-கி.சாயிநாதன்
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது ஐம்பத்தேழாம் திருப்பதி...

57. நம்பாடுவானுக்காக கொடிமரம் விலகிய திருக்குறுங்குடி
அஞ்சுதலை மீது ஆடியவன் நீலம்! பஞ்சவரைக் காத்த கிருஷ்ணன் உண்டமுலை நீலம்! அஞ்சும் நஞ்சு ஆலகாலம் தந்த நிறம் நீலம்! நெஞ்சில் நாமகிரி கொண்டவனோ அடைந்தகடல் நீலம் – என எல்லாமே ஏன் நீலம், திருக்குறுங்குடி நின்ற நம்பியப்பனே நீயெனக்கு எடுத்துரைப்பாயே!
திருநாளைப்போவார் (நந்தனார்) நாயனாரின் சிவ தரிசனத்திற்காக திருப்புன்கூர் கோயிலில் நந்தி விலகியதுபோல, வடிவழகிய பெருமாளின் தரிசனத்திற்காக, நம்பாடுவான் என்ற பரம பக்தருக்கு கொடிமரம் விலகிய தலம் இது. பக்தர்களிடையே தாழ்ந்தவன் – உயர்ந்தவன் பேதம் இல்லை என்பதை பெருமாள் நிலைநாட்டிய தலம். திருமங்கையாழ்வார் பரமபதம் அடைந்த தலம். அவரது திருவரசு இங்குள்ளது. இக்கோயிலின் உள்ளேயே சிவன் கோயிலும் பைரவர் சன்னிதியும் அமைந்திருப்பதும் சிறப்பு. நின்ற, அமர்ந்த, நடந்த, கிடந்த, இருந்த- என ஐந்து நிலைகளில் பெருமாள் அனுகிரஹிக்கும் தலமும் இதுவே.

மூலவர்: வடிவழகிய நம்பி, குறுங்குடிநம்பி (நின்ற திருக்கோலம்- கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்: குறுங்குடிவல்லி நாச்சியார்
விமானம்: பஞ்சகேதக விமானம்
தீர்த்தம்: திருப்பாற்கடல், பஞ்சதுறை
மங்களா சாசனம்: நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார்
திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:
காலை 4.00 மணி முதல் 10.30 மணி வரை
மாலை 5.00 மணி முதல் 07.15 மணி வரை

எப்படிச் செல்வது?
நான்குநேரியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது திருத்தலம். வள்ளியூர், களக்காடு ஆகிய இடங்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது.
சேவிப்பதன் பலன்கள்:
செய்த பாவங்கள் தீர வேண்டும் என நினைப்பவர்கள். தோஷங்கள் விலக வேண்டும் என நினைப்பவர்கள், வந்து வணங்க வேண்டிய தலம் இது. 2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்கள் வந்து வணங்க வேண்டிய தலம் இதுவாகும்.
$$$