-கி.சாயிநாதன்
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது முப்பத்து இரண்டாம் திருப்பதி...

32. உதங்க மகரிஷிக்கு காட்சி அளித்த திருஅரிமேய விண்ணகரம்
குடமாடும் கூத்தனே, வைகுண்ட வாசனே, மனம் கவரும் கள்வனே, வாசுதேவனே - என் அகம் புறம் இல்காக்குமே - உன் நமோ நாராயணா எனும் சொல்.
‘திருநாங்கூர் பதினொரு திருப்பதிகள்’ என்பது 108 வைணவத் திருத்தலங்களில், சோழநாட்டுத் திருப்பதிகளுள் திருநாங்கூர் என்னும் ஊரிலுள்ள ஆறு திவ்ய தேசங்களையும் இவ்வூரைச் சுற்றி அருகருகே, ஒன்று அல்லது ஒன்றரை மைல் தூரங்களில் உள்ள 5 திவ்ய தேசங்களையும் சேர்த்து வழங்கப்படும் பெயராகும்.
திருநாங்கூருக்குள்ளேயே இருக்கும் கோயில்கள்:
- திருக்காவளம்பாடி
- திருஅரிமேய விண்ணகரம்
- திருவண் புருடோத்தமம்
- திருச்செம்பொன் செய்கோயில்
- திருமணிமாடக் கோயில்
- திருவைகுந்த விண்ணகரம்
திருநாங்கூருக்கு வெளியே இருக்கும் கோயில்கள்:
- திருத்தேவனார்த் தொகை
- திருத்தெற்றியம்பலம்
- திருமணிக்கூடம்
- திருவெள்ளக்குளம்
- திருப்பார்த்தன் பள்ளி
திருஅரிமேய விண்ணகரம், திருநாங்கூரில் உள்ள மூன்றாவது திவ்யதேசமாகும். அரி என்றால் அபகரிப்பவர் என்றும் பொருள் உண்டு. இத்தலப் பெருமாள் நமது பாவங்களைத் திருடுபவர். உதங்க மகரிஷிக்கு நான்கு கரங்களுடன் கண்ணன் காட்சி அளித்த தலம் இது.
மூலவர்: குடமாடு கூத்தன் (அமர்ந்த திருக்கோலம் – கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்: அம்ருதகடவல்லி
உற்சவர்: சதுர்புஜகோபாலன்
ஆகமம்: பாஞ்சராத்ரம்
விமானம்: உச்ச சிருங்க விமானம்
தீர்த்தம்: கோடி தீர்த்தம், அம்ருத தீர்த்தம்
மங்களா சாசனம்: திருமங்கையாழ்வார்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:
காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரை
மாலை 5.00 மணி முதல் 8.30 மணி வரை
எப்படிச் செல்வது?
சீர்காழியிலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம் (திருநாங்கூர்).
சேவிப்பதன் பலன்கள்:
எல்லாவித துன்பங்களையும் போக்கக் கூடியவர் இந்த குடமாடு கூத்தர் எனவே அவரை வணங்க எல்லாரும் வர வேண்டும். எல்லா தேதிகளில் பிறந்தவர்களும் வந்து நலம் பெற வேண்டிய தலம் ஆகும்.
$$$