனர்.
    திறந்தவெளிக் கோயிலுக்கும்
    ஆயிரம் ஆகமங்கள் உண்டு.

    ஒற்றைக் கடவுளைக் கும்பிடும் கும்பலிலும்
    அவரவருக்கான சர்ச்,
    அடுத்தவரை நுழைய விடாத மசூதி,
    அன்னையருக்கும் அனுமதி இல்லாத மசூதி என
    அங்கும் உண்டு அவர்களுக்கான ஆகமங்கள்.

    இணைவைப்பை விரும்பாத
    வஹாபிஸ்டுகளை இழுத்துவந்து
    தர்காவுக்குள் தலை குனிந்து தொழவைத்து
    சமத்துவத்தை நிலைநாட்டேன் சமூக நீதிக் கும்பலே!

    ஒரே இஸ்லாமியர்கள்தானே; ஒரே பிரியாணிதானே?
    என்ன…
    அடுத்த பாயாவை ஆட்டுக்காலில் போட மாட்டார்கள்
    அப்படித்தானே?

    *

    ஆலயப் பிரவேசத்துக்கு முன்னால்
    சாமியே கும்பிடவிடாதது போலச் சலம்புவது-
    சமத்துவ டூத் பேஸ்ட் கண்டுபிடிப்பதற்கு முன்
    பல் தேய்க்கவே இல்லை;
    பல்தேய்க்கவே விடவும் இல்லை என்றும் சொல்வது போன்றது.

    வேப்பங்குச்சியாலும்
    உமிக்கரியாலும்
    உப்பாலும் பல் தேய்த்தவர்களை,
    ‘உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கா?’ என்று கேட்டவர்தான்
    உலக வரலாற்றிலேயே முதல் முறையாக
    பல் தேய்க்கக் கற்றுக் கொடுத்தார் என்பது போன்றது.

    பாய் பிரியாணி கொடுப்பதற்கு முன்…
    ப்ரோ கேக் கொடுப்பதற்கு முன்…
    நாம் பட்டினியாகத்தான் கிடந்தோம் என்று
    நாளை சொன்னாலும் சொல்வான்கள்.
    நாக்குச் செத்த கூட்டம் அதை நம்பவும் கூடும்.

    *

    பக்தி சிரத்தை இல்லாதவராக இருந்தாலும்,
    உயர் ஜாதியினர் என்றால் எல்லா உரிமையும் உண்டு.
    அல்லாத ஜாதியினரென்றால்
    எவ்வளவு பக்தி இருந்தாலும் இருந்தாலும்
    எந்தவொரு சலுகையும் கிடையாது.
    இது தவறுதான்.

    குழந்தைகளின் தவறுகளைத்
    தாயும் தந்தையும் பொறுத்துக் கொள்வார்கள்.
    குலத்தினரின் குற்றம் குறைகளை
    குல தெய்வம் பொறுத்துக் கொள்ளும்.
    தன் குழந்தை மீதான கூடுதல் பாசம் தவறொன்றுமில்லையே?
    தன் குலத்தினருக்கான தனிச் சலுகையில் குறையொன்றுமில்லையே?

    என்றாலும் கீதாச்சார்யன் சொன்னதுபோல
    பிறப்பு தீர்மானிக்கக் கூடாது-
    குணமும் கர்மங்களுமே தீர்மானிக்க வேண்டும்.
    உண்மைதான்.

    பக்தியில்லாத உயர் ஜாதிக்காரனை
    ஆலயத்திலிருந்து விலக்கி வை;
    தீக்ஷைபெற்ற தாழ்ந்த ஜாதிக்காரரை
    ஆலயத்துக்குள் அனுமதி…
    பக்தியைக் கொண்டல்லவா
    ஆலயக் கதவுகளைத் திறந்திருக்க வேண்டும்?

    பிறப்பு சார்ந்த பாகுபாடு கூடாது-
    பக்தி சார்ந்த விதிமுறையுமா கூடாது..?

    பலி கேட்கும் தெய்வத்தை பலியிட்டு வணங்கு.
    தீக்ஷை விதிக்கும் தெய்வத்தை தீக்ஷை பெற்று வணங்கு.
    இதுதானே அறம் சார்ந்த தீர்வு?
    ஆன்மிகம் சார்ந்த தீர்வு?

    அரசியல் மதங்களை எதிர்க்க
    ஆன்மிக மதங்களுக்கும்
    அரசியல்மயமாக வேண்டிவந்துவிட்டது இல்லையா?
    வேறென்ன,
    பூவோடு சேர்வது நாரும் மணம் பெறும்.
    நெருப்பாக இருந்தால்..?

    *

    சமூக சமத்துவம் முதலில்
    லெளகிகத் தேவைகளில்தான் அவசியம்…
    உணவு உடை உறையுள்ளில் அவசியம்.
    கல்வியிலும் மருத்துவத்திலும் கைத்தொழிலிலும் அவசியம்.
    கொடுத்துக் கிழித்துவிட்டாயா..?

    எல்லாரும் படிக்கலாம்
    ஆனால்,
    எல்லாருக்கும் வேலை கிடைக்காது.
    லட்சம் பேருக்குத் திறமை இருந்தாலும்
    ஆயிரம் பேருக்குத்தான் நல்ல வேலை.
    இதுதானே இன்றைய சமத்துவம்?

    படித்தவருக்கும் படிக்காதவருக்கும்
    பிறப்பு சமம் தானே
    பின் ஏன் வேறுபாடு?

    *

    நோய் மிகுந்தவருக்கு சிகிச்சையில் முன்னுரிமை…
    அறிவில் குறைந்தவருக்கு பள்ளியில் முன்னுரிமை…
    தர முடிந்ததா என்ன?

    காசுள்ளவனுக்கு நல்ல மருத்துவம்; நல்ல கல்வி
    இல்லாதவனுக்கு
    அரசு மருத்துவமனை; அரசுப் பள்ளி.

    இலவசமாகத் தருவதால் இழிவுபடுத்தித் தருகிறாய்.
    தன் குழந்தைக்கு ஏன் தரமான கல்வி கிடைக்கவில்லையென்று
    அரசுப் பள்ளி ஆசிரியரிடம் அப்பாவி மக்கள்
    உரிமைக்குரல் எழுப்ப முடியுமா?

    நீதிபதிப் பதவிகளே நீங்கள் போட்ட பிச்சை.
    ஆயா வேலைக்குக்கூட உத்தரவாதம் தர முடியாத
    அரசுப் பள்ளிப் படிப்புதான்
    உங்களின் ஆகப் பெரிய சாதனை.
    அவ்வளவுதானே?

    சற்று வெளிப்படையாக
    மிதமாக இருந்த ஏற்றத்தாழ்வை
    தந்திரமாக – கொடூரமாக
    மாற்றியமைத்ததுதானே சமூக நீதி?

    *

    ஆன்மிகத்தில் சமத்துவம் அவசியமில்லை;
    கோயிலுக்குள் வரக் கூடாதென்றால்
    வீட்டைக் கோவிலாக்கிக் கொள்.
    ஆண்டவன் இல்லாத இடம் ஏது?
    பக்தனின் உள்ளமே ஆண்டவனின் கோயில்.

    நட்ட கல்லைச் சுற்றி வந்து
    நாலு புஷ்பம் சார்த்த வேண்டிய தேவையே இல்லை-
    நாதன் உன்னுள் இருக்கையிலே.

    சாமி கும்பிடவெல்லாம் விரும்பவில்லை.
    நீ வரக் கூடாதென்று சொன்னால்
    நான் வந்தே தீருவேன் என்பேன்.
    உன் சமூக நீதிப் போராட்டம் என்பது
    வெறும் அசட்டு ஈகோ மோதல் தானே?

    *

    பார்ப்பனரல்லாதவரையெல்லாம்
    பார்ப்பானாக விடவில்லை என்பதுதானே
    பார்ப்பான் செய்த ஆகப் பெரிய குற்றம்?

    சமத்துவ புத்தர் அதைத்தான் சொன்னார்:
    மதுவை விடு!
    மாதுவை விடு!
    மாமிசத்தை விடு!
    தியானம் செய்!
    தவம் செய்!
    அற வழியில் வாழும் அந்தணராகு!
    எவ்வுயிருக்கும் செந்தன்மை பூண்டு ஒழுகு!
    மடாலயத்துக்குள் அனைவரும் சமமே!
    அணி திரண்டிருக்க வேண்டியது தானே –
    அத்தனை பேரும் அவர் பின்னால்?

    *

    கிறிஸ்தவத்துக்குள் யார் வேண்டுமானாலும் வரலாம்-
    ஆனால், முருகனைக் கும்பிடுவதை நிறுத்த வேண்டும்.
    இஸ்லாமுக்குள் யார் வேண்டுமானாலும் வரலாம்-
    தாய் தெய்வங்களைக் கும்பிடுவதை நிறுத்த வேண்டும்.
    ஆங்கிலத்தை யார் வேண்டுமானாலும் கற்கலாம்-
    தாய்மொழி வழிக் கல்வியைக் கைவிட வேண்டும்.

    சமஸ்கிருதத்தைப் படிக்கவிடவில்லை-
    உண்மையென்றே வைத்துக் கொள்வோம்.
    தாய்மொழிக் கல்வியைப் பறிக்கவில்லையே?
    ஆகமக் கோவிலில் நுழைய விடவில்லை-
    உண்மையென்றே வைத்துக்கொள்வோம்.
    குல தெய்வத்தைக் கும்பிடுவதைத் தடுக்கவில்லையே?

    உன் தாயுடன் உன்னை இருக்கச் செய்தவர்
    உன்னை வெறுத்து விலக்கிவைத்துவிட்டார்.
    உன் தாயிடமிருந்து உன்னைப் பிரித்தவர்
    உன் மீது சகாயம் கொண்டவர்!
    அப்படித்தானே?

    உரைநடைத் தமிழுக்கு
    அனைவரையும் கட்டாயப்படுத்துவது போன்றது
    ஆலயப் பிரவேசம்
    தாய்மொழிக் கல்வியை அழிப்பதற்கு இணையானது
    மதமாற்றம்

    *

    ஒற்றைக் கண் குருடன் ஒருவன்
    கறுப்புக் கண்ணாடியைப் போட்டுக்கொண்டு
    ஊரை ஏமாற்றியிருக்கிறான்.
    அவனைப் பார்த்து ஒரு தலைமுறையே
    கறுப்புக் கண்ணாடியைப் போட்டுக்கொண்டு
    காட்சிகளைத் தொலைத்திருக்கிறது.

    என்றைக்கு அந்தக் கறுப்புக் கண்ணாடியை
    கழற்றி எறிகிறோமோ அன்றைக்கே
    இழந்த கண் பார்வை மீண்டும் கிடைக்கும்.

    அதுவரை…
    மற்றவருக்கெல்லாம் காவி நிறமாகத் தெரியும் வானம்
    நமக்கு கருப்பாக மட்டுமே தெரியும்.
    மற்றவருக்கெல்லாம் செந்தாமரையாகத் தெரிவதெல்லாம்
    நமக்கு கருகிய மலராகவே தெரியும்.

    அந்தக் கருப்புக் கண்ணாடியை உடைக்காமல்
    நம் உலகில் வண்ணங்களே மலராது.

    $$$

    Leave a comment