-பி.ஆர்.மகாதேவன்
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #7

7. அனலிடைப் புழுவின் நடனம்
அன்பான நடுநிலையாளர்களுக்கு
கழைக்கூத்தாடியின் நிபுணத்துவத்துடன்,
மெல்லிய கயிறில்
அதி அந்தரத்தில்
இடமும் சாயாமல் வலமும் சாயாமல்
சாகசம் புரிவதாக
உங்களுக்கு நீங்களே தட்டிக்கொடுத்துக் கொள்கிறீர்கள்.
நிஜத்தில் நீங்கள் யாரென்பது தெரியுமா..?
பாலைவன வணிகக் கும்பல் நடுவே
ஆடும் அடிமை, விலைமகள்கள் போன்றவர்களே!
உண்மையில் நீங்கள்
அடிமைகளும் அல்ல;
விலைமகள்களும் அல்லதான்.
ஆனால், உங்களையறியாமலே
அடிமையாக்கப்பட்டவர்கள்;
விலைமகளாக்கப்பட்டவர்கள்.
அதிலும் உங்களில் பலரின்
நட்ட நடுநிலை நடனமானது
பிராயம் போன வேசிகள் விடாப்பிடியாக
அத்தனை அலங்காரங்களும் செய்துகொண்டு
ஆளை மயக்க ஆடும் கூத்துகளைப் போலவே
இருக்கின்றன.
நெருப்பைச் சுற்றி அமர்ந்துகொண்டு
ஹூக்கா புகைத்தபடி,
உங்கள் ஆட்டங்களை
அவர்கள் ரசிக்கிறார்கள் என்பது உண்மையே.
ஆனால்,
உண்மையில் அவர்கள் முன்னால்
ஒரு கோமாளி நடன மங்கையாகியிருக்கிறீர்கள்.
உங்கள் தொய்ந்த முலைகள் போன்ற கலைப்படைப்புகள் / கருத்துகள்;
பருத்த இடை போன்ற உங்கள் பிரபல்யம்
அவர்களுக்கு கிளர்ச்சியூட்டுவதாக
நீங்களே நினைத்துக் கொள்கிறீர்கள்.
அவர்கள் தினார்களை உங்கள் மேலும் வீசுவதை
நிஜமென்றே நம்புகிறீர்கள்.
உங்கள் மார்பிடைப் பள்ளத்தில் சிக்கும் தினார்களை
மார்பை அசைத்து அசைத்தே
உள்ளும் புறமுமாக உந்தி நீங்கள் ஆடும் நடனத்துக்கு
அவர்கள் ’வாஹ் வாஹெ’ன்று கூச்சலிடுவதை
உங்கள் கலைத் திறமைக்குக் கிடைக்கும்
கை தட்டலாக நினைத்துக் கொள்கிறீர்கள்.
போதை தலைந்கேறி ஒருவன் அருகில் வந்து
மார்புக்கச்சையைப் பற்றுகையில்
பத்தினிபோல பற்றிக்கொள்ளும் நீங்களே
முடிச்சை அவிழ்த்துவிட்டு
முலை குலுங்க ஆடுவதைக் கண்டு
அவர்கள் பெரிதும் ரசிப்பதாக நினைத்துக் கொள்கிறீர்கள்.
வயதானாலும் வசீகரம் மறையவில்லை என்று நினைத்துக்கொண்டு
சுழன்று சுழன்று ஆடுபவளைப்போல ஆடுகிறீர்கள்.
கை தட்டலும் தினார்களும் குவிகின்றன என்றால்
கலை நயம் மிளிர ஆ(ட்)டிக் கொண்டிருப்பதாகத் தானே
நினைக்கத் தோன்றும்?
உங்களைப் பார்த்தால்
மிக மிக வெறுப்பாக இருக்கிறது,
நடுநிலை நடனக்காரர்களே!
நீங்கள்
பிரதான நடனத்துக்கு இடை இடையே நடமாடும்
கோமாளி நடன மங்கைகளே.
அந்தப்புரத்தில் சேர்க்கப்பட்டாலும்
அழுக்குத் துணி துவைக்க மட்டுமே பயன்படுத்தப்படுவீர்கள்.
உங்களின் இந்த கலைநயம் மிகுந்த அடவுகள்
ஒரு கட்டத்தில் அவர்களுக்கு சலித்துப்போகையில்,
புனித வசனங்கள் பொறிக்கப்பட்ட பளபளக்கும் வாள் கொண்டு
ஒரே வீச்சில் உங்கள் தலையைக் கொய்து எறிவார்கள்.
உங்களுக்கு அப்போதுதான் உண்மை புரியவரும்.
கொய்யப்பட்ட உங்கள் தலையில் இருக்கும் மை தீட்டிய விழிகள்
உங்கள் நடனக் கலையின் இறுதி அசைவுகளை
புருவம் உயர்த்தி, விழிகளை அசைத்து வெளிப்படுத்தியபடி
ஒரு சொட்டு கண்ணீருடன் மெள்ளக் கண் மூடும்.
அதற்கு முன்பாக அந்தக் கண் மட்டத்தில்
இதற்கு முன் வெட்டி வீழ்த்தப்பட்ட தலைகள்
கலைந்த நெற்றிச்சுட்டியுடனும்
அழிந்த செஞ்சாந்து உதடுடனும்
அலங்கோலமாக விழுந்து கிடப்பதை
ஒரு நொடி பார்க்கவும் செய்யும்.
ஒருவேளை உங்கள் நடுநிலை நடனமே
உருண்ட இந்தத் தலைகளை முன்பே பார்த்ததால்
உருவானது தானா…?
இப்போது உங்கள் மீதான வெறுப்பு
பரிதாபமாக மாறுகிறது நடுநிலை நடனக்காரர்களே!
உங்களின் நடுநிலையான இந்த அடவுகளின் அடியில்
மிக மெளனமாக, அடி ஆழத்தில் இருந்து
ஒரு மிக மெல்லிய கேவல்
பாலைக்காற்றில் அலைகிறதா?
கேட்கும் செவி ஒன்றைத் தேடி
காதருகில் கை குவித்துச் செய்யும்
மிக நுட்பமான அசைவு
மீட்சிக் குதிரைகளின் காலடியை
எதிர்நோக்கிக் குவிகிறதா?
அலைபாயும் கருவண்டுக் கண்கள்
பாலை இருளில் தூரத்துத் தீப்பந்தப் புள்ளிகளைத் தேடுகின்றனவா?
வானுயர நீளும் வளைக்கரங்கள்
எட்டாத தொலைவுக்கும் எட்ட வேண்டும்
அதன் பொன்னொளி என்று உயருகின்றனவா?
மிக ஏக்கமான ஒரு அபிநயம்,
மிக ஆழமான ஒரு இதயத் துடிப்பு,
கண் எட்டும் தூரம் வரையிலும் தென்படாத
தர்மத்தின் காவலர்களை நோக்கித் துடித்துக் கொண்டிருக்கிறதா?
ஐயகோ…
உங்களையும் சேர்த்துத்தான்
மீட்டாக வேண்டும் இல்லையா?
எந்தையே… அம்மையே…
விரைவில் மீட்கப்படட்டும்-
இந்தப் பரிதாபத்துக்குரிய
நடுநிலை நடனக்காரர்களும்
அவர்களுடைய
அதி பரிதாபத்துக்குரிய நடனமும்.
அனலிடைப் புழுவின் துடிப்பு
அது விரும்பி ஆடும்
ஆனந்த நடனமா என்ன?
$$$