எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #5

5. ரத்தமே அதன் திலகம்
நீங்கள் புதிய உலகின் கனவான்கள்.
உங்களுக்கான துரோகங்கள் ஏற்கனவே
உங்கள் முன்னோர்களால் செய்யப்பட்டுவிட்டன.
(அதாவது அந்தத் துரோகம் செய்தவர்களையே
உங்கள் முன்னோர்களாகக் கருதுகிறீர்கள்).
நீங்கள் இலவம் பஞ்சாக மிதக்கிறீர்கள்.
உங்களின் சுமைகளை
நீங்கள் ஏற்கெனவே அடுத்தவர் மேல் சுமத்தியாயிற்று.
அதி வெண்மையான உடை அணிந்து கொண்டிருக்கிறீர்கள்.
ரத்தக் கறைகள் எல்லாவற்றையும்
புதிய ஆடையால் போர்த்திக்கொண்டு விடுகிறீர்கள்.
நீங்கள் அதி மென்மையான வார்த்தைகள் பேசுகிறீர்கள்.
நீங்கள் ஆக்கிரமித்த விளைநிலங்களை
உங்கள் பெயருக்கு
சட்டபூர்வமாக மாற்றிக் கொண்டாயிற்று.
முள் வேலிகளும் போட்டாயிற்று.
அத்தனை அரங்குகளிலும்
அதி முன் வரிசை உங்களுக்கே.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம்
அன்பின் வார்த்தைகளை
மிக மெதுவாக
மிகுந்த கனிவுடன் பிரசங்கிப்பது மட்டுமே!
*
யாரையும் பகைக்க வேண்டாம் என்கிறீர்கள்.
ஏனென்றால் பகைவெறி கொண்டு
நீங்கள் செய்ய வேண்டிய அனைத்தையும்
ஏற்கெனவே செய்துவிட்டீர்கள்.
இப்போது உங்கள் மீது
ஒருவரும் பகைமை கொள்ளாமல் இருப்பதே
உங்களுக்கு நல்லது என்பதால்,
பகைமை தவிர் என்கிறீர்கள்.
நட்புப் பாராட்டியிருக்க வேண்டிய எங்கள் மீது
பகைமை பாராட்டிய நீங்கள் சொல்கிறீர்கள்-
பகைமை பாராட்டும் உங்கள் மீது
நாங்கள் நட்பு பாராட்ட வேண்டுமென்று!
*
ஆயுதங்களைக் கீழே போடுங்கள் என்கிறீர்கள்.
கோட்டைகள் பலவும் உங்கள் வசமாகிவிட்டன.
எஞ்சியவையும் வெகு விரைவில்
உங்கள் வசமாகப் போகின்றன.
யாம் ஏந்தும் ஆயுதம் இழந்ததை மீட்கவும்
இனி இழக்காமல் இருக்கவுமே.
ஆனால்,
போர் நிறுத்த அறிவிப்புகளும்
அமைதிப் பேச்சுவார்த்தைகளுமாக
நீளுகின்றன உங்கள் ராஜ தந்திரங்கள்.
உங்களுடைய அடுத்த தாக்குதல் வரை இந்த
அமைதிப் புறாக்களை அனுதினமும்
பறக்கவிட்டுக் கொண்டேதான் இருப்பீர்கள்.
*
எப்போதுமே நேர்மறை எண்ணங்களுடன்
இருக்கும்படி போதிக்கிறீர்கள்.
ஏனென்றால்
எங்களைப் பற்றி அத்தனை எதிர்மறையையும்
எங்கள் வரலாறாகவே எழுதி முடித்துவிட்டீர்கள்.
எவ்வளவு சிறப்பு இல்லையா?
எங்களைப் பற்றி நாங்கள் சொல்லும் அனைத்துமே
எதிர்மறையாகவே இருப்பதால்
நீங்கள் புதிதாக இனியும் எதையும்
எதிர்மறையாகப் பேசத் தேவையில்லை.
அன்பு, அமைதி, சாந்தி, சமாதானம்.
*
தொடர்ந்துவரும் ஒளியைப் பற்றி,
கருணையின் பிடிவாதம் பற்றி,
நீங்கள் கனிந்துருகலாம்.
ஆனால்
நாங்கள் எவ்வளவு ஓடினாலும்
விடாமல் துரத்தப்படுகிறோம்.
ஆநிரைக் கூட்டத்தைத் துரத்தும்
ஓநாய் மந்தை தளர்வதே இல்லையே!
முன்பு போல ஆநிரைக்குள் பாய்ந்து
கதறக் கதறக் கிழித்துக் கொல்வதில்லை.
இப்போது ஆநிரைக் கூட்டத்துக்குள் புகுந்துவிட்டன-
தூக்கத்தில் குரல்வளையைக் கடித்து
சத்தமே எழாமல் கொன்று தின்னவும் பழகிவிட்டன ஓநாய்கள்.
அக்கிரமத்தின் பிடிவாதம் அது.
அதை நீங்கள் பேச மாட்டீர்கள்.
வெதுவெதுப்பான குருதியின் கசடுகளும்,
மிஞ்சியிருக்கும் சதை ஒட்டிய எலும்புகளும்,
உங்கள் பக்கமும் வீசப்படுகின்றன, இல்லையா?
*
நாங்கள் எவ்வளவு ஒதுங்கினாலும்
குறிவைத்துத் தாக்கப்படுகிறோம்.
அராஜகத்தின் பிடிவாதம் அது.
அந்த வலியை நீங்கள் பாட மாட்டீர்கள்.
உங்கள் எஜமானருக்கு அது பிடிக்காது இல்லையா?
*
நாங்கள் எவ்வளவுதான் விலகிச் சென்றாலும்
செல்லும் இடமெல்லாம் கட்டம் கட்டப்படுகிறோம்.
அநீதியின் பிடிவாதம் அது.
அந்த சோகத்தை உங்கள் இசைக்கருவிகள் இசைக்காது.
உங்கள் புரவலர்களுக்கு அது பிடிக்காது அல்லவா?
*
நாங்கள் எவ்வளவுதான் குனிந்தாலும்
கொட்டப்பட்டுக்கொண்டே இருக்கிறோம்.
அடக்குமுறையின் பிடிவாதம் அது.
நீங்கள் தடுக்க முயற்சி செய்ய மாட்டீர்கள்.
உங்களையும் குட்ட ஆரம்பித்துவிடுவார்கள் என்று
உள்ளூர ஓடுகிறது ஒரு பயம், இல்லையா?
நல்லது
யார் மூழ்கினால் என்ன,
நாம் கரையேறினால் போதாதா?
நீரில் மூழ்குபவனின் தத்தளிப்புகளை
கேன்வாஸில் தத்ரூபமாக
நடுங்கும் கோடுகள், உறையும் வண்ணங்கள் கொண்டு
உயிரோவியமாகத் தீட்டிவைத்தால் போதாதா என்ன?
அதற்கு
மூழ்கடிப்பவனின் கரையானாலும் என்ன,
அதில் ஏறி நிற்பதுதானே
நமக்கும் நல்லது; நம் கலைக்கும் நல்லது?
அதிலும் மூழ்கடிப்பவனையே
மூழ்குபவனாகச் சித்திரித்துவிட்டால்
இன்னும் சிறப்பு.
வரலாற்று ஆவணக் காப்பகப் பொறுப்பும்
சேர்த்துத் தரப்படும்.
*
உங்கள் காதலை ஏற்றுக்கொண்டால்
எங்கள் மதம் மட்டும் கொல்லப்படும்.
இல்லையென்றால்
நாங்களுமே சேர்த்துக் கொல்லப்படுவோம்.
உங்கள் கருணையை ஏற்றுக்கொண்டால்
எங்கள் குல தெய்வம் மட்டும் கொல்லப்படும்.
இல்லையென்றால்
நாங்களுமே சேர்ந்து அழிய வேண்டியதுதான்.
நாங்கள் எவ்வளவோ எதிர்த்து நிற்கிறோம்
என்றாலும்,
எங்கள் தற்காப்பு நடவடிக்கைகளுக்காகவே
கூடுதலாகத் தாக்கவும் படுகிறோம்.
அந்த வேதனையை
உங்கள் கேமராக்கள் காட்சிப்படுத்தாது.
விருதுகள், அங்கீகாரங்கள் கிடைக்காமல் போய்விடும் அப்படித் தானே?
*
நாங்கள் எவ்வளவுதான்
துரத்தப்பட்டாலும்,
தாக்கப்பட்டாலும்,
கட்டம் கட்டப்பட்டாலும்,
கொட்டப்பட்டாலும்,
அனைத்தையும் தாங்கிக்கொண்டு
வாழக் கற்றுக் கொண்டுவிட்டோம்.
இத்தனைக்குப் பின்னரும்
எங்கள் பக்கம் பேச
யாருமே இன்று இல்லை என்பதைக்கூடப்
பொறுத்துக் கொண்டுவிட்டோம்.
ஆனால்… ஆனால்…
எங்கள் முன்னால் நின்றுகொண்டு
நீங்கள்
கருணையைப் போதிக்கிறீர்கள் அல்லவா?
அதைத்தான் தாங்க முடியவில்லை.
எங்கள் காதுபட நீங்கள்
ஒளியைப் பற்றிப் பேசுகிறீர்கள் அல்லவா?
அதைதான் கேட்க முடியவில்லை.
கசாப்புக் கடைக்காரன்கூட உங்கள்
கவிதைகளில் துடிக்கும் பறவைக்காகக் கண்ணீர் மல்குகிறான்
என்று உருகுகிறீர்கள் அல்லவா?
அதைத்தான் சகிக்க முடியவில்லை.
உங்கள் எஜமானர்களுக்கு
மாய காம உறுப்புகளை மாட்டிக்கொண்டு
வாஸலின் தடவிக்கொண்டு நின்று கொடுக்கும் உங்கள் மலினம்
அம்பலப்பட்டு ஆண்டுகள் பலவாயிற்றே,
இன்னும் என்ன அசட்டு இறுமாப்பு?
*
எங்கள் வேதனைகள்
எந்த நவீன காவியங்களிலும் இடம்பெறுவதில்லை.
எங்கள் கண்ணீர்
எந்த நவீனக் கவிமனதையும் நனைக்கவில்லை.
எங்களுக்காக,
எங்கள் தரப்பில்
தற்காப்புக்கா,க
மிக மிக அரிதாக ஆயுதம் ஏந்துவதையும்,
அஹிம்சா மூர்த்திகள்
ஆயுதக் கிடங்கு எஜமானரின்
அலங்காரப் படகு வீட்டில் அமர்ந்துகொண்டு
ஐஸ் கட்டிக்குப் பதிலாக
பனி மலை நதி நீரை
மதுக் கிண்ணத்தில் கலந்து குடித்துக்கொண்டு
அறச்சீற்றம் கொள்கிறீர்கள்.
எதிரியின் தாக்குதலைவிட
இதுவே அதிக வலியைத் தருகிறது.
அருகில் நின்று கொண்டிருப்பவராலேயே
ஆவேசத்துடன்
முதுகில் குத்தப்படும் குறுவாள் அல்லவா?
*
காலம் ஒரு கவிதையை அதன்
கவித்துவ வரிகளுக்காக மட்டுமே
தன் மடியில் அள்ளி எடுத்துக்கொண்டுவிடுமா?
காலம் ஓர் ஓவியத்தை
அதன் கலை அழகுக்காக மட்டுமே
அரவணைத்துக்கொண்டுவிடுமா?
வரலாற்றின் எந்தத் தருணத்தில்
எத்தனை துரோகங்களுக்குப் பின்
எத்தனை ஒடுக்குமுறைகளுக்குப் பின்
எத்தனை வன்முறைகளுக்குப் பின்
எத்தனை கைவிடல்களுக்குப் பின்
யார் பக்கம் இருந்துகொண்டு
யாரைப் பார்த்து என்ன சொல்கிறது
என்பதைப் பொருட்படுத்தவே செய்யாதா?
செய்யும்.
எது போலியாகப் புல்லரிக்கிறது?
எது பொக்காகப் புளகாங்கிதமடைகிறது?
எது எந்த அரசியலைப் பேச மறுக்கிறது?
எது செளகரியமான இடத்தில் அமர்ந்துகொண்டு
சாதுரியமாக அறம் பேசுகிறது?
எல்லாம் எல்லாம் அதற்குத் தெரியும்.
உலகோர் காதில்
நாராசமாக விழுந்து தொலைக்கிறதே தவிர
காலம் இந்தப் பொக்கான வரிகளை
எளிதில் புறக்கணிக்கவே செய்யும்.
நளினமாக மிதக்கிறதே என்று
செத்தைகளை நீண்ட காலம் மிதக்க வைக்காது.
தன் குலம் அழிக்கப்படுவது கண்டு
பூர்வ குடி மூப்பன்
மண் வாரித் தூற்றும் சாபங்களை,
அது அன்பைப் பேசாவிட்டாலும் –
நேர்மறையாகப் பேசாவிட்டாலும்-
கருணையை விதந்தோதாவிட்டாலும்-
ஒளியைப் புகழாவிட்டாலும்-
விரக்தியை வெளிப்படுத்தினாலும்-
கச்சாவாக இருந்தாலும்-
அதில் இருக்கும் சத்தியத்துக்காகத் தூக்கிப் பிடிக்கும்.
மலையுச்சியில் மண்ணுலக சூரியனாகத் தகித்தபடி
தலைமுறைகள் தாண்டி வழிகாட்டும்.
வழியில் நடப்பவற்றையெல்லாம் காட்டும்
(பெருமிதத்துக்குரிய விஷயமில்லைதான்)
நவதுவாரங்களிலும் விந்து ஒழுக
மாரிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு
புழுதியில் புரண்டு பிதற்றித் திரியும்
இளம் பழங்குடிப் பைத்தியக்காரியின் வார்த்தைகள்
அவளுடையவை அல்ல.
என்றாலும்
அது காலவெளியில் முடிவற்று எதிரொலிக்கும்.
(இதுவும் பெருமைப்பட வேண்டிய விஷயமில்லைதான்).
நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட
கலை நயம் மிகுந்த குறுவாள்
அருங்காட்சியகக் கண்ணாடிக் கூண்டுக்குள்
சாதுவாக அமர்ந்திருக்கலாம்.
ஆனால் அது
அதற்கான குருதிகளைக் குடித்து முடித்துவிட்டது
பூர்வ குடி இளைஞன்
வேலிப்படலில் இருந்து உருவி அடிக்கும் கருக்கு மட்டையில்
இப்போதும் சொட்டிக் கொண்டிருக்கின்றன ரத்தத் துளிகள்.
அது காவல் தெய்வத்தின்
கையில் இருக்கும் ஆயுதம் போன்றது-
பளபளக்காது –
அலங்காரமாக இருக்காது-
ஆனால் அது வெட்டிக் கொண்டே இருந்தாக வேண்டும்.
இருப்பதும் கைவிட்டுப் போகாமல் இருக்க
இப்போதும் அது வீசப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.
கண்ணாடிப் பேழை உடைக்கப்பட்டு
ரத்தினங்கள் பதிக்கப்பட்ட குறுவாளை உடைத்து எறியும்வரை
அதற்கு ஓய்விருக்காது.
ஓயக்கூடாது.
ரத்தமே அதன் திலகம்.
சத்தியமே அதன் கலை.
ஆக்ரோஷமே அதன் அரசியல்.
அவநம்பிக்கையே அதன் விதி.
எதிர்ப்பே அதன் இருப்பு.
$$$