திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -28

-கி.சாயிநாதன்

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது இருபத்தெட்டாம் திருப்பதி...

28. அனுமனுக்கு தரிசனம் தந்த கபிஸ்தலம்

கொள்ளிட நதியோரம் காவேரிக் கரையோரம்
பள்ளிகொண்டவனே, கபிஸ்தல பெருமானே!
அவ்விடம் ஆடைகொடுத்து, இவ்விடம் சக்கரம் எறிந்து,
மெய்ப்படும் கீதை உரைத்து களைத்துக் கிடக்கின்றாயோ?
பவ்விய கைகளோடு உன்னையே சரணடைந்தேன்,
கஜேந்திரனை காத்த வரதா, என்னையும் காத்தருள்வாயே!

திருக்கண்ணங்குடி, திருக்கண்ணமங்கை, கபிஸ்தலம், திருக்கண்ணபுரம், திருக்கோவிலூர் ஆகிய பஞ்ச கிருஷ்ண தலங்களுள் இதுவும் ஒன்று. ஆதிமூலமே என்று பிரார்த்தித்த யானையை முதலையிடமிருந்து மீட்ட பெருமாள்ளின் சக்ராயுதத்தால் முதலை சாப விமோசனம் பெற்றது. யானைக்கும் முதலைக்கும் அருளிய பெருமாளின் தர்சிஅனத்தை அனுமனுக்கும் காட்டியதால் இத்தலம் கபிஸ்தலம் என்று பெயர் பெற்றது.

மூலவர்: கஜேந்திரவரதன் (புஜங்க சயனம் – கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்: ரமாமணிவல்லி, பொற்றாமரையாள்
ஆகமம்: வைகானஸ ஆகமம்
விமானம்: ககநாக்ருதி விமானம்
தீர்த்தம்: கஜேந்திர புஷ்கரிணி, கபில தீர்த்தம்
தல விருட்சம்: மகிழ மரம்
மங்களா சாசனம்: திருமழிசையாழ்வார்

திருக்கோயில் நடைதிறக்கும் நேரம்:

காலை 7.00 மணி முதல் பிற்பல் 12.00 மணி வரை
மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.

எப்படிச் செல்வது?

இத்தலத்திற்குச் செல்ல பாபாநாசம் ரயில் நிலையத்திலிருந்து ரயிலிலும் வரலாம். கும்பகோணத்திலிருந்து திருவையாறு செல்லும் பஸ்ஸிலும் வந்தடையலாம். இது குமபகோணத்திலிருந்து 14 கி.மீ தூரத்திலும், பாப நாசத்திலிருந்து 2 கி.மீ தூரத்திலும் உள்ளது.

சேவிப்பதன் பலன்கள்:

வறுமையில் வாடுபவர்கள், தீராத நோய் உள்ளவர்கள், தொழில்ப் போட்டியில் உயிருக்கே ஆபத்து உள்ளவர்கள் வந்து வணங்கி அருள்பெற வேண்டிய தலம் இது. 1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்கள் வந்து வணங்க தீராத கடன் தீரும்.

$$$

Leave a comment