-கி.சாயிநாதன்
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது பதினேழாம் திருப்பதி...

17. அர்ச்சகருக்காக முடிவளர்த்த திருக்கண்ணபுரம்
திருக்கண்ணபுரத்தானே சௌரிராஜப் பெருமானே இடுக்கன் வருங்கால் காக்கும் நீலமேகப் பெருமானே – உன் நடக்கின்ற பேரழகை நான் காண வந்தேன் – நீ திருக்கண்ணபுரத்தில் திருக்காட்சி தருவாயே!
திருமங்கையாழ்வாருக்கு அஷ்டாஷர மந்திரத்தின் பொருளை பகவான் உபதேசித்த தலம். உபரைசிரவஸு மன்னனின் அகந்தையை நீக்கி நீலமேகப் பெருமாளாக தரிசனம் தந்தவர் இக்கோயில் மூலவர். கோயிலின் அர்ச்சகருக்காக சவுரி முடியுடன் காட்சி அளித்த உற்சவர் என்பதால் சௌரிராஜப் பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார். பஞ்ச கிருஷ்ணாரண்ய ஷேத்திரங்களில் முதலாவது தலம் இது… முனையதரையன் பொங்கல் இத்தலத்தின் சிறப்புப் பிரசாதம்.
மூலவர்: நீலமேகப் பெருமாள் (நின்ற கோலம்- கிழகே திருமுக மண்டலம்)
தாயார்: கண்ணபுர நாயகி
உற்சவர்: சௌரிராஜன்
ஆகமம்: வைகானஸம்
விமானம்: உத்பலாவதக விமானம்
தீர்த்தம்: நித்ய புஷ்கரிணி
மங்களா சாசனம்: பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகர ஆழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார்.
திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:
காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை
மாலை 5.00 மணி முதல் 8.00 மணி வரை

எப்படிச் செல்வது?
நாகப்பட்டினத்திலிருந்து நன்னிலம் செல்லும் வழியில் நன்னிலத்திற்கு கிழக்கே 8 கி.மீ. தொலைவில் உள்ளது இத்திருத்தலம். திருப்புகலூரில் இருந்து 2 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.
சேவிப்பதன் பலன்கள்:
மிகக் கொடிய பிரச்னைகள் தீரவும், பில்லி, சூனியம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களும் இங்கு வந்து பெருமாளுக்கு முனித்தரையப் பொங்கல் நைவேத்தியம் செய்து உண்டால் நலம் உண்டாகும். 2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்கள் இங்கு வந்து வணங்க மனக்கோளாறுகள் நீங்கும்.
$$$