-பி.ஆர்.மகாதேவன்
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #11

11. தள்ளு தள்ளு தள்ளு!
நம் சாலைக்குப் பொருத்தமில்லாத நவீன வண்டி
நடுவழியில் அவ்வப்போது நின்றுவிடுகிறது.
அதைத் தவிர்க்க முடியாதுதானே?
அயல்நாட்டு இறக்குமதியான
அதன் உபரி பாகங்கள் நம்மிடம்
கைவசம் இருப்பதுமில்லை.
பயனாளர் வழிகாட்டிக் குறிப்புகளில்
சொல்லப்பட்ட வழிமுறைகள் எல்லாமே
அயல்நாட்டுத் தீர்வுகளாகவே இருக்கின்றன.
தேவைகள்தானே கண்டுபிடிப்புகளின் தாய்?
நம்மவர்கள் அந்த நவீன வண்டியைப்
பின்னால் இருந்து தள்ளி ஓடவைக்கும்
தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தனர்.
‘ஏலேலோ ஐலஸா’ என்று
ஏற்கெனவே படகுகளை
கரையில் காலூன்றித் தள்ளிய மரபினர்,
இப்போது தரையில் காலூன்றி
உற்சாகத்துடன் உந்தித்தள்ள ஆரம்பித்தனர்.
வண்டியில் ஏறியிருந்தவர்கள்
தள்ளுபவர்களின் சுமை குறைக்க,
தாமாக இறங்கிக்கொண்டு
தம்மாலான உதவி செய்தனர்.
சேவை மனம் கொண்ட சீர்திருத்த சேவகர்கள்
தமது கட்டை வண்டிகளை ஓரமாக நிறுத்திவிட்டு
ஸ்வயமாக ஓடோடி வந்து தள்ளினர்.
அயல்நாட்டு வண்டியின் பிரமாண்ட சக்கரம்
மெள்ள உருள ஆரம்பித்தது.
அப்போது
எங்கிருந்தோ புதிதாக முளைத்து
(அல்லது புதிதுபோல உருமாற்றிக் கொண்டு)
உடன்பிறப்பென்றும் சொல்லிக்கொண்ட ஒருத்தன் ‘உதவ’ முன்வந்தான்.
நாலடி தள்ளி நின்றுகொண்டு
‘தள்ளு தள்ளு தள்ளு’ என்று
காற்றில் கையை முன்னும் பின்னுமாக அசைத்து
கன வேகமாகத் தள்ளும்படிக் கத்தினான்.
அத்தனை பேரின் ஒன்றுபட்ட முயற்சியால்
அசைந்து கொடுக்கத் தொடங்கிய வண்டி,
தன்னுடைய உற்சாக கோஷத்தாலும் உருட்டுகளாலுமே
உருள்வதாகப் பீற்றிக் கொண்டான்.
நம்மவர்கள் சிரித்தபடியே விலகிச் சென்றனர்.
அது நாம் செய்த முதல் தவறு.
முற்றும் தவறாகவும் போனது.
அதன் பின்
நடுவழியில் நிற்கும் வண்டிகள் எல்லாவற்றின்
பின்னாலும் நின்றுகொண்டு,
‘தள்ளு தள்ளு’ என்று சீன் காட்டுவதே
அவன் வழக்கமாகிப் போனது.
கஷ்டப்பட்டுத் தள்ளியவர்களில் ஒருவராவது
ரெண்டு அடி முன்னால் வந்து
‘பொளேரென்று’ ஓர் அறை கொடுத்திருந்தால்,
இந்த அவலநிலை வந்திருக்காதுதான்.
நடந்து முடிந்ததைச் சொல்வதால்
ஒரு நன்மையும் வரப் போவதில்லை.
ஆனால்,
வேகமாகப் பாய்ந்து வரும் நம் புதிய வண்டி
பிரேக் பிடிக்கவில்லை என்று சீன் போட்டபடியாவது
ஒரே தள்ளாகத் தள்ளி ஓரங்கட்டிவிட வேண்டும்.
அல்லது
செல்ஃப் எடுத்து முன்னால் செல்லத் தொடங்கியிருக்கும்
பழைய வண்டியாவது
ரிவர்ஸ் கியரில் வேகமாக வந்து
‘சீ… ஓரமாப் போ’ என்று எத்தித் தள்ளிவிட வேண்டும்.
நவீன சாலையில் நாற் சக்கரங்களாலும் சதைத்து
ஹைவேஸில் மாட்டிய தவளை போல
ஆக்கவெல்லாம் வேண்டாம்.
அதற்கு அத்தனை அவசியமும் உண்டு என்றாலும்
நமக்கான கண்ணியத்தை, கருணையை
கைவிடக் கூடாது நாம்.
ஒரு காமெடி பீஸின் குரல்-
இத்தனை உரக்க… இத்தனை காலம்…
இத்தனை அதிகாரமாக நீடிப்பது
யாருக்குமே நல்லதல்ல.
பைத்தியக்கார விடுதியில் அடைக்கப்பட வேண்டியவற்றைத்
தெருவில் உலவ விடவே கூடாது.
அதனதன் இடத்தை அதனதற்குரிய காலத்தில்
காட்டிவிட வேண்டும்.
இல்லையென்றால் இப்படித்தான்.
வீடு நோக்கிய
உங்கள் எல்லா பயணங்களும் என்னாலே
வெளி உலகம் நோக்கிய
உங்கள் எல்லா பயணங்களும் என்னாலே
என அந்தக் குரல் எல்லாவற்றையும்
சொந்தம் கொண்டாடியபடியே திரியும்.
அது மிகவும் கேவலமானது…
மிகவும் அருவறுப்பானது…
நாமே நம் வரலாறை இப்படி மலினமடையவிட்டால்,
மலினமடைவது
நம் வரலாறாக மட்டுமே இருக்காது.
$$$