கம்பரும் தியாகராஜரும்

-ச. சண்முகநாதன்

ராமனாய் இருப்பது எவ்வளவு கடினம்? அவன் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கிறது, அவனை நம்பியவர்களுக்கு. அது தாமதமாவதால், நம்பியோர் பெறும் ஏமாற்றம், அதனால் ராமனுக்கு கிடைக்கும் வசை அதிகம். இதுவும் ஒருவகை திருவிளையாடலின் பகுதியோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

கம்பன் எழுதிய பாடலின் சாரம் தியாகராஜரில் நிறைய இருக்கிறது, நாம்தான் கொஞ்சம் மெனக்கெட்டு அவற்றையெல்லாம் புரிந்துகொள்ள வேண்டும். இதோ இன்னொரு emotion found common in Kamban and Saint Thyagaraja.

“மரியாத காதய்யா, மனுபவ தேமய்ய“”” (இது உனக்கு அழகல்ல ராமா! என்னைக் காப்பாற்றாமல் தாமதிப்பது) என்ற பைரவம் ராகத்தில் அமைந்த கீர்த்தனை தியாகராஜ சுவாமிகள் இயற்றியது. தியாகராஜ சுவாமிகள் ஊனை உருக்கி உயிரில் விளக்கை ஏற்றிய கீர்த்தனை, இது.

“நல்லா இல்லை ராமா, நீ செய்றது. இதெல்லாம் உன்னைப்போல ஆளு செய்யுற காரியமா? நான் உன்னையே நினைச்சு உருகிகிட்டு இருக்கேன், நீ இன்னும் என்ன கண்டுக்க மாட்டேங்கிற” என்று, “ஏன் இன்னும் ராமன் காட்சி தரவில்லை?” என்று மனம் உருகிப் பாடுகிறார்.

காதலியைப் பார்த்து காதலன் பாடுவது போலவும் இருக்கலாம். “ன் உன்னைய நினைச்சு இங்க உருகிக்கிட்டு இருக்கேன், நீ என்னடான்னா என்னையக் கண்டுக்காம உன் பாட்டுக்கு ஊர் சுத்துற?” என்பதற்கும் “மரியாத காதைய்யா/காதம்மா” என்று பாடலாம் போல இருக்கிறது.

கம்பனும் இதே பொருளில் பாடுகிறான். “காதல் மனைவி சிறைப் பிடிக்கப்பட்டு இருக்கிறாளே. அவளைக் காப்பாற்ற எண்ணம் வந்தது போல தெரியவில்லை இந்த ராமனுக்கு?” என்று சீதை கோபப்படுகிறாள். ஆனால் உண்மையில் ராமனோ திக்குத் தெரியாமல் அலைகிறான் சீதை இருக்குமிடம் தேடி. குயிலிடமும் மயிலிடமும் “என் சீதை எங்கே இருக்கிறாள் என்று சொல்லுங்களேன்” என்று பரிதாபமாய்க் கேட்டுக் கொண்டு திரிகிறான். ஆனால் சீதைக்கு, தான் மீட்கப்படவில்லை, அது ராமன் தவறு என்ற நேரடி எண்ணம் இல்லாவிட்டாலும் “இன்னும் ஏன் வரவில்லை என் ராமன்?” என்கிற ஆதங்கம் இருக்கிறது.

சூளாமணியை சீதையிடம் இருந்து பெற்றுக்கொண்ட அனுமன் “ராமனுக்கு ஏதாவது சேதி இருக்கிறதா?” என்று பணிவுடன் கேட்க, சீதை கோபத்துடன் “மார்பில் மாலையுடன் இருக்கும் ராமன் மனதில், அபலைப் பெண்ணான என்னைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஈரம் தான் இல்லை. தன் மனைவியைக் கவர்ந்து சென்றவனிடம் இருந்து காப்பாற்றி அவரது வீரத்தையாவது காப்பாற்றிக் கொள்ளச்சொல்” என்று கோபம் தொனிக்கும் வகையில் மானுடம் சொல்கிறாள். “ஈரம் தான் இல்லை வீரம் இருக்கிறதல்லவா?”

“ஆரம் தாழ் திரு மார்பற்கு அமைந்தது ஓர்
தாரம்தான் அலளேனும், தயா எனும்
ஈரம்தான் அகத்து இல்லை என்றாலும், தன்
வீரம் காத்தலை வேண்டு” என்று வேண்டுவாய்.

இதையேதான் தியாகராஜ சுவாமிகள் “மரியாத காதய்யா” என்று, “ராமா எனக்கு காட்சி தராமல் இருப்பது உனக்கு அழகல்ல” என்று நேரடியாக ராமனிடமே பாடுகிறார்.

ராமனாய் இருப்பது எவ்வளவு கடினம்!

“ஈரம்தான் அகத்து இல்லை என்றாலும், தன் வீரம் காத்தலை வேண்டும்” என்று கம்பனும், “மரியாத காதய்யா மன்னுபவ தேமய்யா” என்று தியாகராஜ சுவாமிகளும் ஒரே உணர்ச்சிகளை வேறு விதமாகப் பாடுகின்றனர்.

நம்ம மட்டும் என்ன தொக்கா? தியாகராஜர் அளவு பக்தி இல்லையென்றாலும் “மரியாத காதையா, மன்னுபாவ தேமய்யா” என்று சொல்லி வைப்போம்.

$$$

Leave a comment