-கி.சாயிநாதன்
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது பதினான்காம் திருப்பதி...

14. கோயில் நகரம் திருக்குடந்தை
எழுந்தாயோ, கிடந்தாயோ, எம்பெருமானே! குடந்தை மாநகரில் குழந்தை கண்ணனாய் யசோதையிடம் தவழ்ந்து, கோவிந்தனாய் ஏழுமலையில் எழுந்து, கோதண்டனாய் இலங்கையைக் கொண்டு, ரங்கனாய்க் கிடந்தாயோ ஸ்ரீரங்கத்தில் – அய்யனே, கிடந்த கோலத்திலேயே காண வந்தேன் திருக்குடந்தை! கிடைக்காதவனே அருள்புரிவாயே!
தமிழகத்தின் பிரதானமான ஆன்மிக பூமி கும்பகோணம். பிரளய காலத்தில் பிரமனால் பாதுகாக்கப்பட்ட கும்பத்தின் கோணத்திலிருந்த வித்துகள் விழுந்த தலம் என்பதால் காரணப்பெயர் பெற்றது. மகாமக குளம் இங்குள்ளது. சைவர்களுக்கும் (கும்பேஸ்வரர்) முக்கியமான புனிதத்தலம். சார்ங்கபாணி, சக்கரபாணி, ராமசாமி கோயில்கள் இங்குள்ளன. திருக்கோயில் நகரம் இது. ஹேம மகரிஷியின் மகளாக அவதரித்த மஹாலட்சுமியை தேருடன் எழுந்தருளி, மகர சங்க்ராந்தியன்று மணம் புரிந்தார் சார்ங்கபாணி பெருமாள். எனவே இக்கோயிலின் கருவறி தேர் வடிவில் உள்ளது. நாதமுனிகள் நாலாயிர திவ்ய பிரபந்தப் பாடல்களைத் தொகுக்க அடிகோலிய திருத்தலம் இது.
மூலவர்: சாரங்கபாணி (உத்தான சயனம்- கிழக்கே திருமுக மண்டலம்), ஆராவமுதன்
தாயார்: ஸ்ரீ கோமளவல்லி தாயார்
விமானம்: வைதிக விமானம்
தீர்த்தம்: ஹேம புஷ்கரிணி, அரசலாறு, காவிரி
மங்களா சாசனம்: திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வார், பெரியாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், ஆண்டாள்.
திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:
காலை 7.00 மணி முதல் 12.30 மணி வரை
மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை

எப்படிச் செல்வது?
கும்பகோணம் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது இத்திருத்தலம்.
சேவிப்பதன் பலன்கள்:
ஞாபக சக்தி குறைவாக இருக்கும் மாணவர்களும், அடிக்கடி விபத்தைச் சந்திப்பவரும், இனம் தெரியாத பயத்தில் .இருப்பவர்களும் இங்கு வந்து சாரங்கபாணியைச் சரணடைந்தால் நலம் பெறலாம். 8, 17, 26, 2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்கள் வந்து தரிசிக்க நல்ல மாற்றத்தை வாழ்வில் காண்பார்கள்.
$$$