உருவகங்களின் ஊர்வலம் -12

-பி.ஆர்.மகாதேவன்

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #12

12. ஆதி மலருக்கு அளித்த சத்தியம்

மரபணு மாற்றப்பட்ட காய்களில்
ஆதாரச் சுவை இருப்பதே இல்லை.

மரபணு மாற்றப்பட்ட கனிகளில்
ஆதார இனிப்பு இருப்பதே இல்லை.

மரபணு மாற்றப்பட்ட மலர்களில்
நறுமணம் இருப்பதே இல்லை.

இவை எளிதில் அழுகாது
ஆனால்,
மரபானவற்றை எளிதில் அழித்துவிடும்.

வேதி உரங்கள் வேறு மண்ணை மலடாக்குகின்றன.

பூச்சிக் கொல்லிகள் வேறு
அயல் மகரந்தச் சேர்க்கை செய்யும்
பூச்சிகளையும் சேர்த்தே அழிக்கின்றன.

காடழித்து ஆரம்பித்த விவசாயம்
நாடழித்து முடியப் போகிறது.

*

நவீனம் எட்டியிராத எஞ்சிய வெளியில்
மரபான பூக்கள் ஓர் ஓரமாகப் பூத்துக் குலுங்குகின்றன.

ஆழ்மன மின்காந்த அலைகளைப் பின்தொடர்ந்து
ஆதி வண்ணத்துப் பூச்சிகள்
அந்நிலம் தேடிக் கண்டடைந்து விடுகின்றன.

வர்ணங்கள் உதிர்த்த நவீன வண்ணத்துப்பூச்சிகளால்
ஒரு காலத்திலும் எட்ட முடியாத
கருவறையில் மலர்ந்திருக்கின்றன
அந்த மரபின் மலர்கள்.

ஆதி வண்ணத்துப்பூச்சிகளுக்கான தேனை
அள்ளி அள்ளித் தருகின்றன மரபான மலர்கள்.

அந்த மலரின் தேன் அருந்தவே பிறந்த பறவைகள் அவை.
அந்த வண்ணத்துப்பூச்சிகளுக்குத் தேன் தரவே மலர்ந்த பூக்கள் அவை.

வந்தவரை வாழவைத்து
வந்தவரால் வாழ்வு பெறும் மரபு மலர்ந்து வரவேற்கிறது.

இனிய விருந்தோம்பல்..
இனிய வாழ்க்கை…

வாழ்வும் இலக்கும் ஒருசேரப் பூர்த்தியாகும் தருணம்.

ஆருயிர் நண்பனுக்காக
முடிவற்று நீண்டிருந்த காத்திருப்பு…
எல்லையற்ற பேரன்பு …
இரு தரப்பிலும் உணரப்படும் நிமிடங்கள் யுகங்கள்.

வாழ்ந்து
வாழ விடும்
வாழ்க்கையின் பூரணத்துவம்.

பிறவித் தேன் பருகிய வண்ணத்துப்பூச்சி
பிரதியுபகாரமாக காலில் சுமந்துகொள்கிறது
மரபணு மாற்றப்படாத மலரின் மகரந்தத் துகள்களை!

இன்னொரு மரபணு மாற்றப்படாத மலரைத் தேடி
ஆரம்பிக்கிறது அதன் நெடுவழிப் பயணம்.

ஆழ்மனதில் பதிந்திருக்கும் வரைபடம்
இடையில் இருக்கும் தூரத்தைக் காட்டுவதே இல்லை.
இடையில் இருக்கும் பொருட்களையும் காட்டுவதில்லை.

இரும்பை ஈர்க்கும் காந்தம் போல் இழுக்கிறது, இழுபடுகிறது.

ஆக்கிரமிக்கப்பட்ட நிலமெல்லாம்
அடர்ந்து கிடக்கின்றன
மரபணு மாற்றப்பட்ட மலர்ச் செடிகள்-
ஓர் அரக்கன் மல்லாந்து படுத்துக் கிடப்பது போல.

மரபணு மாற்றப்பட்ட மலர்களின் வசீகரம்
வண்ணத்துப்பூச்சியைப்
பறக்கவிடாமல் கீழே இழுக்கின்றன.

மரபணு மாற்றப்பட்ட மலர் செடிகளின் ராட்சஸத் தண்டுகள்
நெடுநெடுவென வளர்ந்து
வண்ணத்துப்பூச்சியின் பாதையை மறிக்கின்றன.

ஆதி மலரின் தேன் துளியைப் பருகிய
ஆதி வண்ணத்துப் பூச்சி
ஆதி மலருக்கு ஒரு சத்தியம் செய்து தந்திருக்கிறது.

‘என் காலில் ஏந்தியிருக்கும் இந்த மகரந்தத் துகளை
மரபணு மாற்றப்படாத
இன்னொரு ஆதி மலர் இதழுக்கே கொண்டு சேர்ப்பேன்’.

இந்தத் தேன்துளி உலகில் இருக்க வேண்டுமென்றால்
அந்த மலரே சூலுற்றாக வேண்டும்

பிரதியுபகாரம் மட்டுமல்ல,
பிறவிக் கடமையும் அதுவே.

பல வர்ண ஆதி வண்ணத்துப் பூச்சி
தன் மெல்லிய சிறகுகளைப் படபடவென அடிக்கிறது.

கண்ணுக்கெட்டிய தூரமெங்கும்
கைவிரித்து மறிக்கின்றன
மரபணு மாற்றப்பட்ட செயற்கை வன மலர்கள்.

காற்று முடிந்த வரை மெதுவாக வீசப் பார்க்கிறது.
வெய்யில் முடிந்தவரை மென்மையாகச் சுடப் பார்க்கிறது.

மென் கால்களில் ஒட்டிய மகரந்தத் துகள்கள்
மெள்ள மெள்ளப் பிடிமானம் இழக்கின்றன.

இன்னொரு ஆதி மலரைக் கண்டடைய
இத்தனை தொலைவு பறத்தலா?

வண்ணத்துப்பூச்சி
தன் மென் கால்களால் இறுக்கிப் பற்றிக் கொள்கிறது-
மரபணு மாற்றப்பட்ட மலரில் உதிரப்போகும் மகரந்தத் துகள்களை.

இன்னொரு ஆதி மலர்
இதுவரை கண்ணில் படவில்லை…
மின்காந்த அலைத்தடம் மெள்ள வலுவிழக்கிறது.
சிறகுகள் மெள்ளத் தளர்கின்றன.
கண்கள் மெள்ள இருள்கின்றன.
பருகிய தேன் ஊட்டிய வலிமை தீரப் போகிறது.

சுமந்து செல்வது வெறும் மகரந்தத் துகளை அல்ல…
ஆதி மலருக்குச் செய்து கொடுத்த ஆதி சத்தியம்!

அது அந்தப் பறவையைப் பறக்க வைக்கிறது.
அதனால்
காற்றும் உதவுகிறது.
ஒளியும் உதவுகிறது.

பறந்து பறந்து இறுதியில்
ஆதி மலரின் இன்னொரு செடியை
ஆதி வண்ணத்துப்பூச்சி கண்டடைந்துவிடுகிறது-
அத்தனை ஆநிரைகள் இருந்தாலும்
தன் தாயைக் கண்டுபிடித்து
ஓடோடிச் சென்று மடி முட்டும் கன்றைப் போல!

நெருங்க நெருங்க
எல்லையற்று விரிகின்றன
காத்திருந்த மலரிதழ்களும்.

சிறகசைக்காமலே இறங்குகிறது பறவை.

அப்போது
அந்த மலர்ச்செடியின் தண்டில் மெள்ள ஊர்கிறது
ஒரு கருஞ்சிவப்பு வண்டு.
பூச்சிக் கொல்லிகளுக்குப் பழகிப் பழகி
புது வலிமை பெற்று
மரபணு மாற்றிக்கொண்ட மரவண்டு.

அதன் மேலோடு மிகவும் வலிமையானது…
அதன் கண் பார்வை அதிநுட்பமானது…
அதன் பசி மட்டுமல்ல
இருப்பே கோரமானது.

தேனின் சுவையோ,
ஆதி மலரின் அருமையோ,
ஒன்றுமே அதற்குத் தெரியாது.
கெட்டி தட்டிப்போன உணர் கொம்புகளால்
கிடைத்ததையெல்லாம் வெட்டி எறிந்து செல்லும்.

ஆதி மலர்ச் செடியில் அது மெள்ள ஊர்ந்து மேலேறுகிறது.
மகரந்தத்துகள் சுமந்த வண்ணத்துப் பூச்சி
மெள்ளத் தன் மலரை நெருங்குகிறது.

ஓரடி பல வர்ணப் பறவை இறங்க,
ஈரடி கருஞ்சிவப்பு வண்டு மேலேறுகிறது.

ஆதி மலரின் தண்டு அந்த வண்டின்
கொடுக்கு வெட்டுக்களைத் தாங்க முடிந்ததுதான்.
இலைக்காம்புகள்கூட வலுவானவைதான்
ஆனால் –
மலரின் காம்போ அதி மென்மையானது.

வீசும் காற்றைத் தாங்கும்…
விழும் பனியைத் தாங்கும்…
காயும் வெய்யிலையும் கூடத் தாங்கும்…
சின்னஞ்சிறிய வெட்டுக் காயத்தை மட்டும்
அதனால் தாங்க முடியாது.

கருஞ்சிவப்பு வண்டு
மெள்ள மலர்க் காம்பை நெருங்குகிறது

வண்ணத்துப்பறவை
யுக மகரந்தத்துகளை ஏந்தியபடி
மலரை நெருங்குகிறது.

அத்தனை இதழையும்
அல்லிவட்டத்தையும் புல்லிவட்டத்தையும்
அகல விரித்து ஆசையுடன் மலர்கிறது ஆதி மலர்.

செய்து கொடுத்த சத்தியத்தை நிறைவேற்றப்போகும்
மன நிறைவுடன் வர்ணப் பறவை
ஆதி மலரில் கால் பதிக்கிறது.

உந்தி விரையும் விந்தணுவாய்
உதிர்கின்றன மகரந்தத் துகள்கள்.

கருஞ்சிவப்பு வண்டு மலர் காம்பை எட்டிவிட்டது.

கூர் கத்திபோலான உணர் கொம்பைத் தீட்டிக்கொள்கிறது.
மென்மையானவற்றையெல்லாம்
வெட்டி எறிவதே அதன் விபரீத வாழ்க்கை.

ஆதி மலர் உள்வாங்கிக் கொள்கிறது
அத்தனை மகரந்தத் துகள்களையும்.

ஆதி வண்ணத்துப்பூச்சி
மலர் மஞ்சத்தில் மெள்ளச் சாய்ந்தபடி
அதி மன நிறைவுடன் உறிஞ்சுகிறது
ஆதித் தேன் துளிகளை.

கருஞ்சிவப்பு வண்டின் கத்தி
மலர்க் காம்பை நோக்கி நீள்கிறது…

ஏ காற்றே…
இம்மலரை நீ காக்க விரும்பினால்
சற்றே வேகமாக வீசு.
நாயுருவியை உதிர்க்கும் விலங்குத் தோல் போல
மலர்ச் செடி இந்த வண்டை உதிர்த்துவிடட்டும்!

ஏ ஒளியே…
நீ இம்மலர் காக்கப்பட வேண்டியதென்று நினைத்தால்
இந்தக் கருஞ்சிவப்பு வண்டின் கண்களில்
சற்றே வீரியமாக ஒளியைப் பாய்ச்சு.
செத்து விழாவிட்டாலும்
குருடாகிக் கீழே விழுந்தாலும் போதும்.

மரபணு மாற்றப்பட்ட உலகம் நாளை தானாக
தன்னகங்காரத்தால் அழியும் என்பது உண்மையே என்றாலும்…
ஆதி மலர்களும்
ஆதி பறவைகளும்
ஆதி தேன் துளியும்
ஆதி மகரந்தத் துகள்களும்
அழியாமல் காப்பாற்றப்படவும் வேண்டுமல்லவா?

காற்றே வேகமாக வீசு…
மலர்க் காம்பு மேலுயர்ந்து கொள்ளட்டும்!

ஒளியே கூர்மையாகக் குவிந்து பாய்ச்சு…
கருஞ்சிவப்பு வண்டின் கண்கள் கருகிப் போகட்டும்!

ஏனென்றால்-
வாழவைத்து வாழும்
இந்த ஒற்றை மலரில்தான்
இந்தப் பிரபஞ்சத்தின் ஆன்மா
ஆதி வர்ணங்களாக…
மெல்லிய நறுமணமாக…
இனிய தேன் துளியாக உயிர்த்திருக்கிறது.

இங்கு சூல் தரிக்கப் போவது இன்னொரு மலரல்ல,
இந்தப் பிரபஞ்சத்தின் ஆன்மா.

இம்மலர் உதிர்ந்தால்
இந்தப் பிரபஞ்சமும் உதிரும்.

காற்றே கேள்…
ஒளியே கேள்…
விண்ணே கேள்…
மண்ணே கேள்…
அழிவின் விளிம்பில் அசைந்தாடிக் கொண்டிருப்பது
இந்த ஆதி மலரின் மென் காம்பு மட்டுமல்ல.

$$$

Leave a comment