உருவகங்களின் ஊர்வலம் – 6

-பி.ஆர்.மகாதேவன்

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில்  சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #6

6. அன்பின் வரிகள் கிடைக்குமா?

வெறுப்பின் சந்தையில்
அன்பின் கடை திறக்கப் போகிறேன்.
உலகோரே சொல்லுங்கள்…
என் கடை முகப்பில்
எந்த வாசகத்தை எழுதி வைக்க?

என் ’நெருக்கடி நிலை புகழ்’ பாட்டி
இம் என்றால் மிசா
ஏன் என்றால் 356 என செயலிலும் காட்டிய
அன்பின் வரிகளை ஆணி அறைந்து மாட்டவா?

ராணுவ ஷூ கால்கள் மிதிக்கும் பொற்கோவில்
அழகிய பின்னணிச் சித்திரமாக வைக்க உகந்தது அல்லவா?

*

‘பெரு மரங்கள் விழும்போது
நிலம் கொஞ்சம் அதிரத்தானே செய்யும்?’
என்ற பெருங்கருணை வாக்கியம்
அதனினும் அற்புதமானதன்றோ?
அதை முகப்பில் பொறித்துவைக்கவா?

*

என் புதிய பகுத்தறிவு ஆசான்
‘பாம்பை விட்டுவிடு; பார்ப்பானை அடி’ என்று
பேரன்புடன் சொன்னானே!
அதை எப்படியும் எழுதி வைத்துத்தானே ஆக வேண்டும்?
(முதல் அடி எனக்கு விழுந்தாலும்
கொள்ளைக்காக எதையும் தாங்கித் தானே ஆக வேண்டும்?)

‘இந்த திராவிட முட்டாளை
பைத்தியக்கார விடுதிக்குள் பிடித்துத் தள்ளு’ என்று
என் கொள்ளுத்தாத்தா சொல்லியிருந்தாலும்,
கடை தொடங்கும் நாளுக்கான
அழைப்பிதழ் நோட்டீஸில்
‘கடவுளைப் பரப்புபவன் காட்டுமிராண்டி’ என்ற
கண்ணியமான வாக்கியம்
இடம்பெற்றே தீர வேண்டுமன்றோ?

*

காஃபிர்களைக் கொல்பவர்
அவர்களுக்கு சுவனத்தின் கதவுகளையன்றோ திறந்துவைக்கிறார்;
பிற மதப் பெண்டிரைப்போல
சொந்த மதப் பெண்டிரும் உன் அடிமையே என்று
எல்லையற்ற அருளாளன்
சொல்லாமல் சொன்னதையெல்லாம்
சித்திரப் பொன்னெழுத்துகளில் பொறித்துத் தொங்கவிடாவிட்டால்
அன்பின் கடை திறப்பதற்கு
அர்த்தமே இல்லாமல் போய்விடுமே!

*

என் கடையில் மட்டுமே பொருட்களை வாங்க வேண்டும்
அடுத்த கடைக்குப் போனால்
அங்கேயே சமாதி கட்டுவேன் என்பதை
அன்பில் தோய்த்து அனைவருக்கும் புரியவைக்க
‘நானே வழி நானே சத்தியம் நானே மீட்பர்…
நான் உன்னுடன் இருந்து செய்பவை
அதி பயங்கரமானவையாக இருக்கும்…
அவிசுவாசிகளுக்கு நரகம் சமீபித்திருக்கிறது’
என்ற புனித வாசகங்களைவிட்டால்
வேறு எது இந்த உலகில் உண்டு?

இவற்றை கடைச் சிப்பந்திகளின் சீருடையில்
பொறித்தே தீரவேண்டும் அல்லவா?

*

சுவர் விளம்பரத்தில்
செங்கொடியின் சித்திரம் வரைவதுதானே
சிறப்பானதாக இருக்கும்?
அதற்கு
பாட்டாளிகளின் ரத்தத்தையே பக்கெட்டில் பிடித்து
கதிர் அரிவாளால் வெட்டி எடுத்த கையையே தூரிகையாக்கி
தத்ரூபமாக வரைந்துகொடுக்க
அவர்களை விட்டால் யாரால் முடியும்?

நினைத்துப் பாருங்கள்…
கடையில் தென்படும் சிவப்பெழுத்தெல்லாம்
தொழிலாளர்களின் ரத்தம் கொண்டு
தீட்டப்பட்டதோர் அன்பின் கடையை!

அதில் நுழைந்தாலே,
ஏன் அந்த அங்காடித் தெருவில் நுழைந்தாலே,
அந்த ரத்தத்தின் நறுமணம் உங்களை அப்படியே
ஓநாய் போல் மோப்பம் பிடித்தபடி வரவைத்துவிடாதா என்ன?

இன்னும் ஏதேனும்
அன்பின் வரிகள் உங்களுக்குத் தெரிந்தால்
அனுப்பிவையுங்கள்!

நான் ஜனநாயகவாதி என்பதை
நாங்கள் கலைத்த ஆட்சியின் தலைவர்களே சொல்வார்கள்.

எங்கள் ஷூ கால்களால் மிதிக்கப்பட்ட அரசியல் தலைவர்களே
ஷூவைப் பளபளப்பாக்குவதை நிறுத்திவிட்டு
எழுந்து நின்று
சைடு வாங்கிய உதடுகளால்
சத்தம் போட்டு முழங்குவார்கள்.

பிரிவினை மீதான நஃப்ரத் நிலவும்
சுதேசி பாஸார் மேம்.
தீவிரவாதத்தின் மீதான மொஹபத் கொண்ட
விதேசி தூகான்.
ஜல்தி ஹி,
துபாரா குல்னா ஹை.
விரைவிலேயே சரியான
வாசகத்தை எழுதி அனுப்புங்கள்.

ஒரே ஒரு அன்பின் வாசகம் மட்டும் இருந்தால்
உடனேயே எழுதி விடுவோம்.
அத்தனையும் அன்பின் வாசகங்களாகவே இருப்பதால்
எதைப் பொறிக்க என்று குழம்பித் தவிக்கிறோம்.

ஒரே ஒரு விஷயத்தை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்-
//இந்தக் கடைக்கு யார் வேண்டுமானாலும் செல்லலாம்
ஆனால் ஒருவராலும் உயிருடன் திரும்பிச் செல்ல முடியாது//
என்று எதிர்க்கடையில் எழுதிப் போட்டிருப்பதை மட்டும்
நம்பிவிடாதீர்கள்.

எங்கள் அன்புக்கு
கால் தூசிக்குப் பெற மாட்டார்கள் அவர்கள்.

உலகின் ஒரே அன்பின் கடை எங்களுடையதே
எமக்குக் கிளைகள் கிடையாது.

நாங்கள் சொல்வதைக் கேட்டால்
மேலே சொல்லியிருப்பதுபோல அன்பு காட்டுவோம்
இல்லாவிட்டால்
சொல்லியிருக்காத வகையிலும் அன்பு காட்டுவோம்.

எங்களுக்கு அன்பு காட்டுவதைத் தவிர
வேறு எதுவுமே தெரியாது.
எனவே
எந்தக் கடைக்குப் போனாலும்
Beware of Our Mohabbath.

$$$$

Leave a comment