-கி.சாயிநாதன்
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது இருபத்தாறாம் திருப்பதி...

26. கண்ணன் திருவிளையாடல் புரிந்த திருக்கண்ணங்குடி
கண்ணனாய் நினைத்து வெண்ணெய் வைத்தார் வெண்ணெய்யைத் தின்று கண்ணனாய் வந்தவனே - அன்று கடிபட்ட கனி உண்டு சபரியைக் காத்தவனே - இங்கு பிடிபட்டு திருக்கண்ணங்குடியில் தாமோதரனாய் நின்றவனே - உன் திருவடிபட்ட இடம் தேடிவந்தேன் அருள்புரிவாயே!
வசிஷ்டருடன் கண்ணன் திருவிளையாடல் புரிந்த தலம் இது. வசிஷ்டர் பூஜித்த வெண்ணெயாலான கிருஷ்ண விக்ரகத்தை குழந்தையாக வந்த கண்ணன் விழுங்கிவிட்டு ஓட்டம் பிடித்தார். அவரை ரிஷிகள் பாசத்தால் மகிழ மரத்தில் கட்டிப்போட்டனர் என்கிறது தலபுராணம். உறங்காப்புளி, தோலா வழக்கு, ஊராக் கிணறு, காயா மகிழமரம் ஆகியவை இத்தலத்தின் சிறப்புகள். பஞ்ச கிருஷ்ண தலங்களுள் ஒன்று. ஆண்டுக்கு ஒருமுறை இங்குள்ள பெருமாள் நீறணிந்து ‘திருநீறணி விழா’வில் பங்கேற்பது சைவ- வைணவ ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது.
மூலவர்: லோகநாதப் பெருமாள், சியமளமேனியன் (நின்ற கோலம்- கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்: லோகநாயகி, அரவிந்தவல்லி
உற்சவர்: தாமோதர நாராயணன் (கையை இடுப்பில் வைத்துக்கொண்டு நிற்கும் கண்ணன்)
விமானம்: உத்பல விமானம்
தீர்த்தம்: சிரவண புஷ்கரிணி
தல விருட்சம்: மகிழ மரம்
மங்களா சாசனம்: திருமங்கையாழ்வார்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:
காலை 8.00 மணி முதல் 12.00 மணி வரை
மாலை 5.00 மணி முதல் 9.00 மணி வரை
எப்படிச் செல்வது?
இது திருவாரூக்கு 14. கி.மீ. தொலைவில் உள்ளது. சிக்கலுக்கும் கீவளுருக்கும் இடையில் ஆழியூர் என்னும் சிறிய ஊரிலிருந்து 1 கி.மீ. தொலைவில் இருக்கிறது இத்தலம்.
சேவிப்பதன் பலன்கள்:
பரம்பரைச் சொத்துக்கள் கைவிட்டுப் போகமால் காக்கவும், கடன் தொல்லையில் இருந்து மீளவும் இத்தலம் வந்து தரிசிக்க துன்பங்களில் இருந்து விடுபடலாம். 1, 10, 28, 19 தேதிகளில் பிறந்தவர்களும் 4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்கள் வந்து தரிசிக்க பிரச்னையிலிருந:து விடுபடலாம்.
$$$