கருவையந்தாதிகள் வரலாறும் பெயர்த் திரிபுகளும்

-கருவாபுரிச் சிறுவன்

தென்காசி அருகிலுள்ள கரிவலம் வந்த நல்லூர்  ‘திருக்கருவை’ என்று அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் உறையும் ஈசனைப் போற்றி வரதுங்கராம பாண்டிய மன்னர் (தென்காசிப் பாண்டிய மன்னர்களுள் ஒருவர்; கருவையை தலைநகராகக் கொண்டு ஆண்டவர்; காலம்: பொ.யு. 1588- 1612) இயற்றிய மூன்று அந்தாதி நூல்களும்  ‘திருக்கருவை அந்தாதிகள்’ என்று வழங்கப்படுகின்றன. பிற்கால சிற்றிலக்கியங்களில் மொழிவளமும் ஆன்மிக நலமும் கொண்ட இந்த அந்தாதி நூல்களை இயற்றியவர் வரதுங்கராம பாண்டியரின் சகோதர முறையினரான அதிவீரராம பாண்டியர் (இவர் நைடதம், வெற்றிவேற்கை நூல்களை எழுதியவர்; தென்காசியை தலைநகராகக் கொண்டு ஆண்டவர்; காலம்: 1564- 1610) என்று தமிழ்ப் பாடநூல்களில் தொடர்ந்து பிழையாக கற்பிக்கப்படுகிறது. இந்தப் பிழையை நேர்செய்ய வேண்டி, இதே ஊரைச் சேர்ந்தவரும் இலக்கிய ஆய்வாளருமான திரு. பா.ஸ்ரீராமகிருஷ்ணன் (சிறுவாபுரிச் சிறுவன்) எழுதியுள்ல இனிய ஆய்வுக் கட்டுரை இது…
கரிவலம் வந்த நல்லூர்- பால்வண்ணநாதர் ஆலயம்

செல்வம் ஈயும் சிறப்பும் அளித்துளத்து
அல்லல் தீர்க்கும் அறிவை உதவிடும்
கல்வி நல்கும் கதி தரும் பொற்கிரி
வல்விலான் களவீசனை வாழ்த்தவே!

     -வரதுங்க ராம பாண்டியர்.

குறிக்கோள்:

தமிழ் மொழியில் தொகைப்படுத்திக் கூறப்படும் சிற்றிலக்கிய தொண்ணுாற்றாறு பிரபந்த வகையில் அந்தாதி இலக்கியமும் ஒன்று. மூவிரு நுாற்றிற்கும் மேற்பட்ட அந்தாதி இலக்கியங்களில் தனக்கொரு தனி இடத்தைக் கொண்டு விளங்குவது திருக்கருவையந்தாதிகள். இதன்  வரலாற்றில் ஏற்பட்ட பெயர் திரிபு மாற்றங்களையும், அதன் சிறப்புப் பெயரினை இன்னார் தான் சூட்டினார் என  சுட்டிக்காட்டி சம்பந்தப்பட்ட துறைகளின் கனிவான கவனத்திற்கு இச்செய்தியைக் கொண்டு சென்று அவர்கள் இதன்மூலம்  திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பாக  அமைப்பதே  இக்கட்டுரையின் நோக்கம்.

திருக்கருவையந்தாதிகளின் பிறப்பிடம்:

திக்கெல்லாம் புகழ் பரப்பும்  தென்காசி, விருதுநகர் மாவட்டத்தில் ஒருங்கே அமைந்த பஞ்ச பூத ஸ்தலங்களில் நடுநாயகமாக விளங்கும் திருத்தலம் இது. திருக்கருவை என்னும் கரிவலம் வந்த நல்லுாரில் எழுந்தருளியுள்ள அம்மையப்பரின் திருநாமங்கள் முறையே, ஒப்பனையம்பாள், ஒப்பிலாவல்லி, ஒப்பிலாநாயகி, அதுல செளந்தரியம்பிகை, பால்வண்ணநாதர், முகலிங்கநாதர், களாவனநாதர், சீரவர்ணேஸ்வரர் என்பன. அம்மையப்பன் மீது பிற்காலப் பாண்டியர்களில் ஒருவரான வரதுங்கராம பாண்டியர் என்னும் மன்னர் பிரான் அருளிச் செய்த அற்புதப் பாடல்களின் தொகுப்பு இந்நுால். இதன் சிறப்புக் கருதி  திரு என்னும் அடைமொழி சேர்த்தே இதனை திருக்கருவையந்தாதிகள் என அழைக்கிறோம் இதனுள்,

  • திருக்கருவைக் கலித்துறை அந்தாதி
  • திருக்கருவை வெண்பா அந்தாதி
  • திருக்கருவைப்  பதிற்றுப்பத்தந்தாதி

என மூன்று வகையாக, என்றும் வாடாத பனுவல்களாகிய பாடல்களை இத்தல நாயகனாகிய தலைவன் பால்வண்ண நாதருக்கு சாற்றிய பெருமை  இம்மன்னர்பிரானுக்கு மட்டுமே உரியது.

அந்தாதி அமைப்பு:

தொல்காப்பிய நன்னுால் சூத்திரத்தின் அடிப்படையில் அந்தாதிக்குரிய இலக்கண அமைப்புடன்,  தெளிவுபட நேர்த்தியாக சைவசமய பரத்துவமும், சிவபெருமானின் மகத்துவமும் மிளிரும் படி  திருக்கருவையந்தாதிகளை இயற்றியுள்ளார் கருவையந்தாதிகளின் ஆசிரியர்.

ஆசிரியர் பெயரில் ஏற்பட்ட திரிபுகளும் அதற்கான காரணங்களும்: 

கால ஓட்டத்தில் கருவையந்தாதிகளின் ஆசிரியர் வரதுங்கராம பாண்டியரின் பெயர் அதிவீரராம பாண்டியர் எனத் திரிந்து அதுவே உண்மையென பெயர் பெற்று நிலைத்து விட்டது. ஆனால் உண்மை என்றும் மறையாது. சத்தியம் என்றும் நிலைக்கும் என்ற கருத்தினை மனதில் இருத்தியவாறு கீழ்க்கண்ட செய்திகள் படிப்பவருக்கு நன்கு புரியும்.  (வரதுங்கர், அதிவீரர் எங்களின்  லட்சியத் தலைவர் ஆவார்)

தமிழ் இலக்கிய வரலாற்றில் தமிழ் இலக்கிய வரலாற்றை வரையறுத்து எழுதும் உயரிய எண்ணம் கடந்த நுாற்றாண்டின் தொடக்கத்தில் தான் ஏற்ப்பட்டது. தமிழ் இலக்கிய வரலாறு தமிழின் தொன்மையில் தொடங்கி  கணினித் தமிழ் வரை எவ்வாறு எழுந்தது, எழுச்சியுற்றது என இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் எழுதினார்களே தவிர, தமிழ் இலக்கியங்கள் தோன்றிய தலங்களின் மேன்மை, அதனுடைய தனிச்சிறப்புகள், உண்மைத் தன்மை, அங்கு வாழ்ந்த  மக்களின் நம்பிக்கைக்குரிய பாரம்பரிய விஷயம் இன்னும் பல காரணங்களை நுணுகி நுணுகி ஆராய்ந்து எழுதுவதற்கு வாய்ப்பு இல்லாமல் அவர்களுக்குப் போய் விட்டது.

இன்னும் கூடுதலாக சொல்ல வேண்டுமானால் காலதேவன் தமிழ் இலக்கிய வரலாறு எழுதுவோருக்கு அந்த வாய்ப்பைக் கொடுக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

இத்தகைய சூழலில் தான் முதன்முதலில் தமிழ் இலக்கிய வரலாறு எழுதிய டி.பி.மீனாட்சி சுந்தரம், கா.சுப்பிரமணிய பிள்ளை, மற்றும் தென்னிந்திய வரலாறு எழுதிய  கே.கே.பிள்ளை, நீலகண்ட சாஸ்திரி போன்றோர்  கருவையந்தாதிகளின் ஆசிரியர் அதிவீரராம பாண்டியர் என பதிவு செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேற்கண்டோர் தமிழ் இலக்கியம், வரலாறு போன்றவற்றில் மிகப் பெரிய ஜாம்பவானாக இருந்த காரணத்தினாலும், இவர்கள் மீது பற்றுக் கொண்டோர், இவர்களிடம் பாடம் பயின்றவர்கள் குருநாதர் வழியைப் பின்பற்றி பின்னாளில், திருக்கருவையந்தாதிகளின் ஆசிரியர் அதிவீரராம பாண்டியர் என வழி மொழிந்து இருக்கலாம் என்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை அது தவறில்லை. அது வரலாற்றில் தவிர்க்கப்படவும் இல்லை.

இருந்தாலும் அவர்கள் திருக்கருவையந்தாதிகளின் ஆசிரியர் வரதுங்கராம பாண்டியர் என தத்தம்  படைப்புகளில் பதிவு செய்யாமல் விட்டு விட்டனர்.  அதற்குக் காரணம் அடியேனுக்கு தெரிந்த வகையில்…  

* திருக்கருவையந்தாதிகளை இயற்றிய  ஆசிரியரே தம் பெயரை வெளியிட விரும்பாமை

* மூல நுால் முழுமையாக்க் கிடைக்கப் பெறாமை

* தமிழ் இலக்கியத் தலங்கள் தோறும் தோன்றிய இலக்கியத்தின் பொருளுண்மைகளையும், அதிலுள்ள புதுமைகளையும் அவர்கள் முற்றிலும் அறிய முற்படாமை. 

* பிற்காலப் பாண்டியர்கள் வரலாறு தமிழ் இலக்கிய உலகிற்கு சரிவர கிடைக்கப் பெறாமை.

* தமிழ்ப் புலவர்களுக்கு ஒளடதமாக விளங்கும் நைடதத்தின் ஆசிரியர் அதிவீரராம பாண்டியர் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்தமை.

* இலக்கிய வரலாற்று ஆசிரியர்களின் பார்வை பருந்துப்பார்வையாக அமையாமை

*  இன்னும் வேறு சில பல காரணங்களும் உள்ளமை.

திருக்கருவையந்தாதிகளின் ஆசிரியர் வரதுங்கராம பாண்டியர் என அழகாகவும், தெளிவாகவும்  திருத்தமாகவும்  பதிவிட்ட சான்றோர்களும் ஆன்றோர்களும்:

திருக்கருவையம்பதியை ஆட்சி செய்யும் களவீசனின் திருவருளை நிரம்பப் பெற்ற வரதுங்கராம பாண்டிய மன்னர் தான் திருக்கருவையந்தாதிகளை இயற்றினார் என குறிப்பிடும் அறிஞர்கள் (1855 – 2024),  ஏதேனும் ஒரு வகையில் உண்மையை அறிந்துணர்ந்து தம் படைப்புகளில் அதுபற்றி பதிவு செய்துள்ளார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

* ஆ.சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி

* அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்புலவர் களஞ்சியம்

* ந.சி.கந்தையா புலவர் அவர்களின் தமிழ்ப்புலவர் அகராதி

* திராவிட மாபாஷ்ய கர்த்தா சிவஞான யோகிகளின் முதன்மைச்சீடர்களில் ஒருவரான காஞ்சிபுரம் சிதம்பர முனிவர்

* வண்ணக்களஞ்சியம் கெளமார மடாலய ஸ்தாபகர் தண்டபாணி சுவாமிகள்

* குன்றக்குடி மேல மடம் கணபதி சுவாமிகளின் சீடர்களில் ஒருவரான கல்லல் குக மணிவாசக சரணாலய சுவாமிகள்

* சென்னை பல்கலைக்கழகம், திராவிட கழக சபை, லண்டன் வித்யா சங்க அங்கத்தில் ஒருவரும், பலநுாற்களின் ஆசிரியரும் தமிழ் வித்துவானுமான வி.கிருஷ்ணமாச்சாரியார்

* திருநெல்வேலி ஹிந்து கல்லுாரியில் பணியாற்றிய வி.சிதம்பரராம லிங்கம் பிள்ளையவர்கள் தொகுத்தளித்த தமிழ்ப் பாடநுால்

* சங்க இலக்கிய ஜாம்பவான் ஒளவை சு.துரைசாமியா பிள்ளையவர்கள்

* தமிழ் இலக்கிய உலகின் முடிசூடா மன்னன் உ.வே.சாமிநாதய்யரவர்கள்

* கல்வெட்டு, வரலாற்றுப்பேரறிஞர் தி.வை. சதாசிவ பண்டாரத்தாரவர்கள்

* சிற்றிலக்கிய புகழ் ந.வீ.ஜெயராமன் அவர்கள்

* நுாற்றாண்டு வாரியாக புலவர் வரலாறு எழுதிய ச.சோமசுந்தர தேசிகர் அவர்கள்

* தமிழ் இலக்கிய வரலாற்றுப்பேரறிஞர்கள் மு.அருணாசலம், மு.வரதராஜன்

* பாண்டியர் வரலாறு எழுதிய கே.ராமன் அவர்கள்

* பிற்காலப் பாண்டியர் வரலாறு எழுதிய அ.கி.பரந்தாமன் அவர்கள்

* தமிழுக்காகவே வாழ்ந்த தமிழண்ணல்

* திருநெல்வேலி மாவட்ட கெசட்டை புதுக்கி எழுதிய கே.எஸ்.எஸ்.வேலுமணி அவர்கள்

* தென்னிந்திய கோயில் சாஸனங்கள் வெளியிட்ட டி.என்.சுப்பிரமணியம் அவர்கள்

* தொல்லியல் இரட்டையர்கள் செந்தில் செல்வக்குமரன், சந்திரவாணன்

* அழகப்பா பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் அ.ராமசாமி அவர்கள்

* புலவர்கள் வரலாற்றை தெளிவாக தந்த கழகப் புலவர் சொ.இராமசாமிப் புலவர்

* சிறுகதை எழுத்தாளர் கு. அழகிரிசாமி அவர்கள்

* சைவ சமய மாவட்டக் களஞ்சியங்களின் தொகுப்பாசிரியர் சுந்தரப்பெருமாள் கோயில் சிவ.திருச்சிற்றம்பலம்  (அன்னாருடைய தொகுப்பு  நுாற்களைப் பாராட்டி தமிழக அரசு விருது வழங்கியுள்ளது)

* மன்னர் பிரான் சிங்கம்பட்டி ஜமீன்தார் அவர்கள் கட்டுரையாளருக்கு வழங்கிய வாழ்த்துரை

* ஆதின கர்த்தாக்களால் வழங்கப்பட்ட அருளாசிகள்

* தமிழக அரசால் நடத்தப்பெற்று வரும் திருக்கோயில் திங்களிதழ்   

* தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் பண்டிதர் மணிமாறன் அவர்களால் நடத்தப்பெறும் மின்னிதழில் வெளிவந்த ஆய்வுக் கட்டுரை

*  பொருள் புதிது இணைய தளத்தில் எழுத்தாளர் சேக்கிழான் அவர்கள்  கருணைமிகு திருக்கருவையம்பதி  நுாலிற்கு வழங்கிய மதிப்புரை

* கரிவலம் வந்தநல்லுாரை பூர்வீகமாகக் கொண்ட எனது இளம்முனைவர் பட்ட ஆய்வேடு

*  இவ்வூரில் வாழ்ந்த சைவத்தமிழ் இலக்கிய பெரியோர்கள், சொற்பொழிவு நிகழ்த்தும் சொற்பொழிவாளர்கள்

என பலரும் திருக்கருவையந்தாதிகளின் ஆசிரியர் வரதுங்கராம பாண்டியர் என்றே தமது படைப்புகளில் தீர்க்கமான முறையில் பதிப்பித்தும் வெளியீடும் செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

‘குட்டித் திருவாசகம்’ எனப் பெயர் சூட்டியவர் யார்?

தேனினும் இனிய பாக்களை உடையது. கல்மனதினைக் கரைக்கும் தன்மை  கொண்டது திருவாசகம். மாணிக்கவாசகப் பெருமான் அருளிய திருவாசக நுாலுக்கு நிகராக  திருக்கருவை அந்தாதிகள் அமைந்துள்ளது என்பதனால் அதனை  ‘குட்டித்திருவாசகம்’ என தமிழ் இலக்கிய உலகம் அழைக்கிறது.

தமிழ் இலக்கிய உலகில் திருக்கருவையந்தாதிகளுக்கு முதன்முதலில் குட்டித்திருவாசகம் என்று திருநாமம் சூட்டியது யாவர், அதாவது திருக்கருவையந்தாதிகளுக்கு (திருக்கருவைப்பதிற்றுப்பத்து அந்தாதி) குட்டித்திருவாசகம் என்று முதன்முதலில் பெயர் வைத்தது இன்னார் தான்  என இன்று வரை தமிழ் இலக்கிய வரலாற்றில் தீர்க்கமாகப்  பதிவு செய்யாது இருப்பது புதிரான புதிராகவும் புதுமையாகவும்  உள்ளது.

ஆண்டுதோறும் தமிழ், வரலாறு இலக்கியம் துறைகளில் விருதுகளும் பாராட்டுப் பெறும் தமிழறிஞர்கள், ஆராய்ச்சிகளை நடத்தும் பேரறிஞர்களின் பார்வையில் இருந்து  ஏன் இப்புதிர் விடுபட்டது என்பதை  ஆரோக்கியமான சிந்தனைக்கே  விட்டு விடுகிறோம்.

19ஆம் நுாற்றாண்டு தொடக்கத்தில் (1900 – 1930) இப்பகுதியில் ஆண்டவர் என்று அழைக்கப்பட்ட பனையூர் சங்கரநாராயண சுவாமிகள், தெட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஆகியோரின் அதிஸ்டானம், கரிவலம் வந்த நல்லுார் பால்வண்ணநாதர் கோயில் ஆகியவற்றை  திருப்பணி செய்தவர்  குன்றக்குடி மேல மடம் கணபதி சுவாமிகள். அவர்களது சீடர்களில் ஒருவரான கல்லல் குக மணிவாசக சரணாலய சுவாமிகளே திருக்கருவையந்தாதிகளுக்கு சிறப்புப்பெயராக  குட்டித்திருவாசகம் என சூட்டியிருப்பார் என அறுதியிட்டு தெய்வாதினத் துணையோடு கூறுகின்றோம்.

தெய்வாதினச் சான்று:

வேதாந்தத்தின் உச்சியில் ஞானபானுவாக விளங்கிய குன்றக்குடி மேல மடத்தின்  நான்காவது பட்டத்தலைவர் கணபதி சுவாமிகள்,  ஏறக்குறைய 50 வயது இருக்கும் கல்லல் சுவாமிகளுக்கு தீட்சை  என்னும் அருளளிப்பு வழங்கி  தீட்சா நாமமாக கல்லல் குக மணிவாசக சரணாலய சுவாமிகள் என்னும் திருநாமம் சூட்டி அருளியது இங்கு நோக்கத் தக்கது.

முருகப்பெருமான், மாணிக்கவாசக சுவாமிகளின் திருவடிகளை எப்போதும் தன் இதய கமலத்தில் பொருத்தி வாழ்ந்த கல்லல் சுவாமிகளுக்கு குக மணிவாசக சரணாலய சுவாமிகள் என தீட்சா நாமம் வழங்கியது எல்லா  விதத்திலும் பொருத்தமாக அமைந்துள்ளது தெய்வாதினச் செயலே.

மேலும் தமிழ்ப்புலவர்களின் வரிசை நுாலில் தினந்தோறும் திருவாசகத்தையும், திருக்கோவையாரையும் தலபாராயணம் செய்யாமல் உணவருந்த மாட்டார்கள் என்கிற உன்னதமான குறிப்பு வரிகள் திருக்கருவையந்தாதிகளுக்கு குட்டித்திருவாசகம் என்று திருநாமம் சூட்டி இருப்பார் என்கிற உயரிய சிந்தனைக்கு நல்லுரமாக அமைகிறது என்பதனை உணர முடிகிறது.

கல்லல் மணிவாசக சரணாலய சுவாமிகளால் நிச்சயதார்த்தம், திருமணம் நாடத்தி வைக்கப்பெற்று வாழ்வாங்கு வாழ்ந்து காட்டிய அம்மையார் ஒருவர் விழுப்புரம் – முருக்கன் குடியில் வாழ்ந்தார்கள். கல்லல் சுவாமிகளைப் பற்றி சிறப்புறும் செய்தி கிடைக்கும் என்ற நோக்கில் 2012இல் விநாயகர் சதுர்த்தி அன்று அங்கு பயணப்பட்ட எமக்கு இரண்டு செய்திகள் உறுதியாயின.

1. கல்லல் மணிவாசக சரணாலய சுவாமிகள் தினந்தோறும் எட்டாம் திருமுறையாகிய திருவாசகத்தை பாராயணம் செய்வார்கள்.

2. தான் பாராயணம் செய்யும் திருவாசகப் பாடல்களை பிறருக்கும் குழந்தைகளையும் படிப்பிக்கச் செய்வார்கள்.

-இந்த இரண்டு செய்திகளைக் கூறிய அந்த அம்மையாருக்கு அப்போது வயது 84. கல்லல் குக மணிவாசக சரணாலய சுவாமிகளின் வாழ்க்கை சரிதம் எழுதுங்கள், நல்லதே நடக்கும் என ஒன்றுக்கும் பற்றாத இந்த கடை நாயேனை வாழ்த்தினார்கள்.

கல்லல் குக மணிவாசக சரணாலய சுவாமிகளின் தீட்சா குருநாதர் குன்றக்குடி மேல மடம் கணபதி சுவாமிகளின் ஆத்மார்த்த திருத்தல பனுவல்களாகிய திருக்கருவையந்தாதிகளின் அருமை, பெருமையை எல்லோரும் உணர்ந்து கொள்ளும் பொருட்டு தான் பயணிக்கும் இடங்கள் தோறும், சந்திக்கும் அன்பர்களிடமும், சொற்பொழிவு நிகழ்த்தும் மேடைகள் தோறும் திருவருளால் கிடைக்கும் வாய்ப்புகளை நன்கு பயன்படுத்தி குருவருள் பற்றி இன்சொல் இயம்பி அளவளாவி மகிழ்ந்துள்ளார்கள் என்பது நுண்ணிய குறிப்பாகும்.

கல்லல் குக மணிவாசக சரணாலய சுவாமிகள் தன்னுடன் நெருங்கி பழகிய ந.மு.வேங்கடசாமி நாட்டார், கரந்தை தமிழ்ச்சங்கம், திருச்சி சைவ சித்தாந்த சபை, தென்காசி திருவள்ளுவர் கழகம்… இன்னும் பல சமய  அமைப்புகள், சமகால அறிஞர்கள், புலவர்கள் ஆகியோரிடம் தனிப்பட்ட முறையிலும், தன்னிடம் வருகை தரும் தமிழன்பர்களிடம் கொண்டு சேர்த்ததன் பயனாக திருக்கருவையந்தாதிகளுக்கு குட்டித்திருவாசகம் என்ற சிறப்பு பெயர் பெற்ற சொல்லாட்சி அரும்பாகி மொட்டாகி மலர்ந்து விரிந்து எங்கும் மணம் பரப்பி வீசலாயிற்று.

தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்கிற திருவாக்கிற்கு இலக்கணமாகத் திகழ்பவரே அருளாளர்கள். அத்தகைய வரிசையில் சத்தமில்லாமல் அணி செய்த கல்லல் குக மணிவாசக சரணாலய சுவாமிகள் வாழ்ந்த திசை நோக்கி வணக்கங்கள்.

கால ஓட்டத்தில் குட்டித்திருவாசகம் என்பது திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதிக்கு மட்டுமே வழங்கி வரலாயின.

இதுபோன்று தீர்க்கமாக விடை காண வேண்டிய இலக்கியங்கள் பல. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை இரண்டு:

* குமரகுருபர சுவாமிகள் இயற்றியருளிய கந்தர் கலி வெண்பாவை குட்டிக் கந்த புராணம் என்றும், திருவாரூரைச் சேர்ந்த வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கணவிளக்கம் என்னும் நுால் குட்டித் தொல்காப்பியம் என்றும், தமிழ் இலக்கிய உலகம் இன்று வரை அழைத்து வருகிறது. இவ்விஷயம் பெருமைக்குரியது.

தனித்தன்மை வாய்ந்த இத்திருநுாற்களுக்கு இத்தகைய சிறப்புத் திருநாமம் இட்டோர் யார் என்கிற வினாவினை  தகைமை சால்புடைய அறிஞர்களின் பார்வைக்கு சமர்ப்பிப்பதில் பெருமகிழ்வு அடைகிறேன்.

பதிப்பும் வெளியீடும்:

திருக்கருவை அந்தாதிப் பதிப்புகள் மூலம் மட்டும் 1835இல் இருந்து முதன்முதலாக காஞ்சிபுரம் சி.எஸ்.சபாபதி முதலியாரவர்கள், திருத்தணிகை க.சரவணப்பெருமாளையவர்கள், சென்னை  ஊ.புஷ்பரத செட்டியாரவர்கள், யாழ்ப்பாணம் நல்லுார் ஆறுமுக நாவலரவர்கள்,  திருக்கருவை மாநகர்,  ஆ.மருதப்பன் செட்டியார், வ.மருதப்பன் செட்டியார், பி.ரா.பாலசுப்பிரமணியஞ் செட்டியார் போன்றோர்கள் மூலநுாலை  மட்டும் முறையாக பதிப்பித்த வணக்கத்திற்கு மாண்பினர்.

திருக்கருவையந்தாதிகள் மூலமும் உரையோடும் சேர்த்து காலந்தோறும் பதிப்பித்தோர் ஒரு சிலர் சைவ தமிழ் இலக்கிய உலகை அலங்கரிக்கிறார்கள் அவர்களுள், தனித்தமிழ் இயக்கத்தந்தை மறைமலை அடிகளாரின் மாணவர் நகை  சொ.தண்டபாணியா பிள்ளையவர்கள், கம்பராமாயண உரைச்சக்கரவர்த்தி வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியாரவர்கள், திருவாவடுதுறை ஆதினம், திருவாவடுதுறை ஆதின வித்துவான் ச.ரத்னவேலனவர்கள், சென்னிகுளத்தில் வாழ்ந்த கூவலபுரம் சுந்தர அடிகளார் உரையுடன் பதிப்பித்த  கரிவலம் வந்த நல்லுார் மிராசுதாரர் ஆறுமுகநயினார் செட்டியாரவர்கள், கரிவலம் வந்த நல்லுார் திருப்புகழ் சபை,நம்பியாரூரர் அடியார்கள் திருக்குழாம், சென்னை மணிவாசகப்பதிப்பகம், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சாரதா பதிப்பகம், சங்கர் பதிப்பகம், குகபதி பதிப்பகம், தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நுால் நிலையம் மற்றும் சங்கரன் கோவில் சைவ சித்தாந்த பேரவை போன்றோர் முறையே, திருக்கருவைக் கலித்துறையந்தாதி, திருக்கருவை வெண்பா அந்தாதி, திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி போன்றவற்றை மேற்கண்டோர் தனித்தனி அந்தாதிகளாகவும், மூன்று அந்தாதிகளையும் சேர்த்து உரையோடு 2023 வரை பதிப்பித்து வெளியீடு செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே ஒருவரே முதல்வர்:

கரிவலம் வந்த நல்லுாருக்கு அருகில் இருக்கும் கிராமங்களில் ஒன்று வயலி. இவ்வூரில் வாழ்ந்த ஆசிரியர் திரு. மொட்டயசாமி என்ற அம்பிகை தாசன் அவர்கள். திருக்கருவையந்தாதிகள் மூன்றிற்கும் எளியவுரை வழங்கிய முதல்வர். திருக்கருவையந்தாதிகள் மூன்றிற்கு இவர் ஒருவரே எழுதிய முழு எளியவுரை முதல்வுரையாகும்.

சம்பந்தப்பட்ட துறைகளின் கனிவான கவனத்திற்கு:

* தமிழ் இலக்கியத்தில் திருக்கருவையந்தாதிகளின் ஆசிரியர் அதிவீரராம பாண்டியர் என நடைமுறையில்  இன்று வரை இருந்து வருவதை கவனத்தில் கொண்டு சீர்துாக்கிப் பார்த்தல் அவசியம்.

* சம்பந்தப்பட்ட துறையினர் அவ்வாறு சீர்துாக்கிப் பார்த்திருந்தால் தமிழ்நாடு அரசு பாட நுாற்களில் தொடங்கி போட்டித் தேர்வுக்கான இணையதளம் வரை திருக்கருவையந்தாதிகளின் ஆசிரியர் வரதுங்கராம பாண்டியர் என திருத்தம் செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆனால் அத்தகைய நிகழ்வு  இன்றுவரை சரிசெய்யப்படவில்லை; செயல்படுத்தப்படவுமில்லை.

* இக்கட்டுரையில் வரதுங்கராம பாண்டியர் எனக் கூறும் தமிழறிஞர்கள், சான்றோர்கள் பெரும்பாலானோர் தமிழக அரசின் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு நன்கு தெரிந்தவர்கள், பிரபலமானவர்கள் என்பது உள்ளங்கை  நெல்லிக்கனி போல விளங்கும் என்பதை இவ்விடத்தில் பணிவுடன் சுட்டிக்காட்டி அமைகிறோம். 

*அனைத்துத் துறைகளிலும்  1947க்கு பிறகு பலவித அபார வளர்ச்சிகள். அதன் பயன்பாட்டினால் ஒவ்வொரு துறைகளும் தமிழுக்கு சீரிய தொண்டு செய்யும் உயரிய நிலையை எட்டியுள்ளது தமிழகம்.

இந்நிலையில் கருவையந்தாதிகளைப்  போன்ற நுட்ப திட்பமான பாடப் பகுதிகளை தொடக்கப்பள்ளிகளில் தொடங்கி முதுநிலைக் கல்லுாரி வரையிலும் உள்ள பாடத் திட்டத்தில் வரையறை செய்யும் கற்றறிந்த சான்றோர்கள், அவையோர்கள்  அவற்றை லாகவமாகக் கையாள வேண்டும் என சம்பந்தபட்ட துறையினருக்கு கோடிட்டுக் காட்ட விரும்புகிறோம். 

ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம்:

பாதார விந்தமும் செஞ்சடைக்காடும் பஞ்சாயுதனும்
வேதாவும் இன்னமும் காண்பரியானை  என் மெய்த்தவத்தால்
நாதா என்று ஏத்தி கருவைக்களாவின் நிழற்கீழ்க்
காதார் வரிவிழி ஒப்பனை யாளொடும் கண்டனனே!

என வரதுங்கராம பாண்டியர் ஆதிப் பரம்பொருளைப் பாடிப் பரவுகின்றார். படைக்கும் தொழிலை மேற்கொள்ளும் பிரம்மாவும், காத்தல் தொழிலை மேற்கொள்ளும் மகாவிஷ்ணுவும் தன் நிலை மறந்து பேதமை கொண்டு அன்னமாகவும் பன்றியாகவும் வடிவெடுத்து உண்மை நிலை உணராது இன்று வரை அடி முடி காணாமல்  இருக்கிறார்கள். இயல்பாகவே, இயற்கைக்கு மாறாக யார் நடந்தாலும் எதுவும் நடக்காது என்பது பொது விதி.

அன்னம் தண்ணீரிலும் பன்றி தரையில் வாழும் இயல்புடையவை. தண்ணீரை விட்டு விண்ணிற்கு தாவியது அன்னம். தரையை விட்டு அதல பாதளத்திற்கு பாய்ந்தது பன்றி. ஆக, அடி முடி தேடிய நிகழ்வு இயற்கையில் இருந்து மாறுபட்டது. பிரம்ம விஷ்ணுக்கள் இருவரும் இயற்கைக்கு மாறாக நடந்து கொண்டதால் இன்று வரை அவர்களால் அடி முடியைக் காண முடியவில்லை.

ஆனால் பரம்பொருளாகிய பால்வண்ண நாதரின் திருவடியையும் திருமுடியையும் என் மெய்தவத்தால் கருணையின் வடிவமான உத்தமப் பெண்ணான ஒப்பனையாளோடு குளிர்ச்சி பொருந்தி களா மரத்தின் கீழ் கண்டு கொண்டேன் எனப் பாடிப் பரவுகிறார் திருக்கருவையந்தாதிகளின் ஆசிரியர் வரதுங்கராம பாண்டியர்.

நிறைவுரை:

இது போன்று மனித வாழ்வியலுக்குத் தேவையான அற்புதக் கருத்துக்கள் 300 செய்யுள்களைக் கொண்டும் கொடுத்தும் வெவ்வேறு ஞானப்பார்வைகளில்  சிந்திக்கும் வரதுங்கராம பாண்டியரின் சிந்தனைக்கு தலை வணங்குவோம். வரதுங்கர் வாழ்ந்த திசை  நோக்கி வந்தனம் செய்வோம். வரதுங்கர் அந்தாதிகளைp போற்றிப் பாதுகாத்து வளரும் தலைமுறைக்கு எடுத்துச் செல்வோம், களவீசனை வாழ்த்தவே! அனைவருக்கும் செல்வம் ஈயட்டும்.

$$$

Leave a comment