-சு.சத்தியநாராயணன்
திருவள்ளுவர் பிறந்த நாளை திருப்பூர் அறம் அறக்கட்டளை அண்மையில் ‘வைகாசி அனுஷம்’ தினத்தில் கொண்டாடியது. அந்த அமைப்பின் செயலாளர் திரு. சு.சத்தியநாராயணன், அதற்கான காரணத்தை விளக்கி எழுதிய கட்டுரை இது…

அடையாளம் என்பது எங்கு வேண்டும், எங்கு வேண்டாம் என்பதில் மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள் சிலர். தாங்கள் கொண்டிருக்கும் அடையாளம் மட்டுமே எங்கும் இருக்க வேண்டும் என்ற அவர்களது சிந்தனை, என்ன வகையான மனநிலை? அது மனப்பிறழ்ச்சி அன்றி வேறில்லை.
திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை பொதுமறை என்று எல்லோரும் சொல்கிறார்கள். காரணம் 1330 குறள்களின் கருத்தும் உலகில் உள்ள மக்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படியானது என்கிறார்கள். அதனை நான் ஏற்றுக் கொள்கிறேன். இதனைச் சொல்கிறவர்கள் ஏற்றுக் கொள்கிறார்களா? உலக மக்கள் அதனை உண்மையில் ஏற்கிறார்களா?
திருக்குறளில் மால், இந்திரன், ஊழ்வினை பற்றி எல்லாம் பேசப்படுகிறது. இதை, எல்லாம் தமிழ் தெரிந்த, கடவுள் மறுப்பு பேசும் திராவிட இயக்கத்தவர்களும், கம்யூனிஸ்டுகளும் ஏற்கிறார்களா?
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்’ என்ற இந்த முழுக் குறளையும் அதன் கருத்துகளையும் இவர்கள் ஏற்கிறார்களா? அப்படி ஏற்கவில்லை என்றால் இதனை எப்படி உலகப் பொதுமறை என்று அழைக்க இயலும்?
சரி, உலகப் பொதுமறை என்று சொல்லி ஆகிவிட்டது. ஆனால் அப்படி உலகப் பொதுமைக்கான ஒரு நூலின் ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்? இன்றும்கூட ஒரு நல்ல எழுத்தாளர் கவிஞர் என்பவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று இவர்கள் ஒரு வரையறையைச் செய்து வைத்திருக்கிறார்கள். அது என்னவெனில், அவர் ஹிந்துவாக அனைத்தையும் தனிப்பட்ட முறையில் செய்து கொள்ளலாம். ஆனால் பொதுவெளியில் அவர் தன்னை ஹிந்துவாக அடையாளப்படுத்திக் கொள்ளக் கூடாது. ஆனால் இது பிற மதத்தவர்க்குப் பொருந்தாது.
இந்த வரையறையைத் தான் திருவள்ளுவர் மீதும் வள்ளலார் மீதும் ஏற்றி இருக்கிறார்கள்.
இன்று ஹிந்துக்கள் பலரும் தங்களது பிறந்த நாளை எப்பொழுது கொண்டாட வேண்டும் என்ற விதியினை மறந்துதான் இருக்கிறார்கள். தமிழகத்தில் ஒவ்வொருவருக்கும் அவரது பிறந்த தமிழ் மாதமும் நட்சத்திரமும் தெரியும். அது ராசிபலன் பார்க்கவும் ஜாதகம் பார்க்கவும் மட்டுமே உதவுகிறது என்பது வருத்தத்திற்குரியது. ஆனால் வழக்கில், பிறந்த மாதத்தில் பிறந்த நட்சத்திரத்தன்று தனது குலதெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் வழிபடும் முறைமையைக் கைவிட்டு, ஆங்கிலத் தேதியில் தனக்குச் சிறிதும் தொடர்பில்லாத ஆங்கில முறைப்படி கேக் வெட்டி, தீபம் ஏற்றி இறைவனை வழிபடும் மரபில் வந்தவர்கள் மெழுகுவர்த்தியை ஊதி அணைத்து பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்கள், இது மாற்ற இயலாத ஒன்றல்ல; அப்படியான நெடுந்தொலைவுக் காலத்தை நாம் கடந்துவிடவும் இல்லை.
இப்படி மாறிவிட்ட மனிதனுக்கு திருவள்ளுவரின் பிறந்த நாளாக முன்னோர்கள் கொண்டாடி வந்த, தமிழறிஞர்களும் ஏற்றுக் கொண்ட வைகாசி அனுஷத்தை, தை இரண்டு – ஜனவரி 15 அல்லது பதினாறு என்று மாற்றி அமைத்ததை மிகச் சுலபமாக ஏற்றுக் கொள்ள முடிந்தது. மேலும் திருவள்ளுவரின் பிறந்த நாள் வெகுஜனக் கொண்டாட்டத்தில் இல்லை. ஏன் திருக்குறளே வெறும் மதிப்பெண் பெறும் முக்கியமற்ற மனப்பாடப் பகுதியாக உலகின் ஆகச் சிறந்த கல்வியாளர்களால் வடிவமைக்கப்பட்டு விட்டது.
பிறந்த நாளை மாற்றினால் மட்டும் போதுமா? வள்ளுவர் என்ற பெயர் இயற்பெயராய் இருக்க வாய்ப்பில்லை. குலப் பெயராகத் தான் இருக்கும். அதிலும் புலமையின் காரணமாக திருவள்ளுவர் என்றாகி விட்டது. நெற்றியில் திருநீறு வேறு. நம்மால் தாழ்த்தப்பட்டவர், கல்வி மறுக்கப்பட்ட சமூகம் என்றெல்லாம் சொல்லப்பட்ட ஒரு சமூகத்தில் இருந்து ஒருவர் ஆகச் சிறந்த நூலை எழுதி இருக்கிறார் என்று வரலாற்றில் நிலை பெற்றுவிட்டால் என்ன ஆவது? அதிலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக. மேலும் ஹிந்து சநாதன தர்மத்தின் ஒரு பிரிவான சைவத்தின் அடையாளத்தோடு அவர் முன்னிறுத்தப்பட்டால், ஒரு ஹிந்துவின் நூலை நாம் எப்படி மிகச் சிறந்த நூலாகச் சொல்வது? இது சிலரின் கவலை.
எனவேதான் திருவள்ளுவரின் பிறந்தநாள், உருவம், மத அடையாளம் அனைத்தும் மாற்றப்பட்டு இருக்கிறது. இந்த அடையாளமற்ற உருவத்தினை நாம் எந்த கலாசாரத்தோடு இணைத்துப் பேச முடியும்? இன்றைய தலைமுறை, வாட்ஸ் ஆப்பிலும், முகநூலிலும் எழுதப்படுவதையும் சிலர் எழுதிய புத்தகங்களையும் படித்துவிட்டு அதனையே உண்மை வரலாறாக நினைக்கிறபொழுது இனி வரும் தலைமுறை எப்படி உண்மையைக் கண்டறியும்?

உருவு கண்டு எள்ளாமை வேண்டும், எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்றெல்லாம் சொல்கிறார் வள்ளுவப் பெருந்தகை. கருத்தைப் பார், உருவத்தைப் பார்க்காதே என்றும் புரிந்து கொள்ளலாம். ஆனால் வள்ளுவரின் உண்மை அடையாளம் இருக்கக் கூடாது என்று இவர்கள் கதறுவதன் பின்னணி என்ன என்று சாமானியர்களுக்கு விளங்கவில்லை.
திமுக நிறுவனர்களில் ஒருவரும், ‘ஒன்றே கோயில் ஒருவனே தேவன்’ என்று (திருமூலர் சொன்னது) கூறிய திரு. சி.என்.அண்ணாதுரை முதல்வராகப் பொறுப்பு வகித்தபோது, அவரது மேசையில் தமிழறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட திருவள்ளுவரின் திருநீறணிந்த புகைப்படமே இருந்தது. இதனை பிறகு மாற்ற வேண்டிய அவசியம் என்ன வந்தது?
ஆட்சியாளர்களின் திருப்திக்காகச் செயல்படும் எழுத்தாளர்கள், கவிஞர்கள் மிகுகையில் இடித்துரைக்கும் வேலையை யார்தான் செய்யக் கூடும்?
வள்ளலார் மன்றத்தில் ஊடுருவிய சிலரின் துணையுடன் இன்று அவரது நெற்றியில் இருந்த திருநீறு நீக்கப்பட்டு இருக்கிறது. வள்ளுவரையாவது நாம் யாரும் அறிந்திலோம்; முன்னோர்கள் பயன்படுத்திய ஒன்றைப் பயன்படுத்த வேண்டும் என்று விழைகிறோம். ஆனால் வள்ளலார் சமீப காலத்தில் வாழ்ந்த ஒருவர். அவர் நெற்றி நிறைய திருநீறு அணிந்திருப்பவர் என்பது தமிழக மக்கள் அறிந்ததே. ஆனால் அவரின் அடையாளத்தை மாற்றி இப்படித்தான் அவரது படம் பயன்படுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட, உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்? இது திணிப்பு இல்லையா? இதற்குப் பெயர் பாஸிஸம் இல்லையா?

திருவள்ளுவருக்கு நான் காவி உடுத்த வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் அவர் எப்படி நமது முன்னோரால் நமக்கு அறிமுகப்படுத்தப்பட்டாரோ அப்படியே நமது சந்ததிகளுக்கு நாம் கடத்த வேண்டும். நியாயவாதி வரலாற்றைத் திரிக்க விழையமாட்டான். வள்ளலாரும் அப்படியே அவரது அசல் உருவத்துடனே நமது சந்ததிக்குச் காட்டப்பட வேண்டும்.
வரலாறு என்பது உண்மையின் அடிப்படையில் உண்மையாகச் சொல்லப்பட வேண்டும். திருவள்ளுவருக்கும் வள்ளலாருக்கும் அழிக்கப்பட்ட அடையாளங்களால் நமக்கு என்ன பாதிப்பு? அந்தப் படங்கள் எப்படி இருந்தால் என்ற எண்ணம் சிலரிடம் இருக்கிறது.
நமது கலாசாரத்தில் இருந்தவரின் அடையாளங்கள் ஒவ்வொன்றாக அகற்றப்பட்ட பின் கலாசாரமற்ற அனாதையாக நாமனைவரும் இருப்போம். அப்புறம் கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த குடி என்று சொன்னால் உலகம் நம்மைப் பார்த்து நகைக்கும்.
இனியாவது நாம் சரியான புகைப்படங்களைப் பயன்படுத்த உறுதியேற்போம், வைகாசி அனுஷம் அன்று திருவள்ளுவர் பிறந்த நாளை சிறப்புடன் கொண்டாட முயல்வோம். நமது அடையாளம் என்பது, நமது மதம், கலாச்சாரம், கோயில்,வாழ்வியல் முறைமை, திருவிழாக்கள், பண்டிகைகள், விரதங்கள் என அனைத்தும் இணைக்கப்பட்ட ஒரு கதம்ப மாலை. இதில் எதனொன்றையும் யாராவது அறுத்தெறிய நாம் அனுமதித்தால், வெறும் நார் மட்டுமே மிஞ்சும். மலரில்லா நாருக்கு மணமில்லை. அடையாளமில்லா நமக்கு எதுவுமில்லை என்றாகி விடும்.
விழித்தெழு தமிழா! உறக்கத்தில் வீழ்ந்துவிடாதே! வரலாற்றை இழந்துவிடாதே!
$$$