-ச.சண்முகநாதன்
தமிழகத்தில் இசை என்றால் இளையராஜா தான். அவரது 81ஆவது பிறந்த நாள் இரு தினங்களுக்கு முன் (ஜூன் 2) அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அதையொட்டி, தனது முகநூல் பக்கத்தில் திரு. ச.சண்முகநாதன், இசையை ரசித்து, ருசித்து, கிறங்கி எழுதிய பதிவு இது… தாமதமான மீள்பதிவு என்றாலும், என்றும் நினைவில் கொள்ள வேண்டிய இனிய பதிவு… இளையராஜா அவர்களுக்கு இதைவிட நம்மால் என்ன செய்துவிட முடியும்?

தமிழுக்கும் இசைக்கும் நெருங்கிய தொடர்பு என்றென்றும் இருந்திருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு பிரம்மாண்டமான வாக்கேயக்காரர் தோன்றி தமிழர்க்கும், உலகத்தவர்க்கும் பேரிசை கொடுப்பது வழக்கம். இந்த வரிசையில் இளையராஜா நம் காலத்தில் தோன்றியிருப்பது நம் பாக்கியம்.
1970களில் இருந்த ரேடியோக்கள், பிரதானமாக, ஆகாசவாணியின் செய்திகளைப் பரப்பும் வலிமையை மட்டும் பெற்றிருந்தது. அந்த சமயத்தில் வானொலியை விற்று சென்னைக்கு வந்தவர் தமிழ்நாட்டின் வானொலியாக மாறினார். தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் ராஜா பாடல்கள். தமிழ்நாட்டின் வானம் ராஜாவின் பாடல்களை சுவாசித்துக் கொண்டிருந்தது. தெருவில் நடமாடியவர்கள் டீக்கடைப் பக்கம் ஒதுங்கி அமைதியாக பாடல் கேட்கத் தொடங்கினர். மெதுவாக இசையைப் பற்றி பேசத் தொடங்கினர்; டீக்கடைகள் பெருகின.
ஆகாசவாணி செய்திகளுக்கும் இரவில் அப்பா கேட்கும் வயலின் இசைக்கும் எங்கள் வானொலி போதுமானதாக இருந்தது. ஆனால் இளையராஜாவோ மல்டி ட்ராக்குகளில் பாடல்கள் செய்தார். 30 வயலின், கிட்டார், புல்லாங்குழல் என்று எல்லாம் ஒரே நேரத்தில் ஒலித்தன அவர் பாடல்களில். எங்கள் வீட்டு வானொலி திணறியது. வானொலியின் இயலாமை தேசியப் பேரிடராக அறியப்பட்டது. ஸ்பீக்கர் செய்து விற்கிறார்கள் என்று செய்தி வந்தது. ஏதேதோ ‘ஜப்பான்’ பெயரில் டூ-இன்-ஒன் செட்டுகள் விற்பனைக்கு வந்தது.
இசை இன்பம் கொடுக்கும், வணிகம் பெருக்குமா? இரண்டையும் செய்தது இளையராஜா இசை.
வானொலியில் இருந்து டூ-இன்-ஒன்னுக்கு எல்லோரும் முன்னேறினோம். ராஜா அவர் பாட்டுக்குப் பாட்டமைத்துக் கொண்டிருந்தார். திரும்பிப் பார்ப்பதற்குள் 200, 300 400 படம் என்று படைத்துத் தள்ளிக்கொண்டிருந்தார். அவர் செய்த counterpoint, மல்டி-ட்ராக் இசையை ரசிக்க மட்டும் காதுகள் இருந்தன; புரிந்து கொள்ளும் அளவு மூளை இருந்தவர்கள் வெகு சிலர். நாங்கள் எல்லோரும் ரசித்து, அவர் இசையில் திளைத்துக் கொண்டிருந்தோம்.
எங்களை கிட்டார் மோகத்தில் மூழ்கடித்து விட்டு, அவர் அடுத்த நிலைக்குச் சென்று கொண்டிருந்தார். Jimi Hendrix என்ற இசைக்கலைஞனின் ரசிகன் அவர். JImi Hendrix wahwah pedal உபயோகிப்பதில் முன்னோடி. அந்த inspiration மூலம் அவர் ‘senorita I love you’ மற்றும் ‘இது ஒரு நிலாக்காலம்’ (இரண்டாவது interlude) பாடல்களில் wahwah pedal உபயோகப்படுத்தி கிறங்கடித்தார். என்னவென்றே தெரியாமல் ரசித்துப் புசித்தோம் அந்த இசையை.
தர்மதுரை படத்தின் ‘சந்தைக்கு வந்த கிளி‘ பாடல் டீக்கடைகளில் ஒலிக்கும் பொழுது எங்கள் தெருவே திருவிழாக் கோலம் கொள்ளும். டீக்கடைக்காரர்கள் டீத்தூளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை கேசட் ரெகார்டிங்குகளுக்கு கொடுத்தனர்.
அந்நாளில் காசெட் ரெகார்ட் செய்பவர் ராக்ஸ்டார் அந்தஸ்து பெற்றார்.
தமிழ் சமுதாயத்தின் முக்கியமான உந்து சக்தியாகிப் போனார் இளையராஜா.
ராஜாவின் ரெகார்டிங் இன்னும் மெருகேறிக்கொண்டே போனது. எங்கள் வீட்டு டூ-இன்-ஒன் இப்பொழுது திணறியது. அதை நிவர்த்தி செய்யவும் வழி இருந்தது. இப்பொழுது amplifierகள் + ஸ்பீக்கர் மட்டும் தனியே விற்றார்கள். குறைந்த விலைக்கு. அதை வாங்கி குடத்தின் மேல் வைத்தால் ‘பாஸ்’ சவுண்ட் நன்றாகக் கேட்கும் என்றார்கள். எது எதையோ சேமித்து அதையும் வாங்கினோம். புதிதாக இரண்டு தண்ணீர்க் குடமும் வாங்கினோம்.
தண்ணீர் நிரப்ப வேண்டிய குடத்தில் இசையைச் சேர்த்து வைத்தோம். இசை தெரித்தது. ‘நிலா அது வானத்து மேலே’ பாடல் ஒலிக்கும் பொது எங்களுடன் சேர்ந்து குடமும் ஆனந்த நடமாடியது. தண்ணீருடன் இசையும் உயிர் வாழ இன்றியமையாததாகிப் போனது.
எங்கள் வீட்டு தண்ணீர்க் குடம் இளையராஜா இசையை தலையில் வைத்துக் கொண்டாடியது.
சுவரொட்டிகளில் இளையராஜா என்ற பெயர் இருந்தால் மட்டுமே படம் பார்க்கச் செல்வது வாடிக்கையாகிப் போனது.
சக்கரவர்த்தி அவர் – அன்றும் இன்றும். இசையின் நுணுக்கங்கள் தெரியாத காலம் அப்பொழுது இமயமாய்த் தெரிந்தார். இப்பொழுது நகக்கண் அளவு இசை தெரியும் பொழுது வானளவு உயர்ந்து நிற்கிறார்.
அவரது ஆன்மிகம், ஒழுக்கம் இன்னும் அவர்மீது மரியாதையை வளர்த்தது. அவரது இசையில் மௌனம் முக்கியமான ஆயுதம். பாட்டோ பின்னணி இசையோ, மௌனத்தை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தியவர் இளையராஜா. அப்படி ‘ஒரு படத்துக்கு’ இசையமைக்க மறுத்ததன் மூலம் அவர் மீது காதலே உண்டாயிற்று.
சாஸ்திரிய சங்கீதம், மேற்கத்திய இசை, கிராமிய இசை, Jazz இப்படி எல்லா வகையிலும் ஒருவர் இவ்வளவு செய்து வைக்க முடியும் என்றால், அவர் பெயர் இளையராஜாவாக மட்டுமே இருக்க முடியும்.
பாரதி பாடல்கள், மாணிக்க வாசகரின் திருவாசகம், இன்னும் செய்து வைத்திருக்கும் ஆழ்வார்களின் திவ்ய பிரபந்தம் என்று எதை எடுத்தாலும், அந்தப் புனிதமான வரிகளை இசையால் மெருகூட்டி, தெய்வத்தமிழை இசைகூட்டி நம் ஆன்மாவைக் குளிரச் செய்தவர். கர்நாடக இசையில் பெரும்பேர் எடுத்தவர்களும் ராஜாவைக் கொண்டாடுவது இன்னும் மனதுக்கு இதம் அளிக்கிறது.
நவீன உலகின் மகத்தான இசைக் கலைஞன் இளையராஜா எனும் இசைச் சித்தர். எங்கள் பிள்ளைப்பருவத்தை களிப்பிலும், இளமைப் பருவத்தை வியப்பிலும், இனி வரும் காலத்தை மகிழ்விலும் வைத்திருக்கும், வைக்கப் போகும் இணையில்லா இசைக் கலைஞனுக்கு, ராஜா சாருக்கு, எங்கள் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
இன்னும் ஒரு நூறாண்டுகள் இருங்கள் ராஜா சார்.
$$$