இசை ஆழ்வார் இளையராஜா

-ச.சண்முகநாதன்

இசையுணர்வுடன் இறையுணர்வை வழங்கியிருக்கிறார் இளையராஜா, திவ்ய பாசுரம் தொகுப்பின் மூலம். கேட்டது முதல் இன்பத்தின் உச்சத்தில் மனம். சமீப காலமாக இப்படியொரு உன்னதமான நிலையை அடைந்ததில்லை. ஆழ்வார் தமிழை, அரங்கன் மீதான காதலை, நாராயணன் மீதான பக்தியை இப்படியொரு இசை வடிவத்தில் கேட்க என்ன தவம் செய்து விட்டோம் நாம்! நன்றி ராஜா சார்.

தங்கச் சுரங்கத்தில் இருந்து கட்டி கட்டியாய் தங்கம் எடுத்து ஆபரணங்கள்  செய்து அதை வெட்டவெளியில் கொட்டிவிட்டுப் போயிருக்கிக்கிறார் இளையராஜா. இவ்வளவு இசை பிரமாண்டத்தைச் செய்து இதை வைத்து வியாபாரம் செய்யாமல், எல்லோருக்கும் இலவசமாய்க் கிடைக்குமாறு செய்திருக்கிறார்.  எவ்வளவு பெரிய மாமனிதன் இளையராஜா!

youtubeஇல் இலவசமாய்க் கிடைக்கிறது, officially. இதற்காகவே அவர் பாதம் பணியலாம்.    

 பாசுரத்துக்கு  மெட்டுப் போடும் முயற்சி இல்லை இது. ஆழ்வாரின் பாடல்களை இசையின் மூலம் காட்சிப்படுத்தியிருக்கிறார் இளையராஜா. இது யாரும் செய்ய முடியாத செயல். இதுதானே ராஜாவின் தனித்துவம்? ஒரு பாசுரத்தை எடுத்து, அதை ஆழ்வார் எப்படிப் பாடியிருப்பாரோ என்ற எண்ணம் தோன்றியிருக்கலாம் ராஜாவுக்கு. அந்த உணர்ச்சியைத் தன் இசைத் திறமையால், இசைக்  கருவிகளால் காட்சிப்படுத்துகிறார். மனம் அப்படியே ஆழ்வார்களின் பாதத்தில் சரணடைகிறது.  இதுதான் அவர் மேற்கொண்ட முயற்சி. 

பாசுரத்தை வரிகளாய்  மட்டும் பாவிக்காமல், ஒவ்வொரு பாசுரத்தையும் காட்சியாக பாவித்துக் கையாண்டிருக்கிறார் இளையராஜா. பிரம்மாண்டமான ஆழ்வார் தமிழை, பிரம்மாண்டமான இசை மூலம் நம் கண்முன் பாசுரத்தில் காட்சிகள்/ உணர்ச்சிகளைக் கொண்டு நிறுத்துகிறார் ராஜா. 

1. “ஓம் நமோ நாராயணாய” என்று பக்தியுடன் பிரம்மாண்டமாய்  ஆரம்பிகிறது. “ஓம் நமோ நாராயணாய”  என்று ஒலிக்கும்பொழுது திருவரங்கத்துக்குள் இருக்கும் உணர்வு நம்மைத்தொற்றிக் கொள்கிறது. ராஜாவின் குரலில், பெரியாழ்வாரின் பல்லாண்டு பல்லாண்டு பக்தியை செவிவழி  நுழைத்து இதயம் தொடுகிறது.  திருவரங்கத்துத் தூண்களுக்கிடையில் “ஓம் நமோ நாராயணாய” என்று ராஜா பாடிக்கொண்டே முன்செல்ல பக்தியுடன் நாம் பின்னே செல்லும் உணர்வு. உயிர்ப்புடன் பெரியாழ்வாரின் தமிழ். 

2. கண்ணன் பிறக்கிறான் ஆயர்பாடியில். வண்ண மாடங்கள் சூழ்  திருக்கோஷ்டியூரில்  ஆயர்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள். பிரம்மாண்டமான வயலின் இசை கண்ணன் பிறப்பைப் பறை சாற்றுகிறது. மெல்ல கண்ணன் மீது காட்சி திரும்புகிறது, கிளாரினெட் இசையுடன். கிட்டத்தட்ட ஆழ்வாரின் தமிழ் அப்படியே பிரம்மாண்டமான இசையில் காண்பிக்கிறார் ராஜா. பாசுரம் முழுவதும் வயலின் இசை ஆயர்களின் ecstatic மனநிலையுடன் அங்குமிங்கும் ஓடுவதைக் காண்பிக்கிறது.  பித்துப் பிடித்த ஆயர்களுடன் நானும் ஓடி மகிழ்கிறேன். 

பாசுரத்தில் “வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே” – இது காட்சி. இதற்கு ஒரு crescendo. இப்படித்தான் கண்ணன் பிறப்பை திருக்கோஷ்டியூர் ஆயர்கள் கொண்டாடியதை இசை வடிவத்தில் சொல்கிறார் இளையராஜா. 

“வண்ண மாடங்கள்” எங்கள் கண்ணன் பிறப்பைக் கொண்டாட உன்னதமான இசை.

3. தொகுப்பில் இருக்கும் “புவியுள்  நான் கண்டதோர் அற்புதம் கேளீர்” என்ற பெரியாழ்வார் பாசுரத்தைக் கேட்ட பொழுதெல்லாம் நமக்கு வைகுண்ட ஏகாதசி நாள் தான். இசைப் பேரின்பம் இந்த இசைப்  பாசுரம். “ஆயர்களுக்கு கண்ணபிரான் வாசித்த  குழல் ஓசையை கேட்டு தேவலோகத்தில் இருக்கும் தேவர்கள் யாக உணவை மறந்து ஆயர்பாடிக்கு வந்து அந்த ஆயர்குலச்  சிறுவன் வசிக்கும் குழலிசையில் மயங்கினர்”  என்பது பெரியாழ்வார் பாடிய பாசுரத்தில் பொருள். அப்படியே பாசுர வரிகளை இசையால் கொண்டுவருகிறார். புல்லாங்குழல் யாகம் நடத்தியிருக்கிறார் ராஜா இந்தப் பாசுரத்தில். 

அந்த ஆரம்ப குழலிசை, இந்தப் பாசுரத்தின் பொருள் உணர்ந்து கேட்டால் பன்மடங்கு தித்திப்பாகிறது. 

"ஆயர்பாடி நிறையப் புகுந்து ஈண்டி,
செவியுள் நாவின் சுவைகொண்டு மகிழ்ந்து
கோவிந்தனைத் தொடர்ந்து என்றும் விடாரே"

-இந்த பெரியாழ்வாரின் வரிகளை நமக்கு நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் இளையராஜா. 

அப்பப்பா ரகம் இந்த இசை. மோட்சம் தரும் பாடல். பெரியாழ்வாரும் ராஜாவும் நேரே நம்மை கண்ணனிடம் கொண்டு செல்கின்றனர்.  கண்ணனின் இசை கேட்டு கறவையினங்கள் கால் பரப்பி தலையைத் தொங்கவிட்டு செவிகளை ஆட்டாமல் கேட்டுக்கொண்டிருந்ததாக பெரியாழ்வார் பாடுகிறார். “கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டுக் கவிழ்ந்து இறங்கிச் செவி ஆட்டகில்லாவே.*  என் நிலையும் அப்படியே இருந்தது இந்த பாசுர இசை கேட்டு. 

ஒவ்வொரு பாசுரம் முடிந்த பின்னும் “this is the best” என்று நினைக்கும் பொழுது அடுத்த பாசுர இசை நம்மைப் பார்த்துச் சிரிக்கிறது.

4. “வானிடை வாழும் அவ் வானவர்க்கு  மறையவர் வேள்வியில் வகுத்த அவி” – ஆண்டாள் தாயாரின் நாச்சியார் திருமொழி அடுத்த பாசுரம். 

“உன்னித்து எழுந்த என் தட முலைகள் மானிடவர்க்கு என்று பேச்சுப் படில்  வாழகில்லேன் கண்டாய் மன்மதனே”. இதைப்படிக்கும் பொழுதெல்லாம் பாரதியின் “கன்னிகையாய் தங்கமே தங்கம் காலம் கழிப்பமடி தங்கமே தங்கம்”  என்ற வரிகளும் “மையல் கொடுத்துவிட்டு தங்கமே தங்கம், தலை மறந்து திரிபவர்க்கு மானமு முண்டோ” என்ற சீற்றம் மிகுந்த உணர்ச்சியோடு  ஆண்டாள் பாடியிருப்பதாக நினைத்தேன். ஆனால் இங்கே இந்தப் பாசுரத்தை, ஆண்டாள்,  ஒரு கோரிக்கையாக வைப்பதாக இசை அமைத்திருக்கிறார் ராஜா. கோப உணர்ச்சி இல்லை, ஒரு தாப உணர்ச்சியுடன் பாடுவதாக இசை அமைத்திருக்கிறார் ராஜா. 

"கானிடைத் திரிவதோர் நரி புகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப"

-ஆண்டாளின் பவித்ரமான  காதல் இளையராஜாவின் பவித்ரமான  இசையில் கிரங்கடிக்கிறது. 

5. வாரணம் ஆயிரம் – இந்தப் பாசுரத்தைக் கேளாத செவியென்ன செவியோ? இதற்கு முன் இளையராஜா இசையில் இதே பாசுரத்தைக்  கேட்டிருக்கிறோம். ஆனால் இது இவர் இடம், இவர் கற்பனை. ஆண்டாள் பாசுரத்தை யானை மீது சுமந்து செல்கிறார் ராஜா.

எப்பேர்ப்பட்ட கனவு ஆண்டாளுடையது! ஆயிரம் யானைகள் சூழ ஸ்ரீமன் நாராயணன் நடந்து வருகிறான். நாராயணன் தன்னைக் தன்னை  கைத்தலம் பற்ற  கனா காண்கிறாள். ஆண்டாளின்  பெருங்கனவு.  இந்தப் பெருங்கனவை இசையால் எப்படி காட்சிப்  படுத்துவது?  செய்கிறார் ராஜா.  இசைப்  பாசுரம் ஆரம்பிக்கும் பொழுது செண்டை வாத்தியம், வாத்தியக்  கருவிகள் முழங்க ஆயிரம் யானைகள் பின்னழகை ஆட்டிக்கொண்டு நாராயணனைத் தாங்கி வருவதும்,  ஆண்டாளின் பெருமிதமும், செவி முன்னர் தெரிகிறது.  மனம் பித்துப் பிடித்துப் போகிறது இசையால், தமிழால். இசைப்  பாசுரத்தின் அடுத்த சரணத்தில் “கற்பூரம் நாறுமோ, கமலப்பூ நாறுமோ” என்று வெண்சங்கிடம் கேட்கும் பொழுது ஏக்கம் தெரிகிறது இசையில். 

6. அடுத்ததாக குலசேகர ஆழ்வாரின் “ஊனேறு செல்வத்து உடற்பிறவி யான் வேண்டேன்” கேட்கும்பொழுது அப்படியே ctrl +alt +del செய்துவிட்டு, எல்லாவற்றையும் விட்டுவிட்டு திருவேங்கடம் சென்று ஒரு குருகாய் வாழ்ந்துவிட மாட்டோமா என்ற எண்ணம் வந்தது. ஆழ்வாரின் தமிழ், பக்தி, இளையராஜாவின் இசை  -இதற்கு  மேல் ஏதாவது இன்பம் கிடைக்குமா? உருக்கி இருக்கிறார் இளையராஜா. 

கண்ணை மூடினாலும்  கண்ணீருக்கு அணை போட முடியவில்லை.  ‘படியாய்க் கிடந்து உன் பவள வாய் காண்பேனே’ என்று ஆழ்வார் உருகுவது, இசையால் பன்மடங்கு பெருகிறது.

7. “பச்சை மாமலை போல் மேனி” – எத்தனையோ இசை வடிவத்தில் இருக்கிறது இந்தப் பாசுரம். ராஜா இதற்கு ஒரு மேற்கத்திய பின்னிசையுடன் செய்திருந்தாலும் தொண்டரடிப்பொடி ஆழ்வார்  வைகுண்டத்துக்குள் பாடிக்கொண்டே செல்வது போல இருக்கிறது. இந்த இசைப்  பாசுரத்தை கேட்டால் “உடலெனக்கு உருகுமாலோ, என் செய்கேன் உலகத்தீரோ” என்று கேட்க வேண்டும் போலத்  தோன்றுகிறது.!

8. இறுதியாக பல சுருதியாக, தினமும் ஓதும் பாசுரங்களில் ஒன்றான, திருமங்கை ஆழ்வாரின் “குலம்  தரும் செல்வம் தந்திடும்” பாசுரம்.  “அடியார் படு துயர் ஆயின எல்லாம்  நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும் நாராயணா எனும் நாமம்” என்ற பாசுர வரிகளுடன் நிறைவு பெறுகிறது திவ்ய பாசுரம்.

என்ன பேறு  செய்தோம், இவ்வளவு நல்ல இசை கேட்க! 

என்ன பெறு செய்தோம், ராஜாவைப் பெற்றிட!

என்ன பெறு  பெற்றோம், ஆழ்வாரின் தமிழை இவ்வளவு நல்ல இசையில் கேட்க!

அவர் முன், முன்பொரு நாள், ஒரு 10 நொடி நின்ற பொழுது கண்ணீர் கண்ணில் திரையிட பேச்சு வராமல் போனது என்றும் மறந்திடாது. இன்றும் அவர் இருக்கும் திசை நோக்கி கண்ணீருடன் வணக்கம் செய்கிறேன். 

அவர் பாதம் பணிய வேண்டும். 

Mercuri நிறுவனத்துக்கும் மனமார்ந்த  நன்றி. இவ்வளவு அற்புதமான இசையை வெளிக் கொணர்ந்தததற்கு. 

அசுணம் என்றொரு உயிரினம் இருந்தது. நல்ல இசையை மட்டும் கேட்கும்.  கொஞ்சம் பிடிக்காத கொடிய இசை கேட்டால் உயிரை விட்டு விடும். ராஜா ரசிகர்கள் அசுணம் வகை. நல்ல இசை மட்டும் கேட்போம்.  இந்த தெய்வீக இசை கேட்ட பின்னர் வேறேதும் கேட்க மனமில்லை.

இசை ஆழ்வார் இளையராஜா.

$$$

Leave a comment