திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -5

-கி.சாயிநாதன்

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது ஐந்தாம் திருப்பதி...

5. மும்மூர்த்திகளும் அருள்பாலிக்கும் திருக்கரம்பனூர்

கல்தூணாய் கதம்ப மரமாய்,
வாமனனாய் விஸ்வரூபனாய்,
பலரூபம் பக்தனுக்காகக் கொண்டாய்!
வல்லி தாயாரின் மணாளனே,
உத்தமர் கோவிலில் உறைபவனே!
உனைக் காண வருவேனே கதம்பவனத்துக்கே!

பிரமனின் தலையை அரிந்த சிவனின் கரத்தில் அது ஒட்டிக்கொள்ள, அந்தச் சிக்கல் தீர்ந்த தலம் திருக்கரம்பனூர் என்கிறது தலபுராணம்.

மூலவர்: புருஷோத்தமன் (புஜங்க சயனம்), உத்தமர்
தாயார்: பூர்வாதேவி, பூர்ணவல்லி
ஆகமம்: வைகானஸம்
விமானம்: உத்யோக விமானம்
தீர்த்தம்: கதம்ப தீர்த்தம்
தல விருட்சம்: வாழை மரம்
மங்களா சாசனம்: திருமங்கையாழ்வார்.

சிறப்பு திருவிழாக்கள்:

கார்த்திகை தீபத் திருவிழா.  தைப் பூசத்திலும் மாசி மகத்திலும் பெருமாளுக்கும், சிவனுக்கும் கொள்ளிடத்தில் தீர்த்தவாரி நடைபெறும். சித்திரையிலும், வைகாசியிலும் தேர்த் திருவிழா சிறப்பாக நடைபெறும்.

தனிச்சிறப்பு:

சிவன், பிரமன், பெருமாள் மூவரும் தேவியருடன் அருள்பாலிக்கும் திருத்தலம் இது. சயனக் கோலத்தில் இருக்கும் பெருமாள் கையில் சக்கரத்துடன் காட்சி அளிக்கிறார். பிரம்மாவுக்கு தனியே சன்னிதி உள்ளது சிறப்பு.

எப்படிச் செல்வது?

உத்தமர் கோயில்,  திருச்சியில் இருந்து விழுப்புரம் ரயில் பாதையில் இருக்கிறது.  திருச்சி அல்லது ஸ்ரீரங்கத்தில் இருந்து (1.5 கி.மீ.) திருவெள்ளறை செல்லும் பஸ்ஸிலும் போகலாம்.

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:

காலை 5.30 மணி முதல் இரவு 8.30 வரை.

சேவிப்பதன் பலன்கள்:

உடலிள்ள நோய்கள் விலகவும், தோஷம் நீங்கவும் இங்கு வந்து பெருமாளை வணங்க நலம் கிடைக்கும்.

5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களும், 8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களும் இங்கு வந்து சேவிக்க சிறப்புப் பலனைப் பெறுவார்கள்.

$$$

Leave a comment