-பி.ஆர்.மகாதேவன்
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #25

25. நமக்கேயான ஓவியம்
நீங்கள் கொன்று குவித்த பூர்வகுடிகளின் சாபமா?
அப்படியென்றால்
ஐரோப்பிய அரக்கர்களால்
இந்த உலகில் ஒன்றில் கூட
ஒற்றை அங்குல உயரத்தைக்கூட எட்டியிருக்க முடியாதே…
பொய் சொல்லிக் கற்றுக்கொண்ட வித்தை
நிர்கதியாக நிற்கும் தருணத்தில்
நினைவுக்கு வராமல்போகும் என
கற்றுக் கொடுத்த குரு
கமண்டல நீர் தெளித்துக் கொடுத்த சாபமா?
அடிமைப்படுத்திய காலனிய நாடுகளில் இருந்து
கற்றுக் கொண்டவையெல்லாம் இல்லையென்றால்
உங்கள் கண்டங்களே இல்லாமல் அழிந்திருக்குமே.
பல கோடி ஆன்மாக்களின் பணிவான பிரார்த்தனையா…
அதற்கும் வழியில்லையே…
உள்ளுக்குள் கறுவும் ஊடுருவல் கூட்டம்தானே
உண்மையில் அதிகம்?
கடைசிக் கட்டத்தில்
கடைநிலை அணிகூட வெல்ல முடிந்த இலக்கை
கை நழுவ விட்டதன் பின்னால் எந்தக் கை இருக்கிறது?
அராஜக அணி ஒன்றை வெறியேற்ற
சொந்த சகோதரனிடம்
கடைசிக் கட்டத்தில் விட்டுக் கொடுத்தது போன்ற
ஸ்நேகத்தின் கைகளா?
இறுதிப் போட்டியில் அப்படியான உணர்வுக்கு
இடமே இல்லையே?
தனக்கான பள்ளத்தை சற்றும் மனம் தளராமல்
தானே வெட்டிக்கொள்ளும் தன்னிகரற்ற கரங்களா?
இம்முறை அது இல்லை என்றுதானே
இறுதிவரை நம்பவைத்திருந்தது இயற்கை?
எளிய பிரார்த்தனைக்கு எப்போதாவது அருளும்
ஏகாதிபத்தியக் கைகளா?
மாயப் பகடைகளை உருட்டி ஆடும் சூதின் கைகளா?
அழுத குழந்தையை
அள்ளி எடுத்துப் பால் கொடுக்கும்
வெற்றி அன்னையின் கைகளா?
கண்ணும் காதும் எலும்பும் சதையும்
அத்தனையும் எரிந்த பின்னும்
சாம்பலில் இருந்து
அத்தனையையும் அள்ளிச் சேர்த்து
உயிர் பெற்று
ஒவ்வொரு உறுப்பையும் உருவாக்கிக் கொண்டு
சீறிப் பாய்ந்துவரும் பீனிக்ஸ் பறவையின்
சிறகுக் கைகளா?
ஏதோவொன்று வரைந்த சித்திரம்.
இத்தனை அழகாக இதற்கு முன் இருந்ததில்லை.
வேறென்ன,
வெள்ளைக் கேன்வாஸில்
ஆரம்பக் கரிக்கோடுகள் தொடங்கி
அத்தனை வண்ணங்கள் தீட்டப்பட்டபோதும்
அசையாமல் சிலையாக அமர்ந்த நமக்கு
ஆதி ஓவியனின் கைகள் அருமையாக
நம்மையே ஓவியமாக்கி வரைந்து தந்திருக்கும்
நமக்கேயான ஓவியம்.
இந்த ஜென்மத்துக்கு
இந்தச் சித்திரம் போதும்.
$$$