திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -27

-கி.சாயிநாதன்

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது இருபத்தேழாம் திருப்பதி...

27. ஸப்த புண்ணிய ஷேத்திரம் திருக்கண்ணமங்கை

கால்பட்டு கல்லுக்குக் கிடைத்தது மோட்சம் -  உன்
கைசக்கரம் எறிந்து கஜத்துக்கு மோட்சம்
சொல் நமோ நாராயணாய என்றாலே மோட்சம்
நல் திருக்கண்ணமங்கை பக்தவச்சலனைப்
பார்த்தாலேயே மோட்சம் ஆகுமே!

ஒரு தலத்திற்கு இருக்க வேண்டிய ஆரண்யம், மண்டபம், தீர்த்தம், ஷேத்திரம், நதி, நகரம் ஆகிய ஏழு லட்சணங்களும் அமையப்பெற்றதால், ’ஸப்த புண்ணிய ஷேத்திரம்’ என்று அழைக்கப்படுகிறது திருக்கண்ணமங்கை. பாற்கடலில் உதித்த லட்சுமியை இத்தலத்தில் பெருமாள் மணம் புரிந்தார். அதைக் காண தேவர்கள் தேனீக்கள் வடிவில் வந்தனர் என்பது புராணம். இன்றும் தாயார் சன்னிதியில் தேன்கூடுகள் இருப்பதைக் காணலாம். கிருஷ்ண மங்கள ஷேத்திரம் என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது.

மூலவர்: பக்தவத்சலப் பெருமாள், பக்தராவிப் பெருமாள் (நின்ற திருக்கோலம்- கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்: அபிஷேகவல்லி, கண்ணமங்கை நாயகி.
உற்சவர்: பெரும்புறக்கடல்
விமானம்: உத்பல விமானம்
தீர்த்தம்: தர்சன புஷ்கரிணி
தல விருட்சம்: மகிழ மரம்
மங்களா சாசனம்: திருமங்கையாழ்வார்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:

காலை 7.30 மணி முதல் 12.30 மணி வரை
மாலை 5.00 மணி முதல் 8.30 மணி வரை

எப்படிச் செல்வது?

கும்பகோணம் – திருவாரூர் மார்க்கத்தில் 40 கி.மீ. தொலைவில் இருக்கிறது இத்தலம். திருச்சேறையிலிருந்து சென்றால் 24  கி.மீ.  தொலைவில் உள்ளது.

சேவிப்பதன் பலன்கள்:

குடும்பத்தில் பிரச்னை உள்ளவர்கள், மறுபிறவி வேண்டாம் என்று நினைப்பவர்கள் வர வேண்டிய தலம் இது.  8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்கள் வந்து தரிசிக்க மனக்குறை நீங்கப் பெறுவார்கள்.

$$$

Leave a comment