திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -56

-கி.சாயிநாதன்

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது ஐம்பத்தாறாம் திருப்பதி...

56. பெருமாள் நர்த்தனமாடிய திருக்குளந்தை

தேவகி மைந்தனைத் தேடி அலைகின்றேன்...
காண முடியவில்லை, காட்சிக்குத் தெரியவில்லை!
யசோதை தாய் அழைத்தால் மாதவன் வருவானா?
கோசலை தான் அழைத்தால் கோதண்டன் வருவானா?
பார்த்தனின் தேர்வந்தால் பார்த்த சாரதி வருவானா?
குசேலனின் அவல் இருந்தால் கோபாலன் வருவானா?
யாதுநான் செய்வேன், யாதொன்றும் அறியேன் -  அந்த
கோகுலத்து தெருக்களுக்கோ திருப்பாதம் பட்ட பலன்!
கோபியர் யாவருக்கும் குழல் ஓசை கேட்ட பலன்!
துளசி இலைக்கெல்லாம் தின்தோள் கண்ட பலன்!
கமலா மகனுக்கோ கண்ட பலன் யாது சொல்வேன்?
திருக்குளந்தை ஸ்ரீனிவாசனே மாயபிரானே – உன்
திருக்காட்சி காணும் பலன் தருவாயே!

நவ திருப்பதிகளில் சனிபகவான் தலம். வேதசாரனுக்கும் குமுதவல்லிக்கும் பிறந்த கமலாவதியை பேருமாள் மணம்புரிந்தார். குமுதவல்லியை அஸ்மாசுரன் சிரை பிடித்தபோது, பெருமாள் அவனை வதம் செய்து அவன் மீது நர்த்தனமாடியதால் மாயக்கூத்தன் என்று பெயர் பெற்றார்.

மூலவர்: வேங்கடவாணன், ஸ்ரீநிவாசன் (நின்ற திருக்கோலம்- கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்: அலமேலுமங்கை தாயார், கமலாவதி, குழந்தைவல்லி தாயார்
உற்சவர்: மாயக்கூத்தன்
விமானம்: ஆனந்தநிலைய விமானம்
தீர்த்தம்: பெருங்குள தீர்த்தம்
மங்களா சாசனம்: நம்மாழ்வார்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:

காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரை
மாலை 4.00 மணி முதல் 7.00 மணி வரை

எப்படிச் செல்வது?

ஸ்ரீவைகுண்டத்திலிருந்து சுமார் 12  கி.மீ. தொலைவில், வடகிழக்கில் ஏரல் செல்லும் பஸ்ஸில் சென்று இத்தலத்தை அடையலாம். புளியங்குடியில்  இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது இத்திருத்தலம்.

சேவிப்பதன் பலன்கள்:

திருமணத் தடை நீங்க, எதிரிகள் தொல்லை அகல, நினைத்த காரியம் வெற்றி பெற வந்து வணங்க வேண்டிய கோயில் இது.  2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்கள் இங்கு வந்து வணங்க நலம் பெறலாம்.

$$$

Leave a comment