-பி.ஆர்.மகாதேவன்
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #3

3. அந்த உத்தரவாதம்…
ஓர் இனிய இரவில்
அந்தக் குரல்
காவலரின் கண்டிப்புடன் சொன்னது –
‘கணக்கில் வராத கள்ளப்பணம் முழுவதும்
இந்த நொடியிலிருந்து
வெறும் காகிதமாகிவிடும்’.
தேசம் ஸ்தம்பித்து நின்றது
சிறிது நேரம்தான்.
பிறகு சாலைகளில் மக்கள்
இரண்டாம் சுதந்தரக் கொண்டாட்டம் போல
ஆடிப் பாடத் தொடங்கினார்கள்.
*
இன்னொரு இனிய நன்னாளில்
அதே குரல்
மருத்துவரின் நேசத்துடன் சொன்னது-
‘நாடு முழுக்க ஊரடங்கு
யாரும் வெளியே வராதீர்கள்’.
தேசம் ஸ்தம்பித்தது
கொஞ்ச நேரம்தான்.
உலகமே முடங்கிய உண்மை புரிந்தது.
பிறகு அடையாள அட்டை இருந்த அத்தனை பேரும்
பத்திரமாக ரயிலில் ஏறி
பாதுகாப்பாக வீடு சென்று சேர்ந்தார்கள்.
தொட்டடுத்த தேர்தலில் அத்தனைபேரும்
அன்னாருக்கு வாக்களித்து வெற்றிபெறவும் செய்தனர்
(ஊடுருவல்காரர்களை வைத்து
ஃபோட்டோ சூட் நடத்தியவர்களுக்கு
நடுவிரலும் காட்டினர்).
*
இன்னொரு இனிய மாலையில்
அந்தக் குரல்
தந்தையின் கனிவுடன் சொன்னது-
‘ஏழை எளிய மாணவச் செல்வங்களும்
இனிமேல் மருத்துவராகலாம்’.
அப்பாவி அனிதாவுக்கு
அடுத்த பல வாய்ப்பு இருந்தது தெரிந்திருக்கும்.
அந்த நுழைவுத் தேர்வுக்கு முன் அந்தப் படிப்பை
காசு கொடுக்காமல் கனவில் கூட படிக்க முடிந்திருக்கவில்லை.
அவளுக்கு அதுவும் தெரிந்திருக்கும்.
அவளுடன் படித்தவர் பலரும்
அப்போதே கல்லூரியில் சேர்ந்திருந்தனர்.
அதுவும் அவளுக்குத் தெரிந்து தானிருக்கும்.
ஆனால்,
ஒரு காட்டுமிராண்டிக் கும்பல்
அவளை நரபலி கொடுக்கத் தீர்மானித்திருந்தது.
நாலைந்து தலைமுறையாக அந்தக் கும்பல்
அதைத்தான் செய்துவந்தது.
பலிபீடத்தில் அவளைத்
தரதரவென இழுத்துவந்து நிறுத்தியது.
இம்முறை அதி நுட்பமாக அந்தக் கும்பல்
ஒரு தற்கொலையைச் செய்தது.
நீங்கள் யாராவது நடத்தும்
ஏதாவது மருத்துவக் கல்லூரியிலாவது
இடம் கொடுங்களேன் என்று
அவள் கழுத்தில் கயிறு விழும் முன் மன்றாடியிருப்பாள்.
அடுத்த தேர்வில் தேர்ச்சி பெற்று
அசத்திக் காட்டுகிறேன் என்று
கயிறு இறுகும் முன் கெஞ்சியிருப்பாள்.
வேறு படிப்பாவது படித்துக் கொள்கிறேனே என்று
ஸ்டூல் தட்டிவிடப்படும் முன் கதறியிருப்பாள்.
மங்கலான அரிக்கேன் விளக்கு
எரிந்துகொண்டிருந்த குடிசையில்,
சுவரில் பெருநிழல் எழுப்பியபடி
சுற்றி நின்ற கறுப்பர் கூட்டம்
அவளை ‘டாக்டர்’ அனிதாவாக
ஆக்க முடிவு செய்திருந்தது.
செய்துவிட்டார்கள்.
யாருக்கும் எதுவும் மறந்திருக்கக் கூடாது.
நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவருக்கு
நயா பைசா கொடுக்காமல் இடம்
என்ற தந்தையின் குரல்
அனிதாவின் காதில் தேனாகத்தான் பாய்ந்திருக்கும்.
அமிலமாக ஊற்றிவிட்டது அரக்கக் கும்பல்.
மீட்சிக் கயிறையே சுருக்குக் கயிறாக்கிவிட்டார்கள்.
அறுபது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட திராவிட ஆட்சியில்
காசு கொடுக்காமல் முதல் முறையாக
மருத்துவக் கல்வி பெற்ற
அனிதாவின் தோழிகளிடம்
இந்தக் கும்பல் சிகிச்சைக்குச் செல்ல வேண்டும்.
ஸ்ரிஞ்சில்
சின்னஞ் சிறிய காற்றுக்குமிழி வரவைக்க தெரிந்திருக்காதா
ஸ்நேகிதிகளுக்கு?
ரத்த ஓட்டத்தைத் தடுத்து
பக்கவாதம் வர வைத்து
படுக்கையில் தள்ள அது போதாதா..?
ரத்த நாளம் வெடித்து
அனிதா இறந்தது போலவே
துடிதுடித்து இறக்கவைக்க அது போதாதா?
ஓர் இயற்கைக் கொலை
அது நடக்க வேண்டும்
அனிதாவின் ஆன்மாவுக்கு
அப்போதுதான் அமைதி கிடைக்கும்.
*
காவலரின் கண்டிப்புடன்,
மருத்துவரின் நேசத்துடன்,
தந்தையின் வாஞ்சையுடன் பேசிய
அந்தக் குரலை
ஒரு சிலருக்குப் பிடிக்கவில்லை.
ஒற்றை உத்தரவால்
யாவற்றையும்
துலங்கச் செய்திருந்ததல்லவா அந்தக் குரல்?
ஒற்றைச் சொல்லால்
யாவற்றையும்
செழிக்கச் செய்திருந்தல்லவா அந்தக் குரல்?
உலகமே உற்றுக் கேட்ட
மிக அன்பான குரல்.
உலகமே பார்க்க
காலில் விழுந்து வணங்கினார்கள்-
காலில் விழுந்து வணங்கும்
கலாசாரம் இல்லாத தேசத்திலும்
130 கோடி மக்களை
ஒற்றை மந்திரச் சொல்லால்
உன்னதம் நோக்கித் திருப்ப முடியும் என
செய்து காட்டிய குரல்.
காஷ்மீரை மீட்ட குரல்.
கச்சத்தீவைத் தாரைவார்த்த குரல் அல்ல…
உலகுக்குத் தடுப்பூசி தந்த உத்தமனின் குரல்.
சிகிச்சைக்கு வந்த முது மூதாட்டியின் விமானத்தை
தரையிறங்க விடாமல்
திருப்பி அனுப்பிய குருடனின் குரல் அல்ல…
விஸ்கி கிண்ணத்தில் மக்களைப்
பனிக்கட்டிகளாகப் போட்டு
துடிதுடித்துக் கரையும் வரை
நிதானமாக வேடிக்கை பார்த்துப் பருகும் முடவனின் குரல் அல்ல…
வாகனத்தில் செல்கையில்
நாய்க்குட்டி விபத்தாக வந்து மாட்டிக் கொண்டால்கூட
வருந்தும் நபரின் குரல்.
*
உலகிலேயே பெரிய திமிர்
தன்னை நிரூபித்துக்கொள்ள
வேறு என்னதான் செய்ய முடியும்?
குருடனின் சுய மைதுனத்தை
ரகசியமாக ஒளிந்து பார்க்கும் குரூரக் கண்கள்
மெள்ள மூடிக்கொண்டன.
உலகமே இருண்டுவிட்டதென்று கூக்குரலிட்டது.
பின்னர்
மெள்ளக் கண் திறந்து பார்த்தது.
இருளில்,
களிப்பில்,
அந்தத் திமிரின் பற்கள் மின்னின.
யாருடையதோ என்பதுபோல
வழக்கம் போல் நாடகமாடியது.
ஆவியாக அலைந்துகொண்டிருந்த
அனிதாவின் குரல் மெள்ளச் சொன்னது –
துரோகியே, வாயை மூடு.
பார்வதி அம்மாவின் குரல் மெள்ளக் கேட்டது:
இன்னொரு முறை பார்க்க வேண்டுமா அந்தப் பற்களை?
நன்கு பார்த்துக்கொள்
உன் உதடுகளுக்குள்தான் அது
எப்போதும் இருந்துவருகிறது.
அந்த ரத்தக் காட்டேறியின் பல்லை உடைக்கிறேன்
அதன் கூர் கொம்பை முறிக்கிறேன் என்று
அந்தக் குரல்
உறுதியாக உத்தரவாதம் தந்திருக்கிறது.
அனிதாக்களுக்காக
பார்வதி அம்மாக்களுக்காக
அந்த கேரண்டி நிறைவேறியாக வேண்டும்.
$$$