திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -29

-கி.சாயிநாதன்

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது இருபத்தொன்பதாம் திருப்பதி...

29. சுக்கிர பகவானுக்கு அருளிய திருவெள்ளியங்குடி

கண்தந்தாய், காட்சி தந்தாய்!
மண் தந்தாய், மனது தந்தாய் - என்றாலும்
என் தந்தாய் திருவெள்ளியங்குடியில் உனக்கு
கோடி பேரழகோடு கோலவில் ராமனாய்
கண்மூடிக் கிடப்பதற்கே.

வாமன அவதாரத்தின்போது அசுர குரு சுக்கிராச்சாரியார் இழந்த கண்பார்வையை, தவம் புரிந்து மீண்டும் பெற்ற தலம். கருங்கல் தரையில் செவ்வாழை முளைத்து குலை தள்ளுவதை இங்கு ஆண்டுதோறும் காணலாம். இக்கோயிலின் மூலவர் வண்ணம் பூசப்பட்டு அலங்காரப்பிரியராக காட்சி அளிக்கிறார். தேவசிற்பி மயனின் தவத்தை மேசி, அவனது வேண்டுகோளுக்காக ராம அவதாரக் காட்சி அளித்த தலம் இது…

மூலவர்: கோலவல்லி ராமன் (புஜழ்ங்க சயனம் – கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்: மரகதவல்லி
உற்சவர்: சிருங்காரசுந்தரன்
ஆகமம்: வைகானஸ ஆகமம்
விமானம்: புஷ்கலாவர்த்தக விமானம்
தீர்த்தம்: சுக்கிர தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், இந்திர தீர்த்தம், பரசுராம தீர்த்தம்
தல விருட்சம்: செவ்வாழை 
மங்களா சாசனம்: திருமங்கையாழ்வார்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:

காலை 8.30 மணி முதல் 12.30 மணி வரை
மாலை 5.00 மணி முதல் 7.30 மணி வரை

எப்படிச் செல்வது?

கும்பகோணம் – ஆடுதுறை பேருந்தில் சென்று முட்டக்குடியில் இறங்கினால் அங்கிருந்து நடக்கும் தொலைவில் உள்ளது இத்தலம்.

சேவிப்பதன் பலன்கள்:

கண்பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் இங்கு பிராத்திது நலம் பெறலாம். கடன் தொல்லை, தொழிலில் தேக்க நிலை தீரவும், வழக்குகளில் வெற்றி பெறவும் இங்கு வர நலம் உண்டாகும். 9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்கள் வந்து வணங்க வேண்டிய தலம் இது.

$$$

Leave a comment