குருமணியின் தாள் போற்றி!

-இசைக்கவி ரமணன்

கொல்கத்தா, பேலூரில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண மடம் மற்றும் இயக்கத்தின் தலைமையகத்தில், அதன் 17வது அகில பாரத தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும், பூஜ்யஸ்ரீ சுவாமி கௌதமானந்த மஹராஜ் (95) அவர்களுக்கு இசைக்கவி அவர்களின் வாழ்த்துப்பா இது...
சுவாமி கௌதமானந்த மஹராஜ்

கனிந்தமனம், கனிந்தமுகம், கனிந்த சொற்கள்;
. கற்பகத்து மரத்தைப்போல் களைப்பி லாமல்
மனிதர்கள் அனைவருக்கும் மாரி போல
. மாற்றமின்றி அன்புடனே அருளே பெய்யும்
முனிவரிவர் திருவடிக்கு முந்துகின்றோம்!
. முப்போதும் மூவரினை முனைந்து போற்றும்
தனிச்சுடரை, பலதீபம் தந்த தீயை,
.தாள்பணிந்து நன்றிசொல்லித் ததும்பு கின்றோம்! 1

வானென்றும் வயதாகித் தளர்வதில்லை;
.வற்றாத தமிழுக்கு மூப்புமில்லை;
தேனென்றும் தனதினிமை இழப்பதில்லை;
.தெய்விகத்தில் இளமையில்லை, முதுமையில்லை;
தானென்றும் தனைப்பொருட்டாய்க் கருதிடாமல்
. தாரணியின் நலமொன்றே தவமாய்க் கொண்டார்!
ஞானகுரு வாழ்கவென்று வாழ்த்துகின்றோம்,
.நாளெல்லாம் அவர்பதமே சூடுகின்றோம்! 2

ஐயனேஎம் நெஞ்சில் நீர் நிறைந்திருப்பீர்!
.அன்புநெஞ்சில் நாங்களெல்லாம் அடங்கி வாழ்வோம்!
மெய்யனே நீர் நடந்ததனால் விளைந்த பாதை
.மெல்லமெல்லக் குழந்தைகளாய்த் தொடர்ந்து செல்வோம்!
துய்யனே நீர் ஒளிவிளக்கு, உம் ஒளியினாலே
.ஊரெங்கும் ஒருகோடித் திருவிளக்கு!
கையிரண்டும் தலைவைத்து வணங்குகின்றோம்,
.கைம்மாறாய் என்செய்வோம்? கண்ணீர் தந்தோம்! 3

சொல்லாமல் துவாரகைக்குக் கண்ணன் சென்றான்;
.கோபியர்கள் ஒருகணமும் மறக்கவில்லை!
சொல்லித்தான் செல்கின்றீர், எங்கள் நெஞ்சைக்
.கொள்ளைதான் கொண்டுவிட்டீர்! மறக்க வேண்டாம்!
எல்லையிலாப் பரமஹம்சர், எங்கள் அன்னை,
.ஈடில்லா நரேந்திரரும் இணைந்த ஞானக்
கொல்லையிலே கோலோச்சப் புறப்படுங்கள்!
.குவலயத்தை உமதருளால் துலக்கிடுங்கள்! 4

குறிப்பு:

சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவராக இருந்த பூஜ்யஸ்ரீ சுவாமி கெளதமானந்த மஹராஜ் அவர்கள், அதன் அகில இந்திய தலைவராகத் தேர்வு பெற்று பேலூரில் பொறுப்பேற்கச் செல்வதற்கு முன், சென்னையில் (19.04.2024) நடைபெற்ற விழாவில் திரு. இசைக்கவி ரமணன் அவர்கள் பாடிய கவிதை இது…

$$$

Leave a comment