-ச.சண்முகநாதன்

அழகான பயணம், அருகில் காதலுடன் காதலி. இனிமையான உரையாடல். இப்படி பயணத்தில் காதல்மொழி பேச வாய்க்கப் பெற்றவர் கடவுளின் செல்லப்பிள்ளைகள்.
கால்களுக்கடியில் பூமி உருளுவதை மறந்து பேசிச் சிரித்து, கண்களால் பேசி, காதல் செய்து, மகிழ்ந்திருப்பது மோட்சத்தின் முதல் படி.
ராமனும் சீதையும் இப்படி ஒரு நிலையில் இருக்க சந்தர்ப்பம் அமைந்தது.
குகனிடம் விடைபெற்று பின்னர் வனம் புகுகின்றனர் ராமனும் சீதையும், லட்சுமணன் உடன் வர.
ராமனும் லட்சுமணனும் வீரர்கள். காடும் மேடும் பழக்கப்பட்ட கால்கள் கொண்டவர்கள். ஆனால் சீதை? மலரினும் மெல்லிய பாதம் கொண்டவள். அவள் காட்டில் ராமனுடன் நடந்து செல்கிறாள்.
சீதையின் பயணம் சிறக்க வேண்டும் என்பதற்காக, ராமன் சீதையை மகிழ்விக்கும் விதமாக பேசிக்கொண்டே வருகிறான். அவள் கவலையுறக் கூடாது என்று முடிந்தவரை நல்ல விஷயங்களைப் பேசி மகிழ்விக்கிறான். நிறைய காதல் பேச்சுக்கள் பேச, ஒருவிதமான (Romance எனும்) Ramance நடக்கிறது.
செய்யும் செயல் எல்லாவற்றையும் திறம்படச் செய்வது ராமனின் இயல்பு. காதலிலும் அப்படியே. சீதையிடம் அவன் காட்டும் பரிவுக் காதல் பவித்ரமானது. சீதையிடம் அவன் பேசும் காதல் மொழி தித்திப்பு!
சீதையை அவன் விளிக்கும் விதமே அலாதி. கம்பன் பாடலை வாசிக்கும் பொழுது இது ராமன் – சீதை உரையாடலா இல்லை கண்ணன் – ராதா உரையாடலா என்று வியப்பு வருகிறது.
வனத்தில் நடந்து செல்லும் பொழுது திடீரென்று “மன்றலின் மலி கோதாய்! மயில் இயல் மட மானே!” என்று அன்புடன் அழைக்கிறான் சீதையை. (நறுமணம் மிக்க கூந்தலை உடையவளே! மயில் போல சாயல் கொண்ட மானே!)
மயில் போல சாயல் கொண்ட மான் – இதற்கு மேல் வர்ணனை உண்டோ?
இதற்கு சீதை இடதுபுருவம் தாழ்த்தி வலது புருவம் உயர்த்தி “என்ன திடீர்னு?” என்று கெத்து காட்டியிருப்பாள். அன்னையின் காதல் அல்லவா அது! நினைத்துப் பார்க்கவே சிலிர்க்கிறது.
Honey, sweety என்பதுதான் இந்தக் காலத்து காதல்மொழி. எவ்வளவு வறட்சி இந்த honey sweetyக்களில்!
அடுத்த முறை “மன்றலின் மலி கோதாய்! மயில் இயல் மட மானே!” என்று சொல்ல முயற்சிக்கணும்.
“என்ன?” என்று சீதை கண்களால், புன்னகையுடன் கேட்டதற்கு ராமன் சொல்கிறான்:
‘அடி இணை பொறைகல்லா’ என்றுகொல், அதர் எங்கும், இடை இடை மலர் சிந்தும் இன மரம்?-இவை காணாய்!
“வழியெங்கும் கிடைக்கும் கற்களில் உன் பாதம் பட்டால் நீ பொறுத்துக்கொள்ள மாட்டாய் என்று உனக்காக வழியெங்கும் மலர்களை தூவி வைத்திருக்கும் மரங்களைப் பார்” என்று ராமன் சொல்ல, சீதையும் அதை ரசித்தபடியே நடக்கிறாள். நாணத்தால் சிவந்த சீதை தலையைப் பின்தள்ளி சிரிக்கிறாள், ‘என்னவாயிற்று என் ராமனுக்கு?’ என்றெண்ணி.
“அப்புறம்?” என்று புருவங்களை மேல் தள்ளி, விழிகளைப் பெரிதாக்கி, கூர்மையாக்கி காதல் மொழி பேசுகிறாள். “மேலே சொல்” என்பது போல இருக்கிறது அவள் பாவனை.
வாள் புரை விழியாய்! உன் மலர் அடி அணி மானத் தாள் புரை தளிர் வைகும் தகை ஞிமிறு - இவை காணாய்!
“உன்னுடைய அடிகளில் அணிந்திருக்கும் அணிகலன்களைப் போல தளிரின் மீது அமர்ந்திருக்கும் வண்டுகளைப் பார்”. (தளிர் போன்றது பாதம், அதில் அணிந்திருக்கும் அணிகலன் வண்டு).
காதல் கவிதை எழுத கம்பன் கவிதை நமக்கு துணை இருந்தால் போதும் என்றிருக்கிறது.
இதைக் கேட்ட சீதை தோள்களை உயர்த்தி தலையை முன் கவிழ்த்து, கூந்தல் ராமனுக்கு தெரிய “இன்னும் வேறென்ன?” என்று காதல் பார்வை பார்க்கிறாள்.
கோள் புரை இருள் வாசக் குழல் புரை மழை-காணாய்! தோள் புரை இள வேயின் தொகுதிகள் - அவை காணாய்!
“உன்னுடைய கூந்தல் போல கரிய நிறம் கொண்ட மேகத்தைப் பார். உன்னுடைய தோள்களைப்போன்று காட்சியளிக்கும் மூங்கிலைப் பார்” என்று சீதையை தோள்களையும் கூந்தலையும் கவிதைக்கண்ணுடன் பாடுகிறான்.
இருவரும் ஆனந்தமாய்ச் சிரிக்கின்றனர்.
ராமன் – சீதையின் காதல்மொழி கேட்டு நமக்கும் மனதுக்குள் ஆனந்தம் பிறக்கிறது.
இந்தப் பாடல்கள் படித்து முடித்தவுடன் பெங்களூரு வெய்யிலின் கடுமை குறைந்து பெருமழை பொழிகிறது.
காதலிக்க வைக்கும் கம்பன் தமிழ்!
$$$