-பி.ஆர்.மகாதேவன்
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #23

23. சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போல வருமா?
தான் உருவாக்கிய இந்த உலகம் எப்படி இருக்கிறது என்று
இறைவன் ஒரு மீள் ஆய்வுக்கூட்டம் ஏற்பாடு செய்தார்.
இரண்டு கண், இரண்டு காது என்று கொடுத்தியிருக்கிறாயே,
இரண்டு உயிர் தந்திருக்கக் கூடாதா?
ஒரு உயிர் போனால் இன்னொரு உயிர்
அங்கிருந்தே ஆரம்பித்துக் கொள்ளும்படியாக.
ஒவ்வொரு பிறவியின் கணக்கு வழக்குகளை
அந்தந்தப் பிறவியிலேயே சரி செய்து அனுப்பக் கூடாதா?
ஒரே ஒரு இனப்பெருக்க உறுப்பு தந்திருக்கிறாயே,
ஒன்று தீர இன்னொன்று என்று
ஒன்றுக்குமேல் சிலவற்றைத் தந்திருக்கக் கூடாதா?
இயற்கைப் பேரிடர்களை எல்லாம்
இதமாக்கித் தரக் கூடாதா?
மழை தேவைதான்… வெள்ளம் தேவையா?
காற்று தேவைதான்… புயல் தேவையா..?
தாவரங்களைப் போலவே
தன் உணவைத் தாமே தயாரித்துக் கொள்ளும்படி
அத்தனை விலங்குகளையும்
அஹிம்சை வழியில் வாழ வைத்திருக்கக் கூடாதா?
மரணம் இருந்துவிட்டுப் போகட்டும்.
நோயின்றி வாழ முடிந்தால்தான் என்ன பெரிய குற்றமா?
இளமையாகவே இறுதி வரை
இருக்க முடிந்தால் என்ன பெரிய இழப்பா?
உடல் குறைபாடுகளின்றியே
எல்லா உயிர்களும் பிறக்கட்டுமே?
பிற உயிரைத் தன் உயிர்போல் நேசிப்பதையே
அத்தனை உயிர்களின் நிரலிலும்
அழுத்தமாகப் பதிவு செய்திருக்கலாமே?
போர்கள் என்றால் உயிர் பலியாக வேண்டுமா என்ன?
விளையாட்டுப் போட்டிகள் மூலம்
வீரத்தை வெளிப்படுத்தவும்
வெறியைத் தணித்துக் கொள்ளவும் வைத்திருக்கலாமே?
போர் வேண்டாம் என்ற ஞானத்தை
புத்தனுக்கு மட்டும் ஏன் கொடுத்தாய்?
அத்தனை மன்னருக்கும் அதை அருளியிருக்கலாமே?
புத்தன் அவனாகவே அதை கண்டடைந்தான் என்றால்
அந்த நிமிடமே அவனை இறைவனாக்கிவிட்டு
அவனிடம் அடைக்கலம் தேடியிருக்கலாமே?
புலனடக்கம் என்ற பேரில்
அத்தனை சுகங்களையும் பறித்துவிடுவான் என்றால்,
போரற்ற உலகுக்கு மட்டும்
அவனைப் பொறுப்பாக்கியிருக்கலாமே?
நான் நிலத்தை மட்டுமே படைத்தேன்.
நாடுகளையும் முள் வேலிகளையும்
நீங்களே உருவாக்கிக் கொண்டீர்கள்.
நான் மனிதர்களை மட்டுமே படைத்தேன்.
எஜமானர்களையும் அடிமைகளையும்
நீங்களே உருவாக்கிக் கொண்டீர்கள்.
மழை வந்தால் மேடான பகுதிக்குச் செல்லுங்கள்.
புயல் வந்தால் குகைகளுக்குள் செல்லுங்கள்.
என்றெல்லாம் சொல்லித் தப்பிக்கப் பார்ப்பதைவிட
ஏதேனும் உருப்படியாகச் செய்தால் நல்லது இறைவா!
*
உங்கள் ஆலோசனைகள் அனைத்துக்கும் நன்றி
இப்படியான ஒரு உலகை என் அருகில்
நான் உருவாக்கித்தான் வைத்திருக்கிறேன்.
மூப்பில்லை, பிணியில்லை
சாக்காடில்லை.
முடிவற்ற இன்பம், எல்லையற்ற கருணை.
போரில்லை, புயலில்லை.
எங்கே… எங்கே?
இன்றே புறப்படுகிறோம்.
அத்தனை உயிர்களும் அவசரப்பட்டன.
நல்லது, இந்த நொடியே புறப்பட்டு வாருங்கள்.
நான் படைத்த இந்த பூமி உங்களுக்கு
அத்தனை கஷ்டமாக இருக்கிறதென்றால் என்றார் கடவுள்.
அந்த உலகின் பெயர் என்ன…
எங்கே இருக்கிறது?
அது உங்களுக்குத் தெரியுமே!
எங்களுக்குத் தெரியுமா..?
ஆமாம்,
சொர்க்கம் என்று நீங்கள்கூட அதைச் சொல்வதுண்டே என்றார்
மிக மென்மையான குரலில்
மிக மிக நிதானமான தொனியில்.
அத்தனை உயிர்கள் முகத்திலும்
சாத்தான் அறைந்ததுபோல இருந்தது
நீ வருகிறாயா, நீ வருகிறாயா என்று
ஒவ்வொருவராகச் சுட்டிக்காட்டிக் கேட்டார்
அப்போது அவர் லேசாக உள்ளுக்குள்
சிரித்தது போலவும் இருந்தது.
அலறியடித்து அடுத்தவர் பின்னால் பதுங்கிக்கொண்டனர்.
புகார் சொன்ன அத்தனை பேரும்.
இந்த உலகம் எத்தனை அற்புதமானது?
ஏன் இவையெல்லாம் இப்படித்தான் இருந்தாக வேண்டும்?
நம் கடவுள் எத்தனை மகத்தானவர்
என்றெல்லாம் புகழ ஆரம்பித்தனர்.
இந்த உலகை இப்படிப் படைத்திருப்பவர்
அந்த உலகை அப்படிப் படைத்திருக்க முடியுமா?
அந்த உலகை அப்படிப் படைத்தவர்
இந்த உலகை ஏன் இப்படிப் படைத்தார்?
கேள்விகள் கேட்கலாம்.
அவர்தான் அழகாக, அழுத்தமாக
ஒரு பதில் சொல்லிவிட்டாரே!
வேறென்ன,
இந்த உலகம் அவரால் உருவாக்கப்பட்டதென நம்புபவர்கள்
அவர் அங்கு உருவாக்கி வைத்திருக்கும் சொர்க்கத்தையும்
நம்பித்தானே ஆக வேண்டும்?
உயிரை விட்டால் கிடைக்கும் சொர்க்க வாழ்வா?
உடலுடன் கிடைக்கும் பூவுலக வாழ்க்கையா?
எதனால் கடவுளாக இருக்கிறார் என்பது புரிகிறதா?
எப்படியான கடவுளாக இருக்கிறார் என்பதும் புரிகிறதா?
$$$