உருவகங்களின் ஊர்வலம்- 14

-பி.ஆர்.மகாதேவன்

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #14

14. புரியாதவர்களுக்குப் புரியாது!


அனைத்து உயிர்களுக்கான குரலையும்
அவரே கொடுத்து அனுப்புகிறார்
ஆனால்,
சிங்கத்துக்கு மட்டுமே கர்ஜனையைக் கொடுக்கிறார்.
(ஊளையிடும் நரிகளாலும்
ஓநாய்களாலும் இதைப் புரிந்துகொள்ள முடியாது).

அத்தனை பேருக்கும்
மொழியையும் எழுத்துகளையும் கொடுத்து அனுப்புகிறார்
ஆனால்,
வேதங்களைம் தரிசனங்களையும்
ரிஷிகளிடமும் ஞானிகளிடமும் மட்டுமே
கொடுத்து அனுப்பினார்.
(கள்ள மெசையா புத்திரர்களுக்கும்
போலி இறைத்தூதன் புத்திரர்களுக்கும் இது புரியாது).

அகிலம் முழுவதும் கடல் நீரால் நிரப்புகிறார்.
ஆனால்
தாகம் தணிக்கும் நன்னீராக
சில ஊற்றுகளை மட்டுமே ஆக்குகிறார்.
(தாகத்தால் ஒரு சொட்டுக்காக ஏங்கியிருந்தால்
வலி புரிந்திருக்கும்
தணித்தவனின் அருமை புரிந்திருக்கும்).

வானம் முழுவதும் ஊர்கின்றன மேகங்கள்.
ஆனால்,
சில மட்டுமே சூலுற்றுப் பொழிகின்றன பெருமழையை.
(பாலை நிலங்களுக்கும்
பனி நிலங்களுக்கும் அந்த மழையின் அருமை புரியாது).

அத்தனை நிலத்தையும் படைத்தது அவரே.
ஆனால்,
இமயமாக எழுந்து நிற்பது ஒன்றே.
(அது உருவாக்கிய ஜீவநதிகளை,
அதன் வற்றாத முலைப்பாலை அருந்தியவருக்கே
அதன் அருமை புரியும்).

அத்தனை பேர் கையிலும் ஆயுதத்தைத் தந்தாலும்
செங்கோலை ஆண்டவன் தருவது ஒருவனிடம் மட்டுமே.
(ஒற்றர் படைத் தலைவிக்கும்
தேசத் துரோகிகளுக்கும் புரிந்துகொள்ள முடியாது இதை).

வானரசேனை முழுவதையும் வழியனுப்பிய எம்பிரான்
அனுமனிடம் மட்டுமே கொடுத்து அனுப்பினார் கணையாழியை.
(ராமசேனைக்கு மட்டுமே இது புரியும்).

அத்தனை கல்லையும் சிலையையும் படைத்தது அவரே.
ஆனால்,
பூஜிக்கத் தக்கது கருவறைத் திருமேனி மட்டுமே.
(பக்தர்களுக்கு மட்டுமே இது புரியும்).

அத்தனை துணிகளைப் படைத்ததும் அவரே.
ஆனால்,
வணங்கத் தக்கது தேசியக் கொடி மட்டுமே.
(தேச பக்தர்களுக்கு மட்டுமே இது புரியும்).

அத்தனை பேருக்கும்தான் நடக்கக் கால்கள் இருக்கின்றன.
மலையுச்சியில் ஏறி நிற்பவருக்கு மட்டுமே
தன்னுடைய கால் தனக்கு எதனால் தரப்பட்டதென்பது தெரியும்.
(அடிவாரத்தில் உருண்டுகொண்டிருப்பவர்களுக்கு
அது புரியவே செய்யாது).

$$$

Leave a comment